Tag Archives: work money for you

கற்று கொள்வதற்காக மட்டுமே வேலை செய்யுங்கள்: Work Money For you

கற்று கொள்வதற்காக மட்டுமே வேலை செய்யுங்கள்; பணத்திற்காக வேலை செய்ய உங்கள் வாழ்நாள் முழுவதையும் அனுமதிக்காதீர்கள்

Don’t work for Money; Make it work for You…

பத்திரிக்கைகளில், வேலை வாய்ப்பின்மை என்ற செய்தியை நாம் பரவலாக பார்த்திருப்போம்; இந்த பரவல் அரசியல் காரணமாக இருந்தாலும் அது ஒரு புறம் இருக்கட்டும். உண்மை என்னவெனில், கடந்த 20 வருடங்களில் அதற்கு முன்பிருந்ததை விட, இன்று நாம் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். படித்த படிப்புக்கு வேலை அமையா விட்டாலும், நாம் இன்று ஏதோ ஒரு வேலையை செய்வதற்கு தயாராக உள்ளோம்; உந்தப்பட்டும் உள்ளோம். முன்பு ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவரே வேலை பார்த்து வந்த நிலை இன்று அப்படி இல்லை. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெரும்பாலானோர் இன்று காத்திருக்கவும் தயாராக இல்லை. தொழில்களும் பெருகி விட்டன; நுகர்வோர்களும் அதிகரித்து விட்டனர்
அதனால், இன்றைய தொழில்நுட்ப உலகில் வேலை என்பது ஒரு கடினமான காரியம் அல்ல !  ஆனால்…
நாம் எல்லோரும் பணத்திற்காக மட்டுமே வேலை செய்ய பழகிவிட்டோம்; பணத்தேவைக்காகவே வேலைக்கும் செல்கிறோம். இன்று பணம் தான் நமது உடல் நலத்தை விட பிரதான விஷயமாக உள்ளது. நமது அடுத்த உந்துதலுக்கு அது தான்  துணையாக உள்ளது என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் அது தான் இல்லை ! பணம் ஒரு கருவி போல… அதனை முழுமையாக இயக்குவது நாம் தான். பணத்திற்காக நாம் ஒவ்வொரு விஷயத்தையும் அணுக ஆரம்பித்து விட்டதால், நல்ல உறவுகளை பேணுவதை கூட மறந்து விட்டோம். நாம் பணத்திற்காக வேலை செய்ய ஆரம்பித்து விட்டோம்; எதற்கு ?
அன்றாட அடிப்படை வசதிகளுக்கு, வருங்கால சந்ததியினருக்கு, சொத்து சேர்ப்பதற்கு, ஓய்வு காலத்திற்கு, மற்றவர்களை போல தோன்றுவதற்கு… சரி, இதற்காக நாம் எத்தனை காலம் உழைக்கப்போகிறோம் ??
நம் ஆயுள் முழுவதும் ?? இங்கு தான் நமது குறிக்கோள் மழுங்கி போய் (பொய்) விட்டது. மறுபடியும் இதே குறிக்கோளை தானே நமது சந்ததியினருக்கும் ஆயுள் முழுவதும் சொல்லி கொடுக்கிறோம். நாம் ஒன்றும் சூப்பர் ஸ்டாரின், “அருணாச்சலம்” (Rajini kanth’s Arunachalam Tamil Movie) படத்தினை போல “பணம்” எப்படி கையாள வேண்டும் கற்று கொடுக்கவில்லையே !  பணத்தினை கற்று கொடுக்க, கோடிகள் தேவையில்லை; சில பத்து, நூறுகள் போதும் 🙂
நீங்கள் உங்களது இளமையில் ஒரு வேலை தேடி, உழைத்து பணம் பண்ணுகிறீர்கள்; திருமணமாயிற்று; குழந்தைகள் வந்தன; அவர்களின் படிப்பு, வேலை, திருமணம்… இப்போது உங்களது ஓய்வு காலம் வந்து விட்டது !  உங்களது பொருளாதார தேவைக்காக(பாசத்திற்காக மட்டுமல்ல) உங்களது குழந்தைகளை நாடுவீர்கள். இல்லையென்றால், ஓய்வுக்கு பின்னும் பணத்தினை(வேலையை) தேடுவீர்கள்; இது முற்றிலும் ஒரு தவறான வாழ்க்கை முறையாகவே நான் கருதுகிறேன்.
எந்த தன்னலமில்லாமல் நமது தேச நலனுக்காக பாடுபட்ட ஆத்மாக்களை விடவும், நாம் சற்று சுயநலத்துடன் தான் திட்டம் போட்டோம். திட்டம் போட்டு பணத்திற்காக மட்டுமே உழைக்கவும் தயாரானோம். அதனால் தான் மீண்டும் சொல்கிறேன்…
 கற்று கொள்வதற்காக மட்டுமே வேலை செய்யுங்கள்; பணத்திற்காக வேலை செய்ய உங்கள் வாழ்நாள் முழுவதையும் அனுமதிக்காதீர்கள் !
தொழில்களை உருவாக்குங்கள்.
 
பணத்திற்காக உங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்காமல், பணம் உங்களுக்காக உழைக்குமாறு கற்று கொள்ளுங்கள்
உங்கள் பணம் உங்களுக்காக உழைப்பதற்கான குறிக்கோள் மற்றும் வாய்ப்புகள்:
 • உங்கள் குறுகிய மற்றும் மத்திம கால தேவைக்காக சேமிக்க துவங்குங்கள். அது எப்போதும் உங்களுக்கு ஒரு பொருளாதார சுதந்திரத்தை தரும். (Savings for Goals)

 

 • அவசர கால நிதி என்பதை ஒரு கடமையாக்கி கொள்ளுங்கள். (Create Emergency Fund)

 

 • உங்களது ஓய்வு கால வாழ்க்கையை (நிதியை) குறித்து முன் கூட்டியே திட்டமிடுங்கள். (Plan for the Retirement Earlier)

 

 • முடிந்தவரை உங்கள் கடன் சுமையை குறைத்து கொள்ளுங்கள் மற்றும் கடனில்லா வாழ்க்கை முறையை கவுரவியுங்கள். (Be on Low-Debt /Debt Free)

 

 • உங்களது அறிவை பணம் திரட்டும் செயலாக மாற்றுங்கள்; உங்களது  நண்பர்கள் குழு அமைத்து, ஒரு நேர்மையான மற்றும் புதுமையான தொழிலை செய்ய பழகுங்கள்; வேலை வாய்ப்பை ஏற்படுத்துங்கள்.(Entrepreneurship)
 • நல்ல ஆரோக்கியமான உறவுமுறைகளை உங்கள் வட்டாரத்தில் உருவாக்குங்கள்; மற்றவர்களுக்கு உதவி செய்ய எப்போதும் தயாராகுங்கள். (Build Healthy and Wealthy  Relationship – Help Others)
வாய்ப்புகள் (Passive Income):
 • பங்குகள் மூலம் வருமானம் (Dividend Income)
 • வட்டி வருமானம் (Interest Income)
 • வீட்டு வாடகை மற்றும் விற்பனை வருமானம் (Realty and Rental Income)
 • இணைய தள பொருட்கள் விற்பனை வருமானம் (Online Product Selling)
 • இணைய பிளாக்கிங் (Internet Blogging)
 • மற்றும் பிற அறிவு சொத்து சார்ந்த வருமானம். (Income through What you know)
பணத்திற்காக வேலை செய்யாமல் இருக்க சில பேரால் மட்டுமே முடியும் என்றாலும், உங்கள் பணம் உங்களுக்காக உழைப்பதற்கான வாய்ப்புகள் எல்லோருக்கும் சாத்தியமே !
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !