டிசம்பர் 5 ம் தேதிக்கு பிறகு பத்திர வடிவிலான பங்கு பரிமாற்றத்திற்கு தடை – செபி
No Transfer of Physical Shares after December 5, 2018 – SEBI
பங்குச்சந்தையில் மோசடி பரிவர்த்தனைகளை தடுக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி (Securities and Exchange Board of India) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பங்குகளில் முதலீடு மேற்கொள்ளும் முதலீட்டாளர்கள் தாங்கள் வாங்கும், விற்கும் பங்குகளை இரண்டு விதமான நிலைகளில் வைத்து கொள்ளலாம்.
பங்குகளை பத்திர அல்லது சான்றிதழ் வடிவிலான (Physical Shares) மற்றும் பத்திரமில்லா மின்னணு வகையில் (Dematerialised) என இரு வகைகளில் ஏதேனும் ஒரு நிலையில் முதலீட்டாளர்கள் தங்கள் பங்கு பரிவர்த்தனைகளை மேற்கொள்வர். முதலீட்டாளரின் நலனை கருத்தில் கொண்டு, பங்குச்சந்தையில் நிலவும் பத்திர வடிவிலான அனைத்து பங்குகளையும் வரும் டிசம்பர் 5, 2018 க்குள் மின்னணு முறையில் (Dematerialsied) மாற்றி கொள்ளுமாறு செபி அறிவுறுத்தியுள்ளது.
மேலும் செபி (SEBI) கூறுகையில், டிசம்பர் 5 க்கு பிறகான பத்திர வடிவ பங்கு பரிமாற்றத்திற்கு தடை செய்யப்படுவதாகவும், இது சார்ந்த சேவை நிறுவனங்கள் முதலீட்டாளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் கேட்டு கொண்டுள்ளது.
பத்திர வடிவிலான பங்குகள் கொண்ட முதலீட்டாளர்கள், ஈவு வருமானம் (Dividend Income) பெறுவதில் பெரும்பாலும் சிக்கல் எழுவதாக நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது முதலீட்டாளர்கள் தங்கள் முகவரி மற்றும் வங்கி கணக்கு எண்ணை மாற்றும் போது, நிறுவனங்களுக்கு தகவல் கிடைப்பதில் சிரமமாக உள்ளது.
டீமேட் கணக்கு வாயிலாக (Demat Account) முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை பராமரிப்பதன் மூலம், நிறுவனம் சார்ந்த தகவல்களை உடனுக்குடன் பெறலாம். டீமேட் மற்றும் பங்கு சார்ந்த புகார்களுக்கு முதலீட்டாளர்கள் செபி(SEBI) அல்லது NSDL, CDSL அமைப்புகளை கோரலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை