Doubt unknown investing

புரிந்து கொள்ள முடியாத முதலீடு, பேரிழப்பை ஏற்படுத்தும் !

புரிந்து கொள்ள முடியாத முதலீடு, பேரிழப்பை ஏற்படுத்தும் !

Beware of any investment product, before Investing 

பொருளாதார உலகில் பங்குச்சந்தையை போன்ற எளிமையான முதலீட்டு வகையும், அதனை சார்ந்த செல்வமீட்டுதலும் இதுவரை அறியப்படவில்லை என சொல்லலாம். அதே வேளையில் பங்கு முதலீட்டு உலகில் பணம் பண்ண பொறுமையும், சில நுணுக்கங்களை அறிந்து வைத்திருப்பதும் அவசியம். பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய விரும்புபவர்கள், கற்றலுக்கான நேரத்தை எப்போதும் செலவழித்து தான் ஆக வேண்டும். எனக்கு நேரமில்லை என்பவர்கள் பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களை தேர்ந்தெடுத்து விட்டு செல்வது தான் சிறப்பு.

வளர்ந்த நாடுகளில் பெரும்பாலும் சேர்க்கப்படும் சொத்துக்கள் நிதி சொத்துக்களாக தான்(Financial Asset) உள்ளன. தங்கம், நிலம், வீடு, வணிக வளாகங்கள்(Physical Asset) என ஒரு புறம் சொத்துக்களாக இருந்தாலும் பங்குகள், பத்திரங்கள், பரஸ்பர நிதிகள், வங்கி வைப்பு நிதி போன்ற நிதி சொத்துக்கள் தான் உலக பணக்காரர்களிடம் பெரும்பான்மையாக காணப்படுகிறது. இதற்கான காரணம், சொத்துக்களை எளிமையாக நிர்வகிப்பது(Portfolio) மற்றும் எப்போது வேண்டுமானாலும் அவற்றை உடனடியாக பணமாக மாற்றி கொள்ளும் வசதி(Liquidity) தான்.

இனிவரும் காலங்களில் நிதி சொத்துக்கள் தான் பொருளாதார உலகில் அதிகம்  காணப்பட்டாலும், புரிந்து கொள்ள முடியாத செயல்பாடுகளில் நமது பணத்தை முதலீடு செய்து விட்டு பின்பு அதனை முழுமையாக இழந்து விட கூடாது. உண்மையில் இது போன்ற செயல்பாடுகள் முதலீட்டு வகையில் சேராது எனலாம். இன்றைய காலத்தில் போன்சி(Ponzi) என சொல்லப்படும் மோசடி திட்டங்கள் ஏராளம். முன்னொரு காலத்தில் தங்கம், நிலம் மற்றும் கால்நடைகளை கொண்டு ஏமாற்று பேர்வழி திட்டங்கள் வந்தநிலையில், இப்போது இணைய வழியிலான நிதி மோசடிகள் அதிகமாகியுள்ளது.

மெய்நிகர் நாணயம்(Crypto), கரன்சி(Forex), பங்கு வர்த்தகம், பிரமிட்(Pyramid) திட்டங்கள், எம்.எல்.எம்., P2P Lending என பல பெயர்களில் ஏமாற்று பேர்வழிகள் மோசடி திட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர். அசலை போன்ற போலி என்ற வகையில் இவற்றை சொல்லலாம். உண்மையில் மெய்நிகர் நாணயம் ஒரு தொழில்நுட்ப அணுகுமுறையை(Blockchain Technology) தான் கொண்டுள்ளது. அவை நிதி சொத்துக்களாகவும், மற்ற சொத்துக்களை இணைக்கும் வகையிலும் இன்னும் அமைக்கப்படவில்லை. எந்தவொரு முதலீட்டு சாதனமும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட வேண்டும். அரசாங்கமும் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், நாம் தான் அசல்-போலியை கண்டறிவதற்கான நிதி கல்வியை பெற வேண்டும்.

மேலை நாடுகளில் சூதாட்ட(Gambling) விளையாட்டுகளுக்கு என சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அங்கே அவை ஒரு போதும் சொத்துக்களாகவோ, செல்வம் ஈட்டும் அரிய கருவியாகவோ சொல்லப்படவில்லை. மாறாக அரசுக்கு வரி வருவாய் ஏற்படுத்தவும், கருப்பு பணத்தை தடுக்கும் முயற்சியாகவும் தான் சட்டமாக மாற்றப்பட்டுள்ளன. அது போன்று நம் நாட்டிலும் சட்டங்கள் சில நடைமுறையில் உள்ளன. ஆனால் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட மக்களில் இளைஞர்கள் பலர், இணையத்தில் ரம்மி, கிரிக்கெட் விளையாடுவது குறுகிய காலத்தில் பெரிய பணம் பண்ணிவிடலாம் என தங்களது உழைப்பையும்(Hard earned money), நேரத்தையும் தொலைத்து விடுவதுண்டு. இன்னும் சிலரோ நிதி சுதந்திரம், மோட்டிவேஷன் என புரிந்து கொள்ள முடியாத ஏமாற்று நிறுவனங்களிடம் பணத்தை கட்டி விட்டு, தங்களது நண்பர்களையும் சேர்த்து விட்டு சில வருடங்களில் ஏமாற்றப்படுகின்றனர். இதனை அவர்கள் தொழில்முனைவு(Entrepreneurship) என்று சொல்லிக்கொள்வதும் உண்டு.

தொழில்முனைவுக்கும்(Entrepreneur), நேரடி விற்பனைக்கும்(Direct Marketing, Multi level Marketing) உள்ள வேறுபாட்டையும், அதன் விளக்கத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை எனில், நாம் வாழ்நாள் இறுதி வரை உழைத்து கொண்டு தான் இருக்க வேண்டும். இதன் மூலம் உண்மையான நிதி சுதந்திரத்தை பெற்று விட முடியாது.

“ நான் ஏ.பி.சி.டி. நிறுவனத்தில் ரூ.10,000 முதலீடு செய்துள்ளேன். ஒரே ஆப்பில்(Mobile App) தினமும் 2000 ரூபாய் சம்பாதிக்கலாமாம். அந்த நிறுவனம் ஆஸ்திரேலியாவில் உள்ளது என சொன்னார்கள். வருடத்திற்கு ஒரு முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம், ராயல்டி வருமானம், ஓய்வுகாலத்தில் கடற்கரை ஓரத்தில் ஒரு அழகிய வீடு…”  –  நமது வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்காரர் விற்கும் பொருட்களை பற்றிய புரிதலே நமக்கு இல்லாத போது, ஆஸ்திரேலியா நிறுவனம் நமது அண்ணன் நடத்தும் நிறுவனமா என்ன ? நமது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பி.எப். பணம் எங்கு முதலீடு செய்யப்படுகிறது என என்றாவது நமது நிறுவனத்திடம் கேட்டிருப்போமா ?

கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே சிறு முதலீட்டில் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரம் வேறு. சில தொழில்களில் முதலீடு குறைவாக இருக்கலாம், தொழில்  நாணயத்தையும் எதிர்பார்க்கலாம். அதே வேளையில் குறைந்த முதலீடு, அதிக லாபம் என்ற வாசகம் தான் மோசடி திட்டங்களின் அடிப்படை. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, அரசு பரிந்துரைக்கும் திட்டங்களிலே நாம் முதலீடு செய்யாத போது, யாரோ ஒருவர் சொன்னார் அல்லது எங்கோ இருக்கும் நிறுவனம் உங்களுக்கா நிதி சுதந்திரத்தை அளிக்க போகிறது ?

பங்கு வர்த்தகத்தின் ரிஸ்க் புரியாமல் தான் சம்பாதித்த பணத்தையும், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பணத்தையும் கொண்டு சூதாடி விட்டு, பின்பு மானம் என சொல்லிக்கொண்டு தன்னை மாய்த்து கொள்வது ஏனோ !

ஒரு நிறுவனத்தை பொறுத்தவரை ஏதோவொரு பொருள் அல்லது சேவையை விற்பனை செய்யும் தொழிலை கொண்டிருக்க வேண்டும். வெறுமென ஆட்களை சேர்த்து அவர்களது பணத்தால் வாங்கி கொடுத்தால் உங்களுக்கு வருமானம் என சொன்னால் அது தொழிலாக கருதப்படுமா ? இந்த மோசடிக்கும், நடைமுறையில் இருக்கும் Referral Marketing என்பதற்கும் எந்த சம்மந்தமுமில்லை. இந்த புரிதலையும் நாம் கொண்டிருப்பது அவசியம்.

நம் முன் நித்தமும் காத்திருக்கும் அஞ்சலக சேமிப்பு, வங்கி டெபாசிட், அரசு பத்திரங்கள், தங்கம், பரஸ்பர நிதிகள், பங்குகள், ரியல் எஸ்டேட், தொழில் முனைவு போன்ற முதலீடுகளை, நம்மில் எத்தனை பேர் பயன்படுத்தியிருப்போம். நிதி பாதுகாப்பு, பணவீக்கம் மற்றும் முதலீட்டு ரிஸ்க் ஆகியவற்றை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறதா, கூட்டு வட்டிக்கும், இ.எம்.ஐ.(EMI) இரண்டுக்குமான வேறுபாடு என்ன என்பதனை பற்றி நாம் அறிந்து வைத்திருப்பது இன்றைய காலத்தின் அவசியம்.

ஆயிரங்களை போட்டு, குறுகிய காலத்தில் லட்சங்களையும், கோடிகளையும் உங்களால் அள்ள முடியுமென்றால், அந்த வாய்ப்பு முதலில் டாட்டா, அம்பானி போன்றவர்களுக்கு தான் தெரிந்திருக்கும். ஏனெனில் அவர்களிடம் உங்களை காட்டிலும் முதலீட்டு தகவல்கள் எளிதாக வந்து சேரும் வாய்ப்புகள் அதிகம். இல்லையென்றால் அவர்கள் ஏன் மோசடி திட்டங்களை தவிர்த்து விட்டு, பல்லாயிரம் ஏக்கர்களை வாங்கி தொழிற்சாலை அமைத்து, பணியாளர்களை அமர்த்தி, முதலீடுகளையும் ஈர்த்து கொண்டு தொழில் வளர்ச்சிக்காக ஓடுகின்றனர். அவர்களும் ஒரே நாளில் 10,000 கோடி ரூபாயை போட்டு, ஒரு லட்சம் கோடி ரூபாயாக மாற்றலாமே !

விரைவாக பணம் பண்ண வேண்டும் என்ற பேராசையே, குறுக்கு வழியை தேர்ந்தெடுக்க உதவுகிறது. இது தான் மோசடி பேர்வழிகளின் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. சரி நாம் விரைவாக பணம் சம்பாதித்து விட்டாலும் பின்பு அதனை மறுமுதலீடாக எங்கே கொண்டு செல்ல போகிறோம் ?

உங்களிடம் ஒரு கோடி ரூபாய் பணமிருந்தால் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் ? 

உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக கிடைத்தால், அதனை புரியாத திட்டத்தில் முதலீடு செய்வீர்களா அல்லது சூதாடுவீர்களா ? இங்கே, இரண்டும் ஒன்று தான். உதாரணமாக உங்களிடம் ஒரு கோடி ரூபாய் பணமிருந்தால் ஆண்டுக்கு 7 சதவீத வட்டி வருவாய் தரும் திட்டத்தில் முதலீடு செய்து விட்டு, மாதாமாதம் 60,000 ரூபாயை வருமானமாக பெறலாம். இதற்காக மெனெக்கெட தேவையில்லை, நாம் பள்ளிகளில் படித்த வட்டி விகித கணக்கு தான். வங்கி அல்லது பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்தால் போதும்.

நிதிச்சுதந்திரம் பெறுவது என்பது முதலில் உங்களது குடும்பத்திற்கான நிதி பாதுகாப்பை(Financial Protection) உறுதி செய்வது தான். தேவையான அளவு டேர்ம் மற்றும் விபத்து காப்பீடு, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மருத்துவ காப்பீடு, அவரச காலத்திற்கு தேவையான பண கையிருப்பு ஆகியவை தான். கடனில்லா வாழ்க்கையை வாழ விரும்புவதும் உங்களுக்காக நிதி சுதந்திரமே.

நிதி இலக்குகளை(Financial Goals) சரியாக நிர்ணயித்து முதலீடு செய்தல், தொடர்ச்சியாக முதலீடு செய்து வருதல் மற்றும் மினிமலிசம் வாழ்க்கை முறையை பழகுதல் – இது தான் நிதி சுதந்திரத்திற்கான வழி. செலவுகளை குறைத்து எவ்வாறு சேமிக்க பழகுகிறோமோ அது போல வருவாய் பெருக்கத்திற்கான வழியையும் கண்டறிய வேண்டும். அதற்காக புரியாத விஷயங்களை செய்ய வேண்டாம்.

உங்களுக்கு ரியல் ஸ்டேட், பங்கு முதலீடு, தொழில்முனைவு புரியவில்லை என்றால், கற்று கொள்வதற்கான நேரத்தை கொடுங்கள். நேரமில்லை என சொன்னால், வங்கி அல்லது பரஸ்பர நிதி முதலீட்டை தேர்ந்தெடுக்கலாம். பணவீக்கத்தை எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும். ரிஸ்க் இல்லாத முதலீடு என்று இங்கும் எதுவும் இல்லை. நீங்கள் எடுக்கும் ரிஸ்க்கும் உங்களுக்கு நன்றாக புரிந்திருக்க வேண்டும்.

ஆற்றில் காலை விட்டாலும், சேறு விழுந்தால் பரவாயில்லை… ஆனால் நாம் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s