குப்பன், சுப்பன், கப்பன் – How the Bank Works
குப்பன், சுப்பன், கப்பன் மூவரும் பள்ளிக்கால நண்பர்கள்; அவர்களுக்குள் எப்போதும் ஒரு ஒற்றுமை உண்டு; தங்கள் அலுவலக விடுமுறை நாட்களில் சந்தித்து அரசியல் மற்றும் சினிமா விமர்சனம் செய்வதுண்டு. தினசரி நாளிதழளையும், தொலைக்காட்சி பெட்டியையும் அவர்கள் பொழுதுபோக்காக கொண்டிருந்தனர். குப்பன் ஒரு அறிவாளி; ஆனால் ஒரு செலவாளியும் கூட… எப்போதும் தன்னை மற்றவர்கள் அறிவாளியாக, புகழும்படியாக இருக்க ஆடம்பரமாக செலவும் செய்வான். சுப்பன் ஒரு மடச்சோம்பேறி. ஆனால் (பொருளாதாரம்) பண விஷயத்தில் மிகவும் கவனமுடன் இருப்பான். அவ்வளவு எளிதாக யாரும் அவனிடம் அவசர தேவைக்காக கூட பண உதவி பெற முடியாது. மற்றவர்களின் நிதி ஒழுக்கத்தை பார்த்தே பண உதவி செய்பவன். கப்பன் ஒரு சிறந்த சேவை மனப்பான்மை கொண்டவன்; குப்பன்,சுப்பனை விட அதிகம் படிக்காவிட்டாலும், நண்பர்களிடையே நல்ல உறவை காப்பவன்.
ஒரு சமயத்தில், குப்பனுக்கு தனது தொழிலுக்கான பணத்தை திரட்டுவதில் மிகுந்த நெருக்கடி; ஆதலால் தான் எங்கேனும் கடன் வாங்க முடிவு செய்தான்;நண்பர்களிடமும், உறவுகளிடமும் பண உதவி கேட்டான். சில நேரங்களில் அவனது அறிவாளித்தனமும் கடன் கேட்க முழுவதுமாக முயற்சிக்கவில்லை. அதனால், தனது நெருங்கிய நண்பர்களான சுப்பன், கப்பனிடம் கேட்டான். சுப்பனோ இவனை நம்பி பணம் தர தயாராக இல்லை. கப்பனிடமோ குப்பன் கேட்கும் அளவுக்கு பணமில்லை. இருந்தாலும் பண விஷயத்தில் சுப்பனுக்கும், குப்பனுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டு பேரும் நிதிக்கொள்கையில் சரியான ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவர்கள். அதனால், கப்பன் சுப்பனிடம் தனக்கு பண உதவி செய்யுமாறும், அதற்கு வட்டியும் வழங்குவதாக தெரிவித்தான். சுப்பனுக்கும் சந்தோசம் தான்.
அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டது; அதாவது ரூ. 1,00,000 /- க்கு 7 % வட்டியில் கடன் பெற்றதாக ! கப்பனை பொறுத்தமட்டில், ரூ. 1,00,000 /- என்பது ஒரு வைப்பு தொகையை போல !
தான் பெற்றுக்கொண்ட இந்த தொகையை குப்பனுக்கு, 10 % வட்டியில் கடனாக கொடுத்தான். தான் சுப்பனிடம் எவ்வாறு இந்த தொகையை வாங்கியதன் நிலையையும் சொன்னான்; எனவே கடனை நியாயமான முறையில் செலுத்தவும் அறிவுறுத்தினான். குப்பனும் ஏற்றுக்கொண்டான்; இதற்கும் ஒரு ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டது.
இப்போது, நம்மை பொறுத்தவரை குப்பன் ரூ. 1,00,000 /- ஐ 10 % வட்டியில் கடனாக பெற்றவன்; சுப்பன் ரூ. 1,00,000 /- ஐ 7 % வட்டிக்கு கடன் கொடுத்தவன். இடையில் உள்ள கப்பன் ஒரு இடைத்தரகராக செயல்பட்டுள்ளான். இதற்காக அவன் பெறும் சன்மானம் 3 % வட்டி வருமானம் (ரூ. 1,00,000 /- க்கு) !!! இந்த 3 % வருமானத்தை கப்பன் தனது சேவைக்காக பயன்படுத்தி கொள்வான்… சேவை கட்டணமோ 🙂
இவ்வாறாக தான் ஒவ்வொரு வங்கியும் செயல்படுகிறது; கடனாக கொடுக்க ஒருவரும், கடனாக பெற மற்றொருவரும் இருந்தால், அந்த இரண்டு பேரையும் இணைக்கும் பாலமாக வங்கி செயல்படும்; வட்டியில் ஏற்படும் வித்தியாசமே வங்கியின் வருமானமாகும் !
ஒரு நபர் ரூ. 100 /- ஐ வங்கிக்கு கடன் கொடுப்பதாகவோ (அ) வைப்பு தொகையாக கொண்டுள்ளார்(Lender) என்றால், அந்த வங்கி அவரின் 100 ரூபாயை மற்றொரு நபருக்கு சில வட்டி விகிதத்தில் (உதாரணம்: 10 %) கடனாக கொடுக்கும்; கடன் பெறுபவர்(Borrower) வட்டியுடன் தனது கடனை (ரூ. 100 + 10 = 110 /- ) வங்கிக்கு செலுத்துவார்; வங்கி அதனை பெற்று, கடன் கொடுத்தவர் / வைப்பு தொகை கொண்டவருக்கு சில வட்டி விகிதத்துடன் (ரூ. 100 + 7 = 107 /- ) திரும்ப கொடுக்கும்; மீதமிருக்கும் வட்டி வருமானம் (Interest Income)(ரூ. 10 – 7 = 3 /- ), வங்கியின் வருமானமாகும்….
இந்த வங்கியின் செயல்பாட்டை ஒழுங்குமுறைப்படுத்த, அண்ணாத்த “ பாரத ரிசர்வ் வங்கி “(RBI – Reserve Bank of India) உள்ளது.
ஆக, நாம் கடன் கொடுப்பவரா (அ) கடன் பெறுவாரா என்பது நம்மை பொறுத்த விஷயம்; ஆனால், நமது தேவைக்காக ‘கப்பன்’ (Bank) என்பவன் எப்போதும் தயாராக உள்ளான்…
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !