Gold price increases

தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும் – என்ன செய்யலாம் ?

தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும் – என்ன  செய்யலாம் ?

What to do while the prices of Gold increases ?

 

நம் நாட்டிற்கும், தங்கத்திற்கும் இடையே மிகவும் ஆழமான நட்பு இருந்து கொண்டிருப்பதை வரலாற்று புள்ளிவிவரங்களில் நாம் அறியலாம். நமது குடும்பத்திற்கு தேவையான நிதி ஆதாரம் இல்லாவிட்டாலும், தங்கத்தை அதுவும் நகைகளாக வாங்குவது நம்மிடையே இன்னும் குறையவில்லை. தங்கம் விலை இந்த மாதத்தின் துவக்கத்தில் (பிப்ரவரி 2, 2019) 24 காரட் விலை கிராமுக்கு ரூ. 3358/- ஆகவும், 22 காரட் விலை கிராமுக்கு 3170 /- ரூபாயாகவும் வர்த்தகமானது. 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 2613/- ஆக இருந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்த விலை கடந்த ஐந்து வருடங்களில் இருந்த அதிகபட்ச விலையாக சொல்லப்படுகிறது. பண்டிகை காலங்கள் மற்றும் முகூர்த்த நாட்களை தொடர்ந்து தங்கத்தின் விலை தற்சமயம் அதிக விலையில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பிலும் ஸ்திரத்தன்மை(Stability on Dollar Conversion) உள்ளதால், தங்க இறக்குமதி விலையிலும்(Gold import) வித்தியாசம் காணப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி அதிகரித்து இருந்ததும், விழா காலங்களை முன்னிட்டு மக்களிடையே தங்கத்தின் தேவை அதிகரித்ததும் தான் தங்க நகைகளின் விலையை அதிகரித்துள்ளது.

 

கடந்த ஜனவரி மாதம் மட்டும் தங்கத்தின் இறக்குமதி 46 டன்கள், இது கடந்த 2018 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 64 சதவீதம் அதிகமாகும். கடந்த 2013ம் ஆண்டில் மும்பை சந்தையில் தங்கத்தின் பென்ச்மார்க்(Benchmark Gold Futures) மதிப்பில் 10 கிராம் தங்கத்தின் விலை அதிகபட்சமாக ரூ.35,074 /- வரை சென்றது. 2013ம் வருடம் பிப்ரவரி 4ம் தேதியன்று 10 கிராம் விலை 33,646 ரூபாயாக இருந்தது. இந்த விலை மதிப்பில் தான் தற்போது வர்த்தகமாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

 

பொதுவாக நமது நாட்டில் தங்க நகைகளின் விலை அதிகரிப்பதற்கு காரணமாக சொல்லப்படுவது(Reason) அயல்நாட்டில் இருந்து தங்க இறக்குமதி (டாலர் மதிப்பில்), கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள் மற்றும் உள்ளூர் தேவைகள்(Domestic Demand). தங்கத்தின் அதிகபட்ச இறக்குமதியால் நாட்டின் நிதி பற்றாக்குறை கணக்கிலும்(Fiscal Deficit) சுமை அதிகரிக்கிறது. அரசாங்கத்தை பொறுத்தவரை தங்கம் ஒரு இழப்புக்காப்பு(Hedging) சார்ந்த சாதனமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. இது போர் நிலவும் அவசர காலங்களில் மட்டுமே பயன்பட முடிகிறது. மற்ற நேரங்களில் மக்களின் அணிகலன் விருப்பத்திற்காக மட்டுமே இது உபயோகப்படுத்தப்படும்..

 

கடந்த பத்து ஆண்டுகளில் தங்கத்தை ஒரு முதலீடாக(History of Gold prices) காணும் போது, அதன் வருமானம் வங்கிகளின் வைப்பு நிதி வட்டி விகிதத்தை ஒட்டியே இருந்துள்ளது. இந்த வருமானம் பணவீக்கத்தை(Inflation) தாண்டியதாக இருக்கவில்லை. ஆனால் கடந்த வருடம் பங்குச்சந்தை மந்தமாக இருந்ததால், அதனை காட்டிலும் தங்கத்தில் முதலீடு குறிப்பிடத்தக்க வருமானத்தை கொடுத்துள்ளது. சமீபத்தில் நாட்டின் பணவீக்கமும் குறைந்த அளவிலே உள்ளதால், தங்கத்திற்கு எந்த தாக்கமும் ஏற்படவில்லை. நிதி பற்றாக்குறையை குறைக்க அரசும் தங்கத்தின் இறக்குமதி விகிதத்தை குறைத்து வருவது கவனிக்கத்தக்கது.

 

தங்கத்தில் முதலீடு செய்கிறேன் என்று நாம் தங்க ஆபரணங்களை வாங்கி கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை. முதலீடு என்பது வளர்ச்சியை(Investment must grow) நோக்கி செல்ல வேண்டும். முதலீட்டிற்கு லாப-நட்டங்கள் இருக்கலாம். ஆனால் தேய்மானத்தை மட்டுமே கொண்டிருத்தல் கூடாது. அவ்வாறு காணும் போது, நாம் வாங்கும் தங்க நகைகள் தேய்மானத்தை மட்டுமே கொண்டுள்ளது, எனவே இதனை ஒரு சிறந்த முதலீடாக கருத முடியாது.

 

தங்கத்தின் விலை அதிகரிப்பை லாபமாக பெற விரும்புபவர்கள் முதலீட்டு சாதனமாக தங்க பத்திரங்கள்(Gold Bonds), தங்க இ.டி.எப்.(Gold ETF) திட்டங்களில் முதலீடு செய்யலாம். தங்கள் பெண் குழந்தைகளுக்கு நகை வாங்க விரும்புபவர்களும் இது போன்ற திட்டத்தில் முதலீடு செய்து விட்டு, பிற்காலத்தில் தேவைப்படும் நாட்களில் இதனை விற்று வரும் பணத்தில் தங்கத்தினை அதன் மதிப்பில் வாங்கி கொள்ளலாம். நமக்கான நகைகளும் புதிதாக கிடைக்கும், பழைய நகைகள் மற்றும் தேய்மானம்(Depreciation) போன்ற விஷயங்கள் நடைபெறாது. அரசாங்கம் வெளியிடும் தங்க பத்திரங்களில் குறிப்பிட்ட காலத்தில் வட்டியும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.

 

நம்மிடம் இருக்கும் தங்க நகைகள் நமக்கு இப்போது தேவைப்படவில்லை என்றால், வங்கிகள் அளிக்கும் தங்க டெபாசிட் திட்டத்தில்(Gold Deposit Scheme) நமது தங்கத்தை முதலீடாக கொண்டு, வட்டி வருமானத்தை பெறலாம். தங்க நகைகள் நமக்கு அவசரகாலத்தில் உதவலாம் என்று நாம் கூறினாலும், இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில் உங்கள் வங்கி அட்டையும்(Debit & Credit Cards), ரொக்கமும்(Cash is King) தான் உதவ நேரிடும். தங்கத்தின் விலை அதிகரிப்பு உலகளாவிய பொருளாதார காரணிகள் மற்றும் டாலரின் மதிப்பை சார்ந்தே உள்ளன என்பதை மட்டும் நாம் மறந்திற கூடாது. நமக்கான முதலீட்டு வாய்ப்பை நாம் சரியாக தேர்ந்தெடுக்கும் போது, வருமான வளர்ச்சி தானியங்கியாகவே செயல்படும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s