இனி உங்கள் எஸ்.ஐ.பி.(SIP) முதலீட்டிற்கும் யூ.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும் வசதி
Start your SIP Investment using UPI Payments now
அஞ்சலகம் மற்றும் வங்கியில் நாம் சேமிக்கும் மாதாந்திர தொடர் வைப்பு கணக்கு(Recurring Deposit – RD) போன்று தான் எஸ்.ஐ.பி. முதலீடும். பரஸ்பர நிதி நிறுவனங்களின் முதலீட்டு சேவையில் இரு வகை மூலம் நாம் முதலீடு செய்யலாம். முதலாவதாக ஒருமுறை முதலீட்டின் மூலம் மேற்கொள்ளலாம். அதாவது நம்மிடம் உள்ள ஒரு குறிப்பிட தொகையை முழுவதுமாக ஒரு தவணையில் முதலீடு செய்வது தான் Lumpsum Investment.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதனை நாம் மற்றொரு முறை முதலீடு செய்தால் அதற்கு கூடுதல் கொள்முதல்(Additional Purchase) என சொல்வர். ஒரு முறை மட்டும் அல்லது மற்றொரு முறை செய்யும் முதலீட்டில் எந்த கால வரையறையும் இல்லை. நாம் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம். இந்த முதலீட்டு முறையில் திட்டங்களை பொறுத்து குறைந்தபட்ச முதலீட்டு தொகையும் மாறுபடும். சில திட்டங்களுக்கு குறைந்தபட்ச தொகையாக 500 ரூபாயாக இருக்கலாம். இல்லையெனில் 5000 ரூபாயாக அமையலாம்.
இரண்டாவது வகை தான் எஸ்.ஐ.பி.(Systematic Investment Plan) முதலீடு, நாம் ஏற்கனவே சொன்ன அஞ்சலக ஆர்.டி. சேமிப்பை போல. இங்கே மாதாந்திர முதலீடு மட்டுமில்லாமல், வாராந்திர, மூன்று மாதத்திற்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை என நாம் தொடர்ச்சியாக முதலீடு செய்யும் சாதனத்தை தேர்ந்தெடுக்கலாம். தானியங்கி முறையில்(Auto Clearance) செயல்படும் இத்திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடாக ரூ. 100 அல்லது ரூ. 500 ஆக அமையலாம்.
பொதுவாக மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் ரொக்கமாக பணத்தை செலுத்த முடியாது. நமது வங்கி கணக்கை மியூச்சுவல் பண்ட் நிறுவனத்துடன் இணைப்பதன்(One Time Mandate – OTM) மூலம், தானியங்கியாக நமது வங்கி கணக்கிலிருந்து மாதாமாதம் நாம் கேட்டு கொண்ட தொகை பிடிக்கப்படும். இது ஒரு பாதுகாப்பான முறையே. இரண்டாவது முறையாக காசோலை(Name Cheque) வழங்குவதன் மூலம், நாம் முதலீட்டை மேற்கொள்ளலாம்.
இன்று பெரும்பாலானோர் இணைய வழியாக வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதால், நெட் பேங்கிங்(Internet Banking) வசதி மூலமும் பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீடு செய்யலாம். பீம்(BHIM), கூகுள் பே, போன் பே(Phone pe) மற்றும் இதர யூ.பி.ஐ. செயலிகள் மூலமும் நாம் பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஒருமுறை முதலீட்டிற்கு மட்டுமே யூ.பி.ஐ.(UPI) சேவை வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எஸ்.ஐ.பி. முதலீட்டிற்கும் இதனை பயன்படுத்தலாம் என பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த பண பரிவர்த்தனை செயலி மூலம் அதிகபட்சமாக ரூ. 2000 வரையுள்ள எஸ்.ஐ.பி முதலீட்டிற்கு பயன்படுத்தலாம். அதற்கு மேலான தொகைக்கு நாம் மேலே சொன்ன முறையை பயன்படுத்த நேரிடும். இனி வங்கியில் கிடைக்கப்பெறும் நெட் பேங்கிங் வசதி இல்லையென்றாலும், யூ.பி.ஐ. மூலம் உங்கள் மியூச்சுவல் பண்ட் எஸ்.ஐ.பி. முதலீட்டை துவங்கலாம்.
இந்திய பரஸ்பர நிதி முதலீடுகளின் மொத்த சொத்து மதிப்பு 26.54 லட்சம் கோடி ரூபாய். செயல்பட கூடிய நிலையில்(Active SIP) உள்ள எஸ்.ஐ.பி. முதலீட்டு கணக்குகளின் எண்ணிக்கை சுமார் 2.96 கோடி. அதே வேளையில் நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்தவர்களின் பங்களிப்பு வெறும் 2 சதவீதத்திற்கு குறைவாக தான் உள்ளது. தற்போதைய நிலையில், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்ய கடினமாக ஆவணங்கள் சமர்ப்பிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் என்று பெரிதாக எதுவுமில்லை. வருங்காலங்களில் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, மேலை நாடுகளில் உள்ளது போன்று, இந்த திட்டத்தில் கணக்கு துவங்குவதற்கு கட்டணம் விதிக்கப்படலாம். ஆவணங்கள் சார்ந்து கட்டுப்பாடுகளும் மாறுபடலாம். எனவே, இப்போதைய காலத்தில் ஒரு பரஸ்பர நிதி முதலீட்டு கணக்கை துவங்குவது சிறந்தது. இன்று பெரும்பாலான திட்டங்களுக்கு நாம் மாதாந்திர எஸ்.ஐ.பி. முதலீடாக ரூ. 100 ஐ கொண்டு துவங்கலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை