Tag Archives: CPSE ETF

அரசு துறையில் முதலீடு செய்ய உள்ளீர்களா – பட்டியலில் உள்ள பங்குகள் என்னென்ன ?

அரசு துறையில் முதலீடு செய்ய உள்ளீர்களா – பட்டியலில் உள்ள பங்குகள் என்னென்ன ?

CPSE (Central Public Sector Enterprises) ETF – Portfolio 

நம்மில் பலர் சேமிப்பு மற்றும் முதலீடு என்றவுடன் பாதுகாப்பான முதலீட்டு சாதனம் ஏதும் உள்ளதா என கேள்வி கேட்க துவங்குவார்கள். பலரது நம்பிக்கையாக அஞ்சலக சேமிப்பு, பொதுத்துறை வங்கிகளில் டெபாசிட் மற்றும் எல்.ஐ.சி. நிறுவனத்தில் (இன்சூரன்ஸ் நிறுவனம் !) காப்பீட்டை பெறுவது என தங்களின் சேமிப்பு மற்றும் முதலீட்டை மேற்கொள்வர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஏனெனில் பெரும்பாலானோரின் நம்பிக்கை அரசு சார்ந்த நிறுவனங்கள் திவால் நிலைக்கு தள்ளப்படாது மற்றும் தங்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதனால் தான். ஆனால் உண்மை நிலவரம் வேறு. ரிஸ்க் என்பது அனைத்து முதலீட்டிற்கும் பொருந்தும். கால அளவை பொறுத்து ரிஸ்க் தன்மையும் மாறுபடும்.

குறுகிய கால தேவைக்கு, குறைந்த வட்டி விகிதத்தை மட்டுமே எதிர்பார்க்க வேண்டும். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டால், முதலீட்டின் மீதான ரிஸ்கும் அதிகம். நீண்ட காலத்தில் ரிஸ்க் பரவலாக்கப்படுவதால்(Diversification), நல்ல வட்டி வருவாயை பெற இயலும். அங்கே போய் குறைந்த வட்டி விகித முதலீட்டு சாதனத்தை தேர்ந்தெடுக்க கூடாது. இல்லையெனில் பணவீக்கத்தை தாண்டிய வருவாய் ஈட்ட முடியாமல், எதிர்மறையான வருவாயை பெற கூடும்.

கடந்த 2013ம் ஆண்டின் மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவின் ஒப்புதலை தொடர்ந்து, மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடவடிக்கை ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுத்துறை நிறுவனங்களின்(Public Sector) பங்கு பொது வெளிக்கு விற்பனைக்கு வந்தது.

இதனை தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் அடங்கிய புதிய பண்டு வெளியீடு நடைபெற்றது. இதற்கு  ‘CPSE ETF (Central Public Sector Enterprises) என பெயரிடப்பட்டது. பரஸ்பர நிதிகளில் உள்ள திட்டத்தை போன்றே இந்த பண்டுகளும் செயல்படும். பின்னர் வெவ்வேறு காலத்தில் கூடுதல் நிதி முதலீட்டையும்(Further Fund Offer) மத்திய அரசு மேற்கொண்டது.

இந்த திட்டத்தின் மூலம் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்கப்படுவதால் அரசாங்கத்திற்கு கூடுதல் நிதி கிடைக்கப்பெறும். இதன் வாயிலாக அரசுக்கான நிதி பற்றாக்குறையை சமாளிக்க இயலும். பங்குகளை வாங்கும் பொது முதலீட்டாளர்கள் அதனை பண்டுகளாக(ETF – Exchange Traded Fund) வைத்திருப்பர். இந்த பண்டுகள் சந்தையிலும் வர்த்தகமாகும் என்பதால், எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம் மற்றும் விற்கலாம்.

இதுவரை கூடுதல் நிதி தேவைக்காக மத்திய அரசு ஐந்து முறை பண்டுகளை வெளியிட்டிருந்த நிலையில், இம்மாத இறுதியில் 6வது நிதி தேவைக்கு தயாராகி கொண்டிருக்கிறது. இம்முறை சுமார் ரூ. 10,000 கோடி அளவிலான பங்கு விலக்கல் மூலம் நிதியை திரட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக சி.பி.எஸ்.இ(CPSE ETF) பொதுத்துறை பண்டுகள் குறைவான செலவினத்தை கொண்டிருக்கும். ரிஸ்க் தன்மை பரவலாக்கப்படுவது மற்றும் பல துறையில் உள்ள பொதுத்துறை பங்குகளில் முதலீடு செய்யும் போது சராசரி வருவாயை காட்டிலும் கூடுதல் வருவாயை பெறுவது இதன் சாராம்சம்.

இந்த திட்டத்தில் மொத்தம் 11 அரசு பொதுத்துறை பங்குகள் உள்ளன. அவை NTPC, Coal India, IOC, Rural Electrification Corporation, Power Finance Corporation, Bharat Electronics Ltd, Oil India Ltd, NBCC(India) Ltd, NLC, SJVN ஆகும். மின்துறையில் மூன்று நிறுவனங்களும், நிதித்துறையில் இரண்டு நிறுவனங்களும், எண்ணெய் துறையில் இரு நிறுவனங்களும், தொழிற்துறை மூலதன பொருட்கள், பெட்ரோலியம், கனிம வளம் மற்றும் கட்டுமானத்துறையில் தலா ஒரு நிறுவனம் என்ற அடிப்படையில் நிறுவனங்களின் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலும் அனைத்து நிறுவனங்களுமே வளர்ச்சி நிலையில் உள்ளவை என சொல்லலாம். கடந்த வருட ஜூலை 2019 பட்ஜெட்டின் படி, மத்திய அரசின் பங்கு விலக்கல் தொகைக்கான இலக்கு ரூ. 1.05 லட்சம் கோடி. இன்னும் அந்த இலக்கு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பாரத் பெட்ரோலியம், கான்கார்(Container Corporation) மற்றும் ஷிப்பிங் கார்பொரேஷன் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடைபெற்று வருவது கவனிக்க வேண்டியது.

சி.பி.எஸ்.இ. திட்டம் கடந்த மூன்று வருடங்களில் 10 சதவீத வருவாயை தந்துள்ளன. அதே வேளையில் பண்டு வெளியிட்ட (2014) தேதியிலிருந்து கணக்கிட்டால் 7.53 சதவீத வருவாய் அளித்துள்ளது. இந்த திட்டத்தை போல பாரத் 22 (Bharat 22 ETF) என்ற ஒரு பண்டும் அரசு துறை சார்பில் உள்ளன.  தனிநபர் மற்றும் குடும்பத்தின் நிதி இலக்கு சார்ந்து இன்று பல பண்டுகள்(Funds) வந்து விட்டது. எனவே ஒருவரின் இலக்கிற்கு ஏற்ப பண்டுகளை தேர்ந்தெடுப்பது அவசியம். இல்லையெனில் தகுந்த நிதி ஆலோசகரை கொண்டு முதலீட்டை முடிவு செய்யுங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com