120 கோடி தொலைபேசி வாடிக்கையாளர்கள் – ஜியோவின் அதிரடி சாம்ராஜ்யம்
1200 Million Telephone Subscribers in India – Reliance Jio’s Action Empire
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வில் ஆரம்பித்த ரிலையன்ஸ் ஜியோவின் வேகம் இன்று நாடு முழுவதும் அதன் அதிரடி சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்திய தொலைத்தொடர்பு துறை ஆணையம்(Telecom Regulatory Authority of India -TRAI) வெளியிட்ட தகவலில் நாட்டில் உள்ள தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஜனவரி 2019ம் காலத்தின் படி, 120.3 கோடியாகும். இது கடந்த வருடம் டிசம்பர் மாத முடிவில் 119.7 கோடி சந்தாதாரர்களை கொண்டிருந்தது கவனிக்கத்தக்கது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நாட்டில் உள்ள மொத்த தொலைபேசி வாடிக்கையாளர்களின்(Telephone Subscribers) எண்ணிக்கை 120 கோடி என்ற அளவை தற்போது மூன்றாவது முறையாக கடந்துள்ளது. இதற்கு முன் ஜூலை 2017 மற்றும் மே 2018 காலங்களில் 120 கோடி சந்தாதாரர்கள் என்ற எண்ணிக்கையை கடந்து இருந்தது. வாடிக்கையாளர்களின் அதிகரிப்பில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்(Airtel) மற்றும் பி.எஸ்.என்.எல்.(BSNL) ஆகிய நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியமானதாகும்.
ரிலையன்ஸ் ஜியோ(Reliance Jio) நிறுவனம் புதிதாக 93 லட்சம் சந்தாதாரர்களை ஜனவரி மாதத்தில் அதிகரித்துள்ளது. இதே காலத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 9.82 லட்சம் வாடிக்கையாளர்களை புதிதாக பெற்றுள்ளது. டிசம்பர் மாதத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை இழந்த ஏர்டெல் நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு லட்சம் புதிய சந்தாதாரர்களை சேர்த்துள்ளது.
சொல்லப்பட்ட மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரித்த நிலையில், வோடபோன் ஐடியா(Vodafone Idea) மற்றும் டாடா டெலிசர்வீஸ் நிறுவனங்கள் மொத்தமாக 44 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எம்.டி.என்.எல். நிறுவனமும் சுமார் 4900 சந்தாதாரர்களை ஜனவரி மாதத்தில் இழந்துள்ளது.
பிராட்பேண்ட் சேவையில்(Broadband Internet Services) ஜியோ நிறுவனம் 28.94 கோடி சந்தாதாரர்களையும், ஏர்டெல் 11 கோடி சந்தாதாரர்களையும் மற்றும் வோடபோன் ஐடியா 10.98 கோடியும், பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2 கோடி சந்தாதாரர்களையும் ஜனவரி மாதத்தில் கொண்டுள்ளது. கம்பி வழியிலான(Wireline) தொலைத்தொடர்பு இணைப்பில் டிசம்பர் மாதத்தில் 2.18 கோடி என்றிருந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஜனவரி மாத காலத்தில் 2.17 கோடியாக குறைந்தது.
கம்பி வழியிலான பிராட்பேண்ட் சேவையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் முன்னணியில் உள்ளது. இதன் ஜனவரி மாத சந்தாதாரர்கள் எண்ணிக்கை 91.7 லட்சமாக உள்ளது. இந்த துறையில் ஏர்டெல் 23 லட்சம் இணைப்பையும், ஹாத்வே கேபிள் நிறுவனம்(ரிலையன்ஸ்) 7.9 லட்சமும், எம்.டி.என்.எல். 7.7 லட்சமும் மற்றும் அட்ரியா(Atria Convergence -ACT) நிறுவனம் 14 லட்ச இணைப்பையும் கொண்டுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை