39,000 புள்ளிகள், 40வது பிறந்த நாளை கொண்டாடிய சென்செக்ஸ் வரலாறு
The Bombay Sensex history which celebrated its 40th Birthday and crossed all time high of 39,000 Points
ஆசியாவின் முதல் மற்றும் பழமையான பங்குச்சந்தை தான் மும்பை பங்குச்சந்தை. உலகளவில் முதல் பத்து இடத்திற்குள் உள்ள இந்திய பங்குச்சந்தையும் மும்பை பங்குச்சந்தை தான், இதன் சந்தை மதிப்பு சுமார் 2.1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள். அமெரிக்காவின் நியூயார்க் பங்குச்சந்தைக்கு வால் ஸ்ட்ரீட்(Wall Street) போன்று மும்பை சந்தைக்கு தலால் ஸ்ட்ரீட்(Dalal Street) ஆகும்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
1875ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மும்பை பங்குச்சந்தை பின்னர் பல மாற்றங்களை தொட்டு சந்தையில் உள்ளவர்களுக்கு சென்செக்ஸ் என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டது. சென்சிட்டிவ் இண்டெக்ஸ்(Senstive Index) என்பது தான் பின்னாளில் பி.எஸ்.இ. சென்செக்ஸ்(BSE Sensex) என்றானது. பழமையான பங்குச்சந்தை என்று அமைய பெற்றிருந்தாலும், 1979ம் ஆண்டில் தான் மும்பை பங்குச்சந்தை, புள்ளிகளின் அடிப்படையில் வர்த்தகமாக தொடங்கியது.
1979ம் வருடம் ஏப்ரல் 1ம் தேதி, சென்செக்ஸ் 100 அடிப்படை புள்ளிகளை கொண்டு துவங்கப்பட்டது. நேற்று (02-04-2019) தனது வரலாற்று உச்சமான 39,000 புள்ளிகள் என்ற நிலை அடைந்தது. 39,000 புள்ளிகள், அதாவது கடந்த 40 வருடங்களில் சென்செக்ஸ் 390 மடங்குகள் வளர்ந்துள்ளது என்பது தான் உண்மை. பல ஏற்ற-இறக்கங்களை கண்ட மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு கோடிகளை கொட்டி கொடுத்துள்ளது என்றால் அதனை மறுப்பதற்கில்லை.
சென்செக்ஸ்(Sensex) ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ஒருவர் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால் தற்போது அதன் மதிப்பு 3.9 கோடி ரூபாயாக இருந்திருக்கும். இது தனிப்பட்ட பங்குகளின் வருமானத்தை சொல்லவில்லை என்பதை கவனிக்கவும். 2008ம் வருடத்தை சென்செக்ஸின் மிக மோசமான ஆண்டு எனலாம். உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை நம் நாட்டின் சந்தையையும் அப்போது பாதித்தது. மும்பை சென்செக்ஸ் குறியீடு 2008ம் வருடத்தில் 54 சதவீத இறக்கத்தை கண்டிருந்தது, இதனை சந்தையின் மாபெரும் வீழ்ச்சி என பொருளாதார வல்லுனர்களும் கூறியிருந்தனர்.
அடுத்த சில காலங்களிலே விழுந்த இடத்திலிருந்து வெகுண்ட சென்செக்ஸ் குறியீடு 73 சதவீத ஏற்றத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. இன்றும் மும்பை சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள 30 நிறுவனங்களில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகமாக தான் உள்ளது. 1990ம் வருடம் ஜூலை மாதத்தில் சென்செக்ஸ் தனது 1000 புள்ளிகளை தொட்டது.
ஜனவரி மாதம் 1992ம் ஆண்டில் 2000 புள்ளிகளையும், 1999ம் வருடம் அக்டோபர் மாதத்தில் 5000 மற்றும் பிப்ரவரி 2006ல் 10,000 புள்ளிகள் என்ற நிலையை எட்டியது. 2007ம் வருடம் டிசம்பர் மாதம் சென்செக்ஸ் குறியீடு 20,000 புள்ளிகளை கண்டது. 2008ம் வருடம் உச்சத்தில் 20,000 புள்ளிகளுக்கும் மேலாக இருந்த குறியீடு அதே வருடத்தின் முடிவில் 8,750 புள்ளிகள் என்ற வரலாற்று வீழ்ச்சியை சந்தித்தது. இருப்பினும் அடுத்த இரண்டு வருடங்களில் தனது பழைய நிலையான 20,000 புள்ளிகளை தக்கவைத்து கொண்டது. மே மாதம் 2014ம் வருடம் 25,000 புள்ளிகள் மற்றும் மார்ச் 2015ம் ஆண்டில் 30,000 புள்ளிகள், கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 35,000 புள்ளிகள் என்ற மைல்கல்லை எட்டியது மும்பை சென்செக்ஸ்.
கடந்த 40 வருடங்களில் சென்செக்ஸ் கூட்டு வட்டியின் அடிப்படையில் 17 சதவீத வருமானத்தை கொடுத்துள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மும்பை பங்குச்சந்தை(Bombay Stock Exchange -BSE) 5000க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளது. 1991 மற்றும் 1992ம் காலகட்டங்களில் ஹர்ஷத் மேத்தா மோசடி, 2007 மற்றும் 2008ம் வருடங்களில் உலக பொருளாதார மந்த நிலை, வங்கிகளின் திவால் நிலை சென்செக்ஸ் குறியீட்டை பதம் பார்த்தது(Market Crash in 1991). 2015ம் வருடத்தில் சீன நாட்டில் ஏற்பட்ட மந்த நிலை, சீன யுவான் மதிப்பின் வீழ்ச்சி மற்றும் 2016ம் ஆண்டில் இந்திய வங்கிகளின் வாராக்கடன் நிலை மற்றும் பணமதிப்பிழப்பு நிகழ்வு ஆகியவை சந்தையை பாதித்த காரணிகளாக சொல்லப்பட்டது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை