இந்தியாவின் முதல் தப்பியோடிய பொருளாதார குற்றவாளி – விஜய் மல்லையா
Vijay Mallya – A Fugitive Economic Offender
நாட்டின் முதல் தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக விஜய் மல்லையா நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். யுனைடெட் ஸ்பிரிட்ஸ் (United Spirits) நிறுவனத்தின் முன்னாள் சேர்மனும், கிங்பிஷர் விமான சேவையின் (Kingfisher Airlines) நிறுவனருமான விஜய் மல்லையா கடந்த சில வருடங்களுக்கு முன்பு, பல்வேறு வங்கிகளில் கடனை வாங்கி விட்டு, அதனை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டார்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
விஜய் மல்லையா வங்கிகளில் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து ரூ. 9000 கோடியாகும். இவர் பெற்ற கடனை திரும்ப செலுத்தாமல் நாட்டில் சுமார் 17 வங்கிகள் வாராக்கடனில் சிக்கியுள்ளன. கடந்த 2016 ம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச்சென்ற மல்லையா (Vijay Mallya) இதுவரை நாட்டிற்கு திரும்பவும் இல்லை. வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் வருமான வரித்துறையால் பல வழக்குகள் தொடரப்பட்டது கவனிக்கத்தக்கது. இது சம்மந்தமாக பணமோசடி நடவடிக்கை தடுப்பு நீதிமன்றத்தில் (Prevention of Money Laundering Act – PMLA Court) வழக்கொன்று இருந்தது.
சனிக்கிழமை (05-01-2019) அன்று இந்த நீதிமன்றத்தில் சொல்லப்பட்டதாவது, விஜய் மல்லையா நாட்டிலிருந்து தப்பியோடிய பொருளாதார குற்றவாளி (Fugitive Economic Offender). இவரே நாட்டின் முதல் தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் மல்லையா ஏற்கனவே நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அனைத்து மனுக்களையும் நிராகரிப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2005 ம் ஆண்டு தொடங்கப்பட்ட கிங்பிஷர் விமான சேவை நிறுவனம், 2009 ம் வருடத்தில் ரூ. 7000 கோடி கடனை (Debt) கொண்டிருந்தது. 2012 ம் வருடத்தில் தான் பெற்ற கடனை திரும்ப செலுத்துவதாக உத்தரவாதம் கொடுத்தும், பின் அதனை செலுத்தவில்லை. 2015 ம் வருடம் மதுபானங்களை தயாரிக்கும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்திலிருந்து விலக்கப்பட்டார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் சரணடையும் படி லண்டன் நீதிமன்றத்தால் கேட்டு கொள்ளப்பட்டது.
தற்போது நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட பொருளாதார குற்றவாளியாக விஜய் மல்லையா இருப்பதால், இனி இவருடைய சொத்துக்கள் உள்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாட்டிலிருக்கும் சொத்துக்களும் முடக்கப்படும் என தெரிகிறது. முன்னர் ஒரு முறை, தான் ஒரு ரூபாய் கூட வங்கியில் கடன் வாங்கவில்லை எனவும், கிங்பிஷர் நிறுவனம் தான் கடன் வாங்கியுள்ளதாக விஜய் மல்லையா கூறியிருந்தார். மேலும் அவர் கூறுகையில், ‘ தொழிலில் தோல்வியை தழுவியதால் தான் கிங்பிஷர் நிறுவனம் கடன் அடைந்ததாகவும், நிறுவனம் பெற்ற கடனுக்கு தான் ஒரு ஜாமீன்தாரர் மட்டுமே ‘ எனவும் கூறியுள்ளார்.
நாட்டில் உள்ள விமான சேவை நிறுவனங்கள் பெரும்பாலும் கடனில் தத்தளித்து கொண்டு தான் உள்ளன. சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் (Jet Airways) நிறுவனமும் திவாலாகும் நிலையில் உள்ளது கவனிக்கத்தக்கது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை