ஐ.டி.சி. நிறுவன இரண்டாம் காலாண்டு நிகர லாபம் – ரூ.3,714 கோடி
ITC reported a Net Profit of Rs.3,714 Crore – Q2FY22 results
பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் ஐ.டி.சி. நிறுவனம், புகையிலையை தனது முதன்மை தொழிலாக கொண்டிருந்தாலும், இன்று நுகர்வோர் பொருட்கள், ஆடைகள், நட்சத்திர விடுதிகள், பேப்பர் பொருட்கள், பேக்கேஜிங்(Packaging), விவசாயம் சார்ந்த பொருட்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை என தனது தொழிலை விரிவடைய செய்துள்ளது.
இந்திய பங்குச்சந்தையில் சுமார் 2.94 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை கொண்டிருக்கும் இந்நிறுவனம் கடனில்லா நிறுவனமாகவும்(Debt Free) இருப்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம் 564 மடங்குகளில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு சாதகமானது.
2020-21ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 49,257 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ.13,161 கோடியாகவும் இருந்துள்ளது. ஐ.டி.சி. நிறுவனத்தின் இயக்க லாப விகிதம்(OPM) ஆண்டுக்கு சராசரியாக 35 சதவீதம் என்ற அளவில் உள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு மார்ச் 2021 முடிவில் ரூ.59,100 கோடி.
நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாம் காலாண்டு(ஜூலை – செப்டம்பர் Quarterly results) முடிவுகளை நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.13,751 கோடியாகவும், செலவினம் 8,740 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக 469 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது.
சொல்லப்பட்ட காலாண்டின் நிகர லாபமாக ரூ.3,714 கோடி இருந்துள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.5,055 கோடி. கடந்த ஜூலை 2021 காலாண்டுடன் ஒப்பிடுகையில், தற்போதைய வருவாய் 4 சதவீதமும், நிகர லாபம் 13 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளது.
முந்தைய வருடத்தின்(2020-21) இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது, நிறுவனத்தின் வருவாய் தற்போது 14 சதவீதமும், நிகர லாபம் 10 சதவீதமும் உயர்ந்துள்ளது. எனினும் கடந்தாண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது. இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்களின் வருவாய், கடந்த நிதியாண்டை காட்டிலும் நடப்பில் அதிகரித்து காணப்படலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை