Tag Archives: portfolio rebalancing

முதலீட்டில் தங்கத்தின் பங்களிப்பு எவ்வளவு இருக்கலாம் ?  – உலக தங்க கவுன்சில் பரிந்துரை 

முதலீட்டில் தங்கத்தின் பங்களிப்பு எவ்வளவு இருக்கலாம் ?  – உலக தங்க கவுன்சில் பரிந்துரை 

Share of Gold in your Investment Portfolio – World Gold Council 2026

 

நேற்று(17-07-2026) மாலை வேளையில், மதுரை மாநகரத்தின் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்டெர்லிங் வி கிராண்ட் ஹோட்டலில் அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஃபைனான்சியல் மேனேஜ்மென்ட் இந்தியா(AAFM) மற்றும் உலக தங்க கவுன்சில்(World Gold Council) சார்பாக, ‘ஒரு சொத்து வகையாக தங்கத்தில் முதலீடு’ என்ற தலைப்பில் சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.

இவற்றில் சொல்லப்பட்டவை இங்கே சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 1990 களில் தங்கத்தின் மீதான முதலீடு என்பது பெரும்பாலும், நகைகளாக தான் இருந்துள்ளது. இதற்கான காரணம், இந்தியப் பெண்களுக்கான சேமிப்பு என்பது பெரும்பாலும் தங்க நகைகளை சிறுகச்சிறுக வாங்குவது தான். ஆனால் இந்த நிலை, 2020ம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் மாறி உள்ளது. அதாவது தங்கத்தினை மக்கள் நகைகளாக மட்டும் வாங்காமல், தங்கப் பத்திர திட்டம்(Sovereign Gold Bond – SGB), தங்கத்தின் மீதான மியூச்சுவல் பண்டுகள் மற்றும் இ.டி.எப். திட்டங்கள் வரவேற்பை பெற்று, அவை ஒரு முதலீடாக வாங்கப்பட்டு வருகின்றன.

பொதுவாக தங்கத்தின் மீதான மதிப்பு என்பது, ஒரு குறிப்பிட்ட நாட்டை மட்டும் சார்ந்திருக்காமல் உலகெங்கிலும் பரவி உள்ளது. அதாவது, நாம் வாங்கிய தங்கத்தினை நமது நாட்டில் மட்டுமில்லாமல், உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் விற்று பணமாக்கக்கூடிய நிலை, தங்கத்தின் மீதான முதலீட்டிற்கு சாதகமாக உள்ளது. பங்குச்சந்தை, கடன் பத்திரங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கு இருப்பது போல, தங்கத்தின் மீதான முதலீட்டிற்கு பெரும்பாலும் எதிர் தரப்பு இடர்(Zero counterparty risk – Physical Gold ) என்ற ஒன்றில்லை எனலாம். 

தங்கத்தின் மீதான முதலீட்டில் பொதுவாக அதிக ஏற்ற-இறக்கம் இருப்பதில்லை(பங்குச்சந்தையை போல). அதே வேளையில் கடந்த சில வருடங்களாக உலக பொருளாதார காரணிகள் விரைவாக மாற்றம் பெற்று வருவதன் காரணமாக, பங்குச்சந்தையை போல தங்கத்திலும் ஏற்ற-இறக்கத்தை காணலாம். தங்கத்தில் நீர்மை நிறை(Liquidity) கிடைக்கப்பெறுவது அதன் சாதகமான அம்சம். அதாவது, நாம் வாங்கிய தங்கத்தை எப்போது வேண்டுமானாலும் அடமானம் வைத்துக் கொள்ளலாம், விற்று விடலாம். அதே வேளையில், ஊரடங்கு காலத்தில் அவ்வளவு எளிதாக இது அமையவில்லை.

தங்கத்தின் மீதான உண்மையான முதலீடு என்பது பொதுவாக தங்கக் கட்டிகள், நாணயங்கள், மியூச்சுவல் பண்டுகள்(Gold Funds) மற்றும் இ.டி.எப்.(Gold ETF) என்ற வடிவங்களில் கிடைக்கப்பெறுகிறது. நகைகளாக வாங்குவது என்பது ஒரு தங்கத்தின் மீதான முதலீடல்ல. அதனை சொத்தாகவும் கருத முடியாது. அதன் காரணமாக தான் அதன் செலவினமே(நகைகளை உருவாக்க), மதிப்பையும் குறைத்து விடுகிறது. நடப்பில், சில தனியார் நிறுவனங்களால்  ‘டிஜிட்டல் கோல்டு (Digital Gold)’ என்ற பெயரில் வெளியிடப்படும் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம் எனவும், அவை ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் உலக தங்க கவுன்சில் கூறுகிறது. 

உலக தங்க கவுன்சில் பரிந்துரையின் படி,  தங்கக் கட்டிகள், நாணயங்கள், தங்கக் கடன் பத்திரங்கள், மியூச்சுவல் பண்டுகள் மற்றும் இ.டி.எப். போன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம். தங்க நகைகளாக வாங்க விரும்புவோர், தங்களுக்கு அருகே உள்ள நம்பிக்கைக்குரிய மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு பெற்ற நகை கடைகளில் வாங்கி கொள்ளலாம்.

ஒருவரது முதலீட்டில் தங்கம், பங்குகள், வங்கி வைப்புத்தொகை, நிலம், பரஸ்பர நிதிகள்(Mutual Funds) என பரவலாக்கம் செய்வது அவசியம். இதன் மூலம், நாம் முதலீட்டில் உள்ள ரிஸ்க் தன்மையை குறைத்து, நீண்டகாலத்தில் நல்ல வருவாயை பெற முடியும். உங்களது முதலீட்டு போர்ட்போலியோவில் தங்கத்தின் மீதான முதலீடு என்பது பொதுவாக 7.5 % முதல் 15% வரை இருக்கலாம் என உலக தங்க கவுன்சில் பரிந்துரைக்கிறது. முதலீட்டுத் தொகுப்பை சீரமைத்தலில்(Portfolio Rebalancing) தங்கத்தின் பங்களிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு 16.85% ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது முந்தைய இலக்கான சுமார் 15%-ஐ ஏற்கனவே கடந்துவிட்டது. நேரடித் தங்கம் சேகரிப்பு மற்றும் உலகளவில் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை ஆகியவற்றால் இந்த நிலையான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

2026ம் ஆண்டின் காலாண்டு முடிவில், இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தங்கத்தின் அளவு சுமார் 34,600 டன்கள் (3.7 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள்) என சொல்லப்படுகிறது. இவற்றில் ரிசர்வ் வங்கியிடம் இருப்பது மட்டும் 880 டன்கள். மியூச்சுவல் பண்டு மற்றும் இ.டி.எப். முறையில் தங்கத்தில் முதலீடு செய்யும் போது 99.5% + சுத்தமான தங்கம் மற்றும் 24 காரட் மதிப்பு  கிடைப்பதுடன், அதன் செலவினமும் குறைவு. கோல்டு இ.டி.எப். முறையில் முதலீடு செய்யப்படும் தங்கத்தின் மதிப்பு 25 கோடி ரூபாய்க்கு மேலாக இருந்தால், நாம் அதனை தங்கமாகவும்(கட்டிகள் அல்லது நாணயங்கள்) பெற்றுக் கொள்ளலாம்.   

நன்றி:  ஷீலா குல்கர்னி

உலக தங்க கவுன்சிலின் (World Gold Council) இந்தியப் பிரிவு சந்தை மேம்பாடு (முதலீடு) மற்றும் நிறுவன முதலீட்டாளர் உறவுகள் பிரிவின் தலைவர்.

 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

முதலீட்டில் அலை விளைவு எவ்வாறு அமையும் ?

அறிவியல் சார்ந்த சார்பியல் கோட்பாட்டில், ஏதேனுமொன்று ஒளியின் வேகத்தை நெருங்கும் போது, அவை வெளியையே(Space) உருமாறச் செய்கின்றன. அதாவது நீருக்குள் வீசப்பட்ட ஒரு சிறுகல், மையத்தை ஒட்டிய வட்ட அலைகளை உருவாக்குவது போல. இதனை அறிவியலில், ‘ஈர்ப்பு அலைகள்(Gravitational Waves)’ என்பர். பொருளாதாரம் சார்ந்தோ அல்லது மற்றொரு நிலையில் காணும் போது, இதனை, ‘அலை விளைவு(Ripple Effect); என சொல்வதுண்டு.

சுருக்கமாக, ஒரு பொருளின் அல்லது நிலையின் மீது ஏற்படும் தாக்கம், அதனை சுற்றியுள்ள மற்றொன்றின் மீதும் அதன் விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ அமையலாம். இதனை நாம் ஏன் பொருளாதார உலகில் அல்லது நமது முதலீட்டு போர்ட்போலியோவில் பார்க்க வேண்டும் ?

சமூகத்தில் ஏற்படும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு, அதன் ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துவது போல, முதலீட்டிலும் நாம் மேற்கொள்ளும் சிறு செயல்கள் அதன் விளைவை கொண்டு வரும். உதாரணமாக நமது முதலீட்டு போர்ட்போலியோவில் 10 நிறுவனப் பங்குகளை கொண்டிருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். இவற்றில் எட்டு நல்ல நிறுவனப் பங்குகள் நல்ல வருவாயை நமக்கு கொடுத்திருந்தாலும், மற்ற இரண்டு மோசமான வருவாயை அளிக்கும் பங்குகள், நமது ஒட்டுமொத்த போர்ட்போலியோ வளர்ச்சியை தடுத்து விடும். இதன் காரணமாக நாம் சுமாரான அல்லது எதிர்மறையான வளர்ச்சி நிலையை பெற நேரிடும். மாறாக, வெறும் இரண்டு நிறுவனப் பங்குகளின் வருவாய் வளர்ச்சியே, மற்ற 8 மோசமான பங்கு விலைகளின் விளைவையும் கடந்து நல்ல வருவாயையும் கொடுத்திருக்கலாம்.

இதனை மையமாக கொண்டு தான், பெரும்பாலான நிதி ஆலோசகர்கள்(சந்தையின் தன்மையை நீண்டகாலத்தில் நன்கு அறிந்த) அவ்வப்போது போர்ட்போலியோவை மறுசீராய்வுக்கு(Portfolio Rebalancing or Review) உட்படுத்த சொல்கின்றனர். வெறுமனே பங்குகளில் முதலீடு செய்து விட்டு, உட்கார்ந்து விட்டால் போதாது. நீண்டகால முதலீட்டு நோக்கில், அதனை அவ்வப்போது சரிசெய்து பராமரிக்கவும் வேண்டும். 

தற்போதைய நவீன உலகமயமாக்கலில், ஏதேனும் ஒரு நாட்டில் பொருளாதாரம் சார்ந்து ஏற்படும் சிறு சிக்கல் கூட, மற்ற நாடுகளில் விளைவுகளை ஏற்படுத்தலாம். “அந்த நாட்டில் பிரச்சனை நடந்தால் நமக்கென்ன என நாம் சும்மா இருந்து விட முடியாது தானே !”  அந்த நாட்டிலிருந்து ஏதேனும் ஒரு பொருளை மற்ற பெரும்பாலான நாடுகள் இறக்குமதி செய்து கொண்டிருக்கலாம். இல்லையெனில், அந்த குறிப்பிட்ட நாட்டின் அரசியல் சார்ந்த நிகழ்வு, மற்ற நாடுகளில் மாற்றங்களை கொண்டு வரலாம். 

தொழிலின் அடிப்படை பகுப்பாய்வை(Business Fundamentals) அலசி நாம் ஒரு நிறுவனப் பங்கினை தேர்ந்தெடுத்து விட்டால், முதலீடு செய்யும் முன் அந்த நிறுவனத்தின் தொழில் வருவாயின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் என்னென்ன என்பதை ஆராய வேண்டும். இதன் காரணமாக பின்னாளில் பங்கு விலை குறைய வாய்ப்பிருக்கிறதா, நிறுவனத்தின் நிதி நிலை எப்படியிருக்கும், கடன் வாங்கி தொழில் செய்தால் அந்த நிறுவனத்தால் மீண்டெழ முடியுமா மற்றும் நமது ஒட்டுமொத்த முதலீட்டு போர்ட்போலியோவில் அதன் பாதிப்பு எப்படியிருக்கும் என அறிய வேண்டும்.

இதனை பொதுவாக அதன் கடந்த கால நிதி அறிக்கை(Financial Statements), நிர்வாகத்தன்மை(Corporate Governance) மற்றும் சில எச்சரிக்கை அறிகுறிகளை(Red Flags) கொண்டு அறியலாம். அதன் காரணமாக தான், திரு. பீட்டர் லின்ச்சின், ‘Invest in What you know’, திரு. வாரன் பப்பெட்டின், ‘Circle of Competence’ தத்துவங்கள், முதலீட்டு உலகில் முக்கியத்துவம் பெறுகிறது. 

இந்த தத்துவங்களை புறந்தள்ளி வெறும் ஊகங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு, இல்லையெனில் நண்பர் சொன்னார், இணையத்தில் கண்டேன் என்ற பேர்வழியாக பங்குகளில் நாம் முதலீடு செய்து வந்தால் அதன் அலை விளைவு நமது ஒட்டுமொத்த பொருளாதார நிலையையும் மாற்றி விடும். அதனால் தான் பங்குகளில் பெரும்பாலானோர் பணம் ஈட்ட முடியாமல் ஏமாற்றமடைகின்றனர்.பின்னர், ‘பங்குச்சந்தை ஒரு சூதாட்டம், நமக்கு பங்குச்சந்தை சரிப்பட்டு வராது, இது பணக்காரர்களுக்கு மட்டுமேயான வாய்ப்பு’ என சொல்லிவிட்டு போவதுண்டு. உண்மையில் பங்குச்சந்தை முதலீடு என்பது அனைவருக்குமானது, அதனை சரியாக கையாண்டால் !

அலை விளைவு(Ripple Effect) என்பது உண்மையில் பங்குச்சந்தைக்கு மட்டுமா ? இல்லை. இதன் விளைவை எங்கும் காணலாம். நமது வீட்டில் நடக்கும் சிறு மகிழ்ச்சி அல்லது கோபம் கூட, மற்றவர்களிடம் விளைவுகளை ஏற்படுத்தலாம். வங்கி வட்டி விகித அதிகரிப்பு அல்லது குறைப்பு, மக்களின் பொருளாதாரத்தில் விளைவை கொண்டு வரலாம். ஒரு நிறுவனம் தனது தொழிலை துவக்கினால் அல்லது திவாலானால் வேலை வாய்ப்பு, சந்தை நுகர்வு, வாழ்வாதாரம், வரி வருவாய் மற்றும் நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். 

தவறான அல்லது சரியான அரசியல் நிலைப்பாடுகளை எடுக்கும் போதும், அதன் விளைவுகள் நீண்டகாலம் தாக்கு பிடிக்கும். அகந்தை கொள்ளும், பேராசை கொள்ளும் ஒருவரின் விளைவால் ஒட்டுமொத்த உலக பொருளாதாரமும் பாதிக்கப்படலாம் அல்லது எழுச்சி பெறலாம். நோய்த்தொற்று, உடல் பருமன், சுற்றுச்சூழல், தொழில்நுட்ப தாக்கம் என சொல்லிக்கொண்டே போகலாம். இதனை அவ்வளவு எளிதாக நாம் கடந்து விட்டு போக முடியாது. ஏற்படும் அலை விளைவு தாமதமாகவும் வரலாம், இல்லையெனில் உடனே நடக்கலாம். ஆனால் விளைவு என்ற ஒன்றுண்டு.

உண்மை தான். மழை வரப் போகிறது, குடை கொண்டு போகலாம் தானே ! 

முதலீட்டு கோட்பாட்டில் நீண்டகாலம் என்ற நிலையை, பெரும்பாலான சந்தை வல்லுநர்கள் ஏன் எப்போதும் பரிந்துரைக்கிறார்கள் ? காரணம், நமக்கான நேரம் இருப்பது தான். எடுத்த உடனே சந்தையில் பங்குகளை விற்று லாபம் பார்த்து விட்டு, பின்னர் சந்தை இறங்குகையில் வாங்க வருவது அவ்வளவு எளிதாக நடைபெறாது. அப்படி ஒரு வாய்ப்பும், எப்போதும் கிட்டாது. எனவே, சந்தையில் நீண்டகாலம் பங்கேற்கும் அல்லது காத்திருக்கும் மனநிலை நமக்கு வர வேண்டும். அப்போது தான் நாம் பல்வேறு வாய்ப்புகளையும், தவறுகளை திருத்திக் கொள்ளும் நேரத்தையும் பெற முடியும்.

  • சந்தையில் நீண்டகாலம் முதலீடு செய்யும் நோக்கத்தை கொண்டிருத்தல்(Focusing on Long Term Wealth Creation) 
  • மின்னுவதெல்லாம் பொன்னல்ல. சந்தையில் மிகக்குறைவான காலத்தில் அதிக லாபமீட்டலாம் என்ற கண்ணோட்டத்தை தவிர்த்தல்(Avoid the King Midas Effect)
  • நிறுவனத்தின் தொழிலை புரிந்து கொள்ளுதல் அல்லது கற்றுக்கொள்ள முனைதல்(Circle of Competence)
  • பகுத்தறிவுள்ள சிந்தனைக்கு பிறகு மட்டுமே முதலீடு செய்ய பழகுதல்(Focus on Rational Thoughts, not for Speculations)
  • இரைச்சல்களை புறக்கணியுங்கள்(Be Fearful When Others are Greedy, Greedy When Others are Fearful)
  • கடன் வாங்கி முதலீடு செய்தல் மற்றும் வரம்பிற்கு மேல் ரிஸ்க் எடுத்தலை தவிர்ப்பது(Risk Profiling)
  • சந்தை எப்போது வேண்டுமானாலும் இறக்கம் காணலாம் என்ற நிலையை ஏற்றுக்கொள்வது(Diversification and Margin of Safety)
  • மாற்றுத் திட்டத்தை வகுத்தல் மற்றும் நிலையான முதலீட்டு தத்துவத்தை பேணுதல்(Contingency plans and Maintain Stable &  Adapted Investing Culture)   

மேலே சொன்னது போக, பொருளாதாரத்தை பற்றிய அடிப்படை கற்றல்(Macro Economy), போர்ட்போலியோ மறுசீராய்வு, நிலையான வருவாய், பயத்தில் பங்குகளை விற்பதை தவிர்த்தல், தொடர்ச்சியாக சேமிப்பு மற்றும் முதலீட்டை மேற்கொள்ளுதல் போன்றவற்றை மேற்கொண்டால், அலை விளைவின்(Ripple Effect) தாக்கத்திலிருந்து நமது முதலீட்டை நீண்டகாலத்தில் பாதுகாத்து நல்ல வருவாய் வளர்ச்சியையும் பெறலாம்.

2020ம் ஆண்டுக்கு பின்னர் நடந்த கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு, பொருளாதார தேக்கம், உக்ரைன்-ரசிய போர் காரணமாக எண்ணெய் விலையில் மாற்றம், தற்போது அமெரிக்க-இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக ஏற்படப்போகும் பணவீக்கம் என அலை விளைவின் தாக்கம் உதாரணமாக அமைந்துள்ளது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

www.varthagamadurai.com