Motorcycle Auto sales

வாகன விற்பனை இல்லாத ஏப்ரல் மாத நிலவரம் – ஊரடங்கு உத்தரவு

வாகன விற்பனை இல்லாத ஏப்ரல் மாத நிலவரம் – ஊரடங்கு உத்தரவு 

No Vehicle Sales in April 2020 – Automobile Industry

கோவிட்-19 வைரஸ் தாக்கம், உலக பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளது. நம் நாட்டின் பொருளாதாரமும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மந்தநிலையில் இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 3ம் தேதி வரை சொல்லப்பட்டிருந்த ஊரடங்கு, மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு மே 17ம் தேதி வரை இருக்கும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வைரஸ் தாக்கம் குறைவாக இருக்கும் பகுதிகளில் சில தொழில்கள் மற்றும் சேவைகளை மீண்டும் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது சொல்லப்பட்டுள்ள ஊரடங்கு, உலகின் மிகப்பெரிய ஊரடங்கு உத்தரவாக கருதப்படுகிறது.

மூன்றாம் ஊரடங்குக்குள் செல்ல போகும் நாம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் ஊரடங்கில் இருந்ததால் பெரும்பாலான துறைகளின் விற்பனை மற்றும் அதனை சார்ந்த வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மந்தநிலையில் இருந்து வந்த நாட்டின் வாகன விற்பனை, கடந்த ஏப்ரல் மாத ஊரடங்கிலும் சுணக்கத்தை சந்தித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுசூகி(Maruti Suzuki) ஏப்ரல் மாதம் உள்நாட்டில் எந்த வாகனத்தையும் விற்கவில்லை என கூறியுள்ளது. அதே வேளையில், 630 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. துறைமுகங்கள் வழியாக இந்த ஏற்றுமதி நடைபெற்றுள்ளதாக மாருதி நிறுவனம் கூறியுள்ளது.

மஹிந்திரா(Mahindra & Mahindra) நிறுவனம் கடந்த மாதம் 733 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது கவனிக்கத்தக்கது. இருப்பினும், உள்ளூர் விற்பனையில் எதுவும் சொல்லப்படவில்லை. விவசாயம் சார்ந்த துறையில் மட்டும் சுமார் 4,700 வாகனங்களை ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்துள்ளது மஹிந்திரா.

இது போல எஸ்கார்ட்ஸ்(Escorts) நிறுவனம் உள்ளூர் விற்பனையில் 705 வாகனங்களையும், ஏற்றுமதியில் 92 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளது. ஐஷர் மோட்டார்ஸ் தனது ஏப்ரல் மாத அறிக்கையில், 91 இரு சக்கர வாகனங்களை(Royal Enfield) விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவால் வாகன விற்பனை மட்டுமில்லாமல், அதன் உற்பத்தியும் பெரிதும் பாதித்துள்ளது. நாட்டில் உள்ள வாகன உற்பத்தி ஆலைகள் மூடப்படும் ஒவ்வொரு நாளும் சுமார் 2300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் அமைப்பு(SIAM) கூறியுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

One thought on “வாகன விற்பனை இல்லாத ஏப்ரல் மாத நிலவரம் – ஊரடங்கு உத்தரவு”

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.