Tag Archives: avoid insurance

வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ் திட்டம் மட்டுமே என்ற மாயை

வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ் திட்டம் மட்டுமே என்ற மாயை

Insurance Scheme alone does not help to save the tax

மார்ச் மாதம் வந்தவுடன் வருமான வரி செலுத்துவோருக்கு ஏதோ செலவுகள் இருப்பது போலவும், இன்சூரன்ஸ் ஏஜெண்ட்களுக்கு புதிய பாலிசிகள் அதிகமாக கிடைக்கும் காலமாகவும் பார்க்கப்படுகிறது. உண்மை அதுவல்ல, நாம் இங்கு யாரையும் குறைகூற விரும்பவில்லை. வருமான வரி செலுத்துபவர்கள் தங்களின் வரி சலுகையை பெற அவசரகதியில் இன்சூரன்ஸ் நிறுவனத்தை நோக்கி ஓடி செல்வதே இதற்கு காரணம்.

வருமான வரி செலுத்துபவருக்கு ஒரு நிதியாண்டில் ஏப்ரல் முதல் மார்ச் மாதம் வரை நேரம் இருக்கும் போது, நாம் ஏன் காப்பீடு திட்டங்களை அவசரமாக வாங்கி செல்ல வேண்டும். நமது மாத ஊதியம் எப்போது நமக்கு வரவு வைக்கப்படும் என்பது நமக்கு தெரியும். நமது ஊதிய உயர்வு ஒரு ஆண்டின் எந்த மாதத்தில் தரப்படலாம் என்பதும் நமக்கு அறிந்ததாக தான் இருக்கும். அப்படியிருக்கும் போது, நாம் ஒரு வருடத்தில் பெறப்போகும் வருமானத்தின் மதிப்பு தோராயமாக நமக்கு தெரிய வரும். நாம் இது போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டாலே, வரும் காலத்தில் நமது வருமான வரி என்ன என்பதை நாமே கணக்கிட்டு கொள்ளலாம்.

வருமான வரி செலுத்தக்கூடிய நபராக நாம் மாறும் போதே, வரி சலுகையை பெறுவதற்கான வாய்ப்புகளை நாம் கண்டறிவது, நமக்கான சிறந்த சேமிப்பாக இருக்கும். வருமான வரியை நாம் வேலை பார்க்கும் நிறுவனம் பிடித்தம் செய்து விட்டது, அரசாங்கம் வரி கொள்ளையில் ஈடுபடுகிறது என்று சொல்லிக்கொண்டே நாம் நமக்கு தேவையில்லாத வரிச்சலுகை தரும் திட்டங்கள் என்று சில செலவுகளை செய்து வருகிறோம். வருமான வரி சலுகைக்கு நம்மில் பெரும்பாலோர் நம்பி கொண்டிருப்பது காப்பீடு திட்டம்(Insurance Schemes for Tax Saving) தான்.

காப்பீடு திட்டம் மட்டுமே வருமான வரி சலுகைக்கு உதவும் என்பது நம்மிடம் உள்ள தவறான அணுகுமுறை. நாம் ஏற்கனவே சொன்னது போல, காப்பீடு என்பது நமக்கு ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகளிலிருந்து நமது குடும்பத்தை நிதிச்சிக்கலில் இருந்து பாதுகாக்க உதவும் ஒரு சாதனமே. ஆம், காப்பீட்டு திட்டங்களை கொண்டு நாம் வரியை சேமிக்கலாம். காப்பீடு திட்டத்திலும் சிறிதளவு சேமிக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் காப்பீடு நிறுவனங்கள் வழங்கும் காப்பீடு திட்டங்கள் நமக்கான பாதுகாப்பு அம்சமாகவே நாம் காண வேண்டும். மாறாக அவற்றை ஒரு முதலீடாகவோ, வரி சேமிப்பாகவோ நாம் காண ஆரம்பித்தால் நமக்கு செலவு தான் ஏற்படும்.

சரி காப்பீடு திட்டம் மட்டுமே வரி சலுகைக்கு இல்லை என்று சொல்லிவிட்டீர்கள். வேறு என்ன வரி சேமிப்பு திட்டங்கள் உள்ளன ?

  • 80C, 80CCC, 80CCD (Income Tax Act) பிரிவின் கீழ்  – ஆயுள் காப்பீடு, வரி சேமிப்பு பத்திரங்கள், 5 வருட வங்கி வைப்பு நிதிகள், இ.எல்.எஸ்.எஸ்.(ELSS) மியூச்சுவல் பண்டு திட்டங்கள், செல்வ மகள் சேமிப்பு திட்டம், பி.எப்., பொது வருங்கால வைப்பு நிதி(PPF), மூத்த குடிமக்கள் திட்டம், தேசிய பென்ஷன் திட்டம்(NPS), ராஜிவ் காந்தி சேமிப்பு திட்டம், வீட்டு கடன் அசலை திரும்ப செலுத்துதல்
  • 80 D – மருத்துவ காப்பீடு மற்றும் செலவுகள்
  • 80DD & 80U – மாற்று திறனாளிகளுக்கான சலுகை
  • 80DDB – குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சை
  • 80E – கல்வி கடனுக்கான வட்டியை செலுத்தும் போது வரி சலுகை
  • 80EE – முதன்முறையாக சொந்த வீட்டை கொண்டவர்களுக்கு வீட்டுக்கடன் வட்டியில் வரி சலுகை
  • 80G – நன்கொடை மற்றும் நிவாரண நிதி அளிக்கும் போது
  • 80GG – வீட்டு வாடகையில் சலுகை
  • 80TTA – சேமிப்பு கணக்கு வட்டி வருமானத்திற்கு
  • Section 24 – வீட்டு கடன் வட்டியில் வரி சேமிப்பு

இது போக மற்ற வருமான வரி சட்ட பிரிவுகளிலும் வரி சலுகைகள் அனுமதிக்கப்படுகின்றன. வரி சேமிப்பு திட்டங்களை நாம் வரி சலுகைக்காக மட்டும் பெறாமல், நமக்கான முதலீட்டு வாய்ப்பாகவும் ஏற்படுத்தி கொள்வது, வருமானத்தை அதிகரிக்க உதவும். கடைசி நேர வரி சலுகை முதலீடு பயன் தராது. உங்களது வரி சேமிப்பு திட்டங்களை நிதியாண்டின் தொடக்கத்திலே துவங்க முனையுங்கள். வரி சேமிப்பு திட்டங்களை நீண்ட காலத்தில் பயன்படுத்தும் போது, அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் நன்றாக அமையும்.

காப்பீட்டு திட்டத்தை யார் தவிர்க்கலாம் ? (Who can avoid Insurance ?)

நமக்கான காப்பீடு தொகையை எவ்வாறு கணக்கிடுவது ?

இன்றும் பி.எப்., பி.பி.எப்.(Public Provident Fund) மற்றும் செல்வ மகள்(Sukanya Samriddhi) திட்டங்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம். இது போன்ற வரி சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பானவை மட்டுமல்ல, தொடர்ச்சியான வட்டி விகிதத்தை கொடுக்க கூடியவை. வாழ்க்கை மாற்றங்களுக்கு தகுந்தாற் போல, நோய்களுக்கும் பஞ்சமில்லை. 80D(Medical Insurance) பிரிவை நம்மில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவதில்லை. எதிர்பாராத மருத்துவ செலவுகளுக்காக காப்பீட்டு தொகையுடன், வரி சேமிப்பையும் ஏற்படுத்தலாம். பரஸ்பர நிதிகள் அளிக்கும் இ.எல்.எஸ்.எஸ்.(Equity linked savings scheme) திட்டங்கள் வரி சலுகையாக மட்டும் செயல்படாமல், பணவீக்கத்தை தாண்டிய நல்ல வருமானத்தை தரக்கூடியதாக உள்ளது. இனி, வரி சலுகைக்கு காப்பீடு திட்டங்களை மட்டுமே நம்பியிருக்காமல் உங்களுக்கு கிடைக்கும் அனைத்து வரி சலுகையையும் பயன்படுத்துங்கள், வருமான வரியை சாமர்த்தியமாக சேமியுங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

Advertisement