social distance

வரும் நாட்கள் எப்படி இருக்கும் ? பொருளாதார ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்

வரும் நாட்கள் எப்படி இருக்கும் ? பொருளாதார ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் 

Things to consider financially on Covid-19 (Coronavirus)

கோவிட்-19 மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகிய இரண்டும் தாண்டவமாடும் சூழ்நிலையில் நிதி சார்ந்து திட்டமிடுவது அவசியமாகும். தற்போதைய நிலையில் அவசியமற்ற வகையில் செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும், மற்றவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொழில் சார்ந்த சேவைகளில் பெரும்பாலானவை தற்போது இல்லையென்றாலும், உணவு பொருட்கள் மற்றும் இன்டர்நெட் சேவையின் தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தேவையான அளவுக்கு மட்டும் உணவு பொருட்களை கையிருப்பில் வைத்து கொள்ளுங்கள். உணவை வீணாக்க வேண்டாம். தேவைக்கு ஏற்றாற் போல், பசிக்கு மட்டுமே உணவை தயார் செய்து உண்பது சிறந்தது. இதனால் மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய உணவு பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கப்பெறும்.

வரும் நாட்களில் இதன் விலை அதிகமாக செல்லாமல் இருப்பதும், பெரியளவில் உற்பத்தி இல்லாமல் கையிருப்பை பகிர்ந்தளிப்பதும் நம் ஒவ்வொருவரின் இன்றியமையாத கடமையாக செயலாற்ற வேண்டும். நம் நாட்டில் தற்போதைய நிலையில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால், அதற்கேற்ற உணவை எடுப்பதிலும் கவனம் வேண்டும். அதிகமான குளிர்ச்சி சார்ந்த உணவினை சாப்பிட்டு விட்டு, பின்பு சிரமப்பட வேண்டாம். எனவே சரிவிகித உணவை எடுத்து கொள்வதில் அக்கறை காட்டுங்கள்.

வீட்டிற்குள் இருப்பது சௌகரியம் என இருக்காமல், சிறிது நேரம் உடல் மற்றும் மனம் சார்ந்த பயிற்சிகளை செய்வது நம்மை ஊக்கப்படுத்தும். தொலைக்காட்சி, கைபேசி மற்றும் இதர தொழில்நுட்ப கருவிகள் இருக்கிறது என்பதற்காக பொழுது போக்க வேண்டாம். உங்களுக்கு பிடித்த விஷயங்களை வீட்டிற்குள் இருந்து செய்யலாம்.

இணைய பயன்பாட்டை முடிந்தவரை குறைத்து கொள்ளுங்கள். அவசியமுள்ள சேவைக்கு மட்டும் இன்டர்நெட் சேவையை பயன்படுத்துங்கள். இணைய வழியிலான வேலைகளை மேற்கொள்பவர்களுக்கு உங்களது குறைந்த இணைய பயன்பாட்டு சேவை உதவும். பெரும்பாலானவர்கள் ஒரே நேரத்தில் இணைய சேவையை பயன்படுத்துவதால், அதன் வேகமும் குறையும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இன்டர்நெட் கட்டணத்தை அதிகப்படுத்த நீங்களே காரணமாகி விடாதீர்கள்.

கொரோனா வைரஸ் தாக்கம் அடுத்த சில மாதங்களில் குறைய வாய்ப்பிருந்தாலும், பொருளாதார மந்தநிலை அடுத்த இரண்டு வருடங்களுக்கு மேல் செல்லும். இதன் காரணமாக பெரும்பாலானவர்கள் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும். குடும்ப பட்ஜெட்டிலும் துண்டு விழும். எனவே சிக்கனத்தை மேற்கொள்ளுங்கள். பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வோர் கவனமாக கையாண்டு நீண்ட கால தேவைக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கிறேன் என கையில் இருக்கும் பணத்தை இழக்க வேண்டாம்.

வரவிருக்கும் நாட்கள், பொருளாதார ரீதியாக சவாலாக இருக்கும் என்பதால், அவசர தேவைக்கு பணத்தை வங்கியிலோ அல்லது வீட்டிலோ கையிருப்பாக வைத்து கொள்ளுங்கள். முறையான டேர்ம் பாலிசி(Term Insurance) மற்றும் மருத்துவ காப்பீட்டை(Health Insurance) பெறுவது இச்சமயத்தில் அவசியம். தற்போதைய நிலையில் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் கொரோனா வைரஸ் பாதிப்பையும் காப்பீட்டு திட்டத்தில் சேர்த்துள்ளது.

பங்குகளில் முதலீடு செய்ய உள்ளோர், காப்பீடு மற்றும் அவசரகால நிதியை(Emergency Fund) ஏற்படுத்தி விட்டு மட்டுமே, முதலீடு செய்ய துவங்க வேண்டும். நீங்கள் வாங்க கூடிய பங்குகளின் நிறுவனங்கள் கடனில்லாமல்(Debt Free) இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். அவற்றின் பணவரத்து(Cash Flow) அதிகமாக இருக்கிறதா என கவனியுங்கள். நிறுவனம் லாபமீட்டவில்லை என்றாலும் பரவாயில்லை. கடன் அதிகமாக கொண்டிருக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலையாட்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் திணறும் நிறுவனங்கள், உலக பொருளாதார வீழ்ச்சியில் காணாமல் போய்விடும் என்பதை மறக்க வேண்டாம்.

பொருளாதார வீழ்ச்சியை தாங்கி நிற்கும் நிறுவனங்கள் தான் தற்போது அவசியம், லாபமல்ல. பங்குச்சந்தை வீழ்ச்சி தொடர்ச்சியாக நடைபெற்றாலும், சிறுக சிறுக முதலீடு செய்வதே சிறந்தது. உதாரணமாக உங்களிடம் ரூ. 50,000 தொகை பங்குகள் வாங்க உள்ளது என்றால், ஒவ்வொரு பெரு வீழ்ச்சியிலும் 10 சதவீதத்திற்கு மேல் முதலீடு செய்யாதீர்கள். நீங்கள் செய்யப்போகும் முதலீடு நீண்ட காலத்திற்கு உரியது. எனவே கவனம் சிதறாமல் முதலீடு செய்வது அவசியம்.

எஸ்.ஐ.பி. முதலீட்டை மேற்கொள்வோர், தற்போதைய சூழ்நிலையில் முதலீட்டை நிறுத்த கூடாது. முடிந்தால், கூடுதல் தொகையை முதலீடு செய்வது நல்லது. மாத வருமானத்தில் சிக்கல் எதுவும் இருந்தால் மட்டுமே, உங்கள் எஸ்.ஐ.பி. தொகையை குறைத்து முதலீடு செய்யலாம். அதே வேளையில் முதலீடு செய்யாமல் இருக்க வேண்டாம்.

வங்கிகளில் வட்டி விகிதங்கள் இனி வரும் காலங்களில் குறைய கூடும் என்பதால், குறைந்த அளவு ரிஸ்க் எடுத்து பரஸ்பர நிதிகளில் கிடைக்கப்பெறும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். உடனடியான தேவைக்கு உங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் வைத்து கொள்ளுங்கள். இது போன்ற சூழ்நிலையில் மற்றவர்களுக்கு உதவ முடிந்தால், அதனை செய்யுங்கள். அதற்காக உதவுகிறேன் என சுய விளம்பரம் தேவையில்லை.

ஊரடங்கு நிலை சில மாதங்களுக்கு பின்பு விலக்களிக்க நேர்ந்தாலும், நீங்கள் முடிந்தவரை சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். தேவையில்லாத செலவுகளை வரவிருக்கும் காலங்களில் குறைத்து கொள்வது அவசியம். கடனில்லா வாழ்க்கையும் சுகமே.

மனித நேயமே தற்போதைய தேவை, மரியாதை அல்ல…

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை  

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s