வேலையிலிருந்து தொழில்முனைவோராக செல்ல விருப்பமா ?
Employee to Entrepreneurship – The Road to Economic Wisdom
பெரும்பாலோர் விருப்பமில்லாமல் பணிச்சுமையை ஏற்பதற்கு காரணம் – பொருளாதார தேவை. இது இன்றைய அதிக சம்பளம் மற்றும் ஆடம்பரத்துக்கும் பொருந்தும். உணவு, உடை, இருப்பிடம் என்ற மூன்று அத்தியாவசிய தேவைகள் மறைந்து, இன்று விருப்பத்தேவை மட்டும் தான் தலை தூக்கி உள்ளது. எனக்கு எது தேவை என்பதை விட, எனக்கு இது வேண்டும் என்ற கொள்கை இன்று வளர்கிறது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இன்றைய தலைமுறையில் பணிச்சுமை என்பதை விட, வேறு ஒரு வார்த்தை புதுமையாக்கப்பட்டுள்ளது – இருக்கும் பணியிலிருந்து இளமையில் ஓய்வு பெற்று புதிதாக தொழில் தொடங்குவது / தொழில்முனைவோராக விரும்புவது.
- கடனை குறைத்து கொள்ளுங்கள் / கடனில்லா வாழ்க்கை
இன்று பெரும்பாலானவர்கள் தொழில்முனைவில் தோல்வியடைய காரணமாக சொல்லப்படுவது சரியான நிதி திட்டமிடல் இல்லாதது தான். நாம் செல்ல வேண்டிய இடத்திற்கான பயணசீட்டு, அவசர தேவைக்கான முன்பணம், முதலுதவிக்கான மருந்துகள், துணிமணிகள் மற்றும் பயண வழிகாட்டிகள் போன்றவற்றை திட்டமிட்டாலே நமது பயணம் சுகமானதாக இருக்கும். இதே போன்று நாம் வேலையிலிருந்து தொழில்முனைவுக்கு செல்லும் முன், நமக்கான கடன்களை குறைப்பது அல்லது கடனை முழுவதுமாக அடைத்து விட்டு(Debt Free) தான், புதிய பயணத்திற்கு தயாராக வேண்டும்.
கடனை அடைக்க தொழில் செய்ய வருகிறேன் என்ற சிந்தனையுடன் தொழில் செய்ய வருவது சிறந்ததாக அமையாது. தொழிலை ஆரம்பித்தவுடன் வீடு, வாகனம் வாங்கவுள்ளேன் என்ற சிந்தனையும் சரியான அணுகுமுறையல்ல.
- சேமிப்பு மற்றும் முதலீட்டை அதிகப்படுத்துங்கள்
எனக்கு தான் கடன் ஏதுமில்லையே, அப்புறம் என்ன ஒரு தொழிலை துவங்க வேண்டியது தானே என முடிவெடுக்காதீர்கள். இதுவும் ஆழம் தெரியாமல் தொழிலில் காலை விடுவது போல தான்.
தொழிலை துவக்கும் முன், உங்கள் மற்றும் உங்களது குடும்பத்திற்கான சேமிப்பு மற்றும் முதலீடு எவ்வாறு இருக்கிறது என்ற நிலவரத்தை கருத்தில் கொள்ளுங்கள். அவசர கால நிதியை(Emergency Fund) ஏற்படுத்த தயாராகுங்கள். உங்களது குடும்பத்திற்கு தேவையான மாத செலவுகள் போக, காப்பீடு, முதலீடு, வரிகள் ஆகியவற்றையும் செலவுகளாக கணக்கில் எடுத்து கொள்ளுங்கள். அவசர கால நிதிக்கான தொகை சராசரியாக 18-24 மாதங்கள் மதிப்பு மடங்கில் இருக்குமாறு சேமித்து கொள்ளுங்கள்.
அவசர கால நிதி என்பது உங்களையும், உங்களது குடும்பத்தையும் தொழில் செய்யும் காலத்தில் நிதி சார்ந்த பாதுகாப்பை தரும். அவசர கால நிதியிலிருந்து எந்த ஒரு சூழ்நிலையிலும், உங்கள் தொழிலுக்கு தேவையான தொகையை எடுக்க முயலாதீர்கள். நீங்கள் தொழிலுக்கான முதலீட்டை தனியாக சேமித்து வைத்திருப்பதே சிறந்தது.
- உங்களுக்கு பிடித்த விஷயத்தை தொழிலாக மாற்ற சிந்தியுங்கள்
புதிய தொழிலை தேர்ந்தெடுப்பது அல்லது தொழில்முனைவு என்பது இன்றைய காலகட்டத்தில் சவாலான காரியமே. இருப்பினும் வாய்ப்புகள் ஏராளமாக கொட்டி கிடக்கிறது. நீங்கள் ஏற்கனவே பார்த்து வந்த வேலையை தொழிலாக மாற்ற முயற்சிக்கலாம். நீங்கள் கற்ற கல்வியை கொண்டும் தொழில் துவங்கலாம். பொதுவாக உங்களது தினசரி நடவடிக்கைகளை(Regular Activities) கொண்டு தொழிலை தேர்ந்தெடுப்பது சாதகமாக அமையும்.
உங்களுக்கு ஒரு பொருளை விற்பனை செய்வது எளிதான காரியம் எனில் அதனை பற்றி சிந்திக்கலாம். எனக்கு எழுத்து திறன் நன்றாக(Writing Skills) இருக்கும், நான் நன்றாக மேடைகளில் பேசுவேன்(Video Presentation), நிதி திட்டமிடல்(Financial Planning) செய்வது எனது அன்றாட வழக்கம் போன்றவை உங்களுக்கான தொழிலை ஏற்படுத்த உதவும்.
பொதுவாக தொழில்முனைவு(Entrepreneurship) என்பது மக்களுக்கான தேவையை பூர்த்தி செய்வதும், வாடிக்கையாளர்களின் தினசரி சிக்கல்களை தீர்ப்பதே(Problem Solving) ஆகும். எனவே, உங்களது பொழுதுபோக்கு அல்லது அன்றாட சிந்தனைகள் இதனுடன் ஒத்துபோகின்றனவா என அறிந்து வைத்திருப்பது நன்று. நீங்கள் செய்யவிருக்கும் தொழிலை பற்றி, ஏற்கனவே சந்தையில் இருக்கும் தொழில் புரிபவர்களிடம் அதன் சாதக-பாதகங்களை தெரிந்து வைத்திருப்பது பின்னாளில் உங்களுக்கு உதவ கூடும். சரியான தொழில் நிபுணர்களிடம் ஆலோசனையை பெறுவதும் நமக்கு கூடுதல் பலம்.
- வேலையிலிருந்து விடுபடுங்கள்
மேலே சொன்ன மூன்றையும் சரியாக செயல்படுத்தி விட்டீர்களானால், நீங்கள் பார்க்கும் வேலையிலிருந்து விடுபடலாம். நீங்கள் வேலை பார்த்த நிறுவனத்தில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பணபலன்கள் ஏதுமிருந்தால் அதனை சரியாக பெற்று கொள்ளுங்கள். வேலை பார்த்த நிறுவனத்திலிருந்து நீங்கள் இணக்கத்துடன் வெளியேறுவது நல்லது. ஏனெனில், நீங்கள் செய்யப்போகும் தொழில், நீங்கள் வெளியேறிய நிறுவனத்தின் தொழிலாகவும் இருந்திருக்கலாம். சுமுகமாக செல்லும் பட்சத்தில், பின்னாளில் உங்கள் தொழிலுக்கு தேவையான ஆர்டர்கள் இந்த நிறுவனத்திடம் இருந்தே பெற்று கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
- உங்கள் விருப்பத்தை தொழில்முனைவாக்குங்கள்
உங்களது விருப்பத்தை நீங்கள் தொழிலாக மாற்றிய பிறகு, நீங்கள் தான் அதற்கு உரிமையாளர். ஒரு நிறுவனத்தில் நாம் வேலை பார்க்கும் போது, பொதுவாக எட்டு மணி நேரமே நமக்கான பொறுப்பாக இருந்திருக்கும். ஆனால் நீங்கள் செய்யும் தொழிலில் நீங்கள் மட்டுமே முழுநேர பொறுப்பாளர். தொழிலின் ஆரம்பத்தில் உங்கள் நிறுவனத்தின் வரவு-செலவுகளை நீங்களே திட்டமிட பழகுங்கள். உங்கள் புதிய தொழிலுக்கு நீங்கள் தான் விளம்பர தூதர்(Brand Ambassador) என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- சொத்து சேர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்
மாத சம்பளத்திலிருந்து விடுபட்டு நிச்சயமற்ற வருவாயை(தொழில்முனைவு) நோக்கி செல்லும் போது, உங்களது மாத சேமிப்பு மற்றும் முதலீட்டை இடைவிடாமல் தொடர முயற்சியுங்கள். பெறக்கூடிய வருவாயில் முதலில் சேமித்து விட்டு, பின் செலவழிப்பது(Spend After Save) என்பது தொழில்முனைவோருக்கு ஒரு சவாலான காரியமே. தொழிலுக்கு தேவைப்பட்டால் மட்டுமே கடன் வாங்குங்கள்.
தொழிலின் வருவாய் மூலம் நீண்ட கால சொத்துக்களை சேர்க்க முனையுங்கள். அது பங்குகளாகவோ, தொழிலுக்கு தேவையான இயந்திரம், நிலமாகவோ அல்லது உங்கள் நிறுவனத்தின் காப்புரிமையாகவோ இருக்கலாம். தொடர் கற்றலுக்கு(Learning Business Skills) எப்போதும் நேரத்தை ஒதுக்குங்கள்.
- தொழில்முனைவை தானியங்கியாக மாற்றுவதன் அனுகூலம்
நீங்கள் தொழில்முனைவை தொடங்கிய சில வருடங்களில், அதனை தானியங்கியாக(Automation) செயல்பட அனுமதியுங்கள். தொழில்முனைவு என்பது சுய தொழில் உரிமையாளர்(Self Employed) அல்ல. தொழில்முனைவு என்பது பலருக்கு வேலை அளிக்கக்கூடியதாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரிவதாகவும் இருக்க வேண்டும். உங்கள் தொழிலில் தொழில்நுட்பத்தை சேருங்கள், உங்களை மட்டுமே அந்த தொழில் நம்பியிருக்காமல் தானாகவே செயல்பட செய்யுங்கள்.
இது தான் பணம் பணம் பண்ணுவதின்(Passive Income) ரகசியம் !
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை