பங்குதாரர்கள் ஆண்டு பொது கூட்டத்தில் கலந்து கொள்வதின் அவசியம் என்ன ?
Why is it necessary for Shareholders to attend the Annual General Meeting (AGM) ?
பங்குச்சந்தையில் வெறும் பங்குகளை மட்டுமே வாங்கியும், விற்றும் விட்டு போவது நம் வேலையல்ல. பங்குச்சந்தையை ஒரு தொழில் செய்பவரை போல அணுக வேண்டும். நாம் ஒரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யும் போது, அதன் வாடிக்கையாளராகவோ அல்லது அந்த நிறுவனத்தின் தொழிலாளியாகவோ இருக்கலாம். ஆனால் இதனை கடந்து பங்குதாரர்(Shareholder) என்ற சொல், நமக்கு மிகுந்த மரியாதையும், முக்கியத்துவமும் தருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
என்னிடம் அந்த நிறுவனத்தில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது, நான் அப்படி என்ன செய்து விட போகிறேன் என நீங்கள் கேட்கலாம். முன்னொரு காலத்தில் இருந்தது போல, இன்று நிறுவனர்களின் பங்களிப்பு(Promoters Holding) பெரும்பான்மையாக இல்லை. இன்றையளவில் வங்கிகளும், பரஸ்பர நிதிகளும் தான் குறிப்பிடத்தக்க பங்குகளை ஒரு நிறுவனத்தில் வைத்துள்ளது. இதற்கு அடுத்தாற் போல், சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை தான்.
சமீபத்தில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ்(Infosys), அதன் 38வது ஆண்டு பொது குழு கூட்டத்தை பெங்களூரு நகரத்தில் நடத்தியது. சுமார் 800 பங்குதாரர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் இயக்குனர் குழு சார்பில் 2018-19ம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கை விவாதிக்கப்பட்டது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இன்போசிஸ் நிறுவனத்தின் சார்பில் பல விஷயங்கள் நேர்மறையாக சொல்லப்பட்டாலும், பல பங்குதாரர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். பெரும்பாலான பங்குதாரர்கள் நிறுவனத்திற்கு பரிந்துரைகளையும், குறைகளையும் முன் வைத்தனர். நிறுவனம் சார்பிலும் அதற்கான பதில்கள் தரப்பட்டன. சில கேள்விகளுக்கு, நிறுவனம் அமைதியை மட்டுமே முன் மொழிந்தது.
இத்தனைக்கும் அந்த தொழிலில் கொடி கட்டி பறக்கும் ஒரு நிறுவனம் பங்குதாரர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பெரும்பாலான நிறுவனங்களின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் பங்குதாரர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் மிக குறைவே. இது பங்குச்சந்தையில் நீண்ட காலம் முதலீடு(Investor) செய்பவர்களுக்கு ஆரோக்கியமான விஷயமல்ல.
பங்குதாரர்களாக நாம் ஒரு நிறுவனத்திடம் கேள்விகளை கேட்டால் மட்டுமே, சரியான தீர்வு அமையும். இன்று ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு நேரடியாக செல்லாமல், இணையத்தில் கலந்து கொள்ளும் வசதியும் வந்தாயிற்று. அப்படியிருக்க ஒரு நிறுவனத்தில் நம்முடைய கடமையை நாம் சரியாக செய்யும் போது, நிறுவனர்களுக்கும் தங்கள் தொழிலின் மீதான மரியாதை இருக்கும்.
பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் திவால் நிலைக்கு(Bankruptcy) செல்வதும், கடன் சிக்கலில் மாட்டிக்கொள்வதும் இன்று வாடிக்கையாக மாறி விட்டது. இதற்கு காரணமாக நிறுவனத்தின் பங்குதாரர்களும் உள்ளனர் என்பது தான் உண்மை. வெறும் பங்குகளை மட்டுமே கொண்டிருக்காமல், ஒரு நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை(Financial Statements), வாக்களிக்கும் உரிமை(Voting) மற்றும் பொதுக்கூட்டத்தில்(AGM) கேள்வி எழுப்புதல் மூலமே ஒரு பங்குதாரர் தனக்கான மதிப்பை பெற முடியும். இதனை சரியாக செய்து விட்டாலே, பெரும்பாலான நிறுவனங்கள் லாபத்தில் இயங்க ஆரம்பிக்கும். இதன் காரணமாக முதலீட்டாளருக்கும் நல்ல வருவாய் கிடைக்கும்.
கார்ப்பரேட் நிர்வாகத்தில்(Corporate Governance) ஏற்படும் குழப்பங்கள், நிதிநிலை அறிக்கையில் மோசடிகள் போன்றவற்றை தவிர்க்க பங்குதாரர்கள் அனைவரும் கூடி முடிவெடுப்பது அவசியம். மூன்று மணிநேர சினமா காட்சியை பார்ப்பதால் நமக்கு உத்வேகம் கிடைக்கிறதோ இல்லையோ, ஆனால் நாம் முதலீடு செய்த நிறுவனத்தின் விஷயங்களை ஆராய்ந்தால் தெளிவு பெறலாம். நிறுவனம் கொண்டு வரும் தீர்மானத்திற்கு வாக்களிப்பதும் நமது கடமை.
இது பங்குதாரர்களாக மட்டுமல்ல. நுகர்வோராகவும், பணியாளராகவும், நாட்டின் குடிமகனாகவும் நாம் கேட்டு பெற வேண்டியது ஏராளம். கேள்வியை கேட்பதினால் மட்டுமே விடை கிடைக்கும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை