2021-22ம் நிதியாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.15,243 கோடி
ITC reported a Net Profit of Rs.15,243 Crore in FY22 results
நூறு வருடத்திற்கும் மேலான தொழில் அனுபவம் கொண்ட ஐ.டி.சி. நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதன மதிப்பு சுமார் 3.40 லட்சம் கோடி ரூபாய். நுகர்வோர் பொருட்கள்(FMCG), பேப்பர் பொருட்கள்(Packaging), விவசாய பொருட்கள், நட்சத்திர உணவு விடுதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் தனது தொழிலை பரவலாக்கியுள்ளது.
புகையிலை ஏற்றுமதியில் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய நிறுவனமாகவும், விவசாய பொருட்கள் ஏற்றுமதியில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் ஐ.டி.சி. உள்ளது. Aashirvaad, Sunfeast, Yippee, Dark Fantasy, Classmate Notebooks, Mangaldeep, Fiama, Vivel, B Natural, Nimyle, Engage, Shower to Shower, Savlon, Fabelle, Mom’s Magic, Paperkraft, AIM தீப்பெட்டிகள், Charmis, Dermafique நிறுவனத்தின் பிரபல பிராண்டுகளாகும்.
ஐ.டி.சி. நிறுவனத்தின் உணவு விடுதிகளில் கிராண்ட் சோழா, விண்ட்சார், கார்டெனியா, பார்சூன் போன்றவை மிகவும் பிரபலமானவை. உலகின் முதல் கார்பன் இல்லா உணவு விடுதியை(Leed Zero Carbon) ஏற்படுத்தியிருப்பது ஐ.டி.சி. நிறுவனத்தின் பங்களிப்பாகும். நுகர்வோர் பொருட்களில் 45க்கும் மேற்பட்ட பிரிவுகளில் 700க்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
இந்திய பன்னாட்டு நிறுவனமாக வலம் வரும் ஐ.டி.சி. நிறுவனம் 2021-22ம் நிதியாண்டில் வருவாயாக 60,688 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனத்தின் செலவினம் ரூ.40,010 கோடியாகவும், இயக்க லாபம் 20,658 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம்(OPM) ஆண்டுக்கு சராசரியாக 35 சதவீதம் உள்ளது. கடனில்லா நிறுவனமாக உள்ள இந்நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம் 528 மடங்குகளிலும், புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 50 ரூபாயிலும் உள்ளது.
பங்குச்சந்தை – பண்டமென்டல் அனாலிசிஸ் – இலவச வகுப்புகள் – 14 நாட்களில்
2021-22ம் நிதியாண்டில் நிறுவனம் பங்குதாரர்களுக்கு ஏற்கனவே பங்கு ஒன்றுக்கு 5.25 ரூபாய் டிவிடெண்ட் அளித்துள்ள நிலையில், ஆண்டு இறுதி பங்களிப்பாக தற்போது பங்கு ஒன்றுக்கு 6.25 ரூபாயை அறிவித்துள்ளது. 2022ம் ஆண்டின் மார்ச் மாத முடிவின் படி, ஐ.டி.சி. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ.61,223 கோடி.
நிறுவனத்தின் பணவரத்தும்(Cash Flow) கடந்த காலங்களில் நன்றாக இருந்துள்ளது. கடந்த ஐந்து வருட காலத்தில் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 7 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 8 சதவீதமாகவும் உள்ளது. பங்கு மீதான வருமானம்(ROE) ஐந்து வருட காலத்தில் 23 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை