Why your dreams never come true ?
உங்கள் கனவுகள் ஏன் பெரும்பாலும் பலிப்பதில்லை(நிறைவேறுவதில்லை) ?
நம்மில் பெரும்பாலோருக்கு, ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடனோ, பதவி உயர்வு/ஊதிய உயர்வு (அ) போனஸ் ஏதும் கிடைத்ததும் நமக்கு பலவித கற்பனை கனவுகள் வரும்; வளரும்.
எனது கனவு கார்(Car) வாங்குவது, ஒரு அபார்ட்மெண்ட்(Apartment) வாங்குவது, வெளிநாடு சுற்றுலா(Foreign Trip) செல்வது (அ) குறைந்தபட்சமாக நண்பர்களுக்கு விருந்து வைப்பது(Treat) என்று கனவுகள் நீண்டு கொண்டே போகும். ஆனால் நமக்கு கிடைப்பதோ ஒரே ஒரு சம்பளம், வருடத்திற்கு ஒரு ஊதிய உயர்வு, சில சமயம் போனஸ், அத்திபூத்தாற்போல் பதவி உயர்வு. உண்மையில் நாம் நமக்கு கிடைத்த பணத்தையும், கண்ட கனவையும் கொண்டு என்ன செய்வதென்றே புலப்படுவதில்லை.
ஒரு நிறுவனத்தில் நமக்கு கொடுக்கப்படும் பணம் அந்நிறுவனத்தின் வளர்ச்சி (அ) நமது திறமையான செயல்பாடு காரணமாக இருந்தாலும், நிதர்சன உண்மை அது விலைவாசியின் (பணவீக்கம் – Inflation) அடிப்படையிலே நிர்ணயிக்கப்படுகிறது.
தற்சமயத்தில் நம் அடிப்படை வாழ்வாதாரத்தை காத்துக்கொள்ளவே அந்த பணம் போதுமானதாக இருக்கும். நமது கனவுகளுக்காக அல்ல 🙂
அதனால் தான் நாம் பெரும்பாலும் நமக்கு தேவையற்ற ஒரு பொருளை வாங்கும் போது பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்படுகிறோம்.
நாம் கனவு எதுவும் காணக்கூடாதா என்ன ? தாராளமாக கனவு காணலாம்; அத்தனைக்கும் ஆசைப்படலாம் ! அதற்கு முன் நமக்கு எது தடையாக உள்ளது என்று பார்த்தால் அது விலைவாசி (பணவீக்கம்) தான்.
பணவீக்கத்தை நாம் புரிந்துகொண்டு செயல்படுவது தான் நமது கனவு நிறைவேறுவதற்கான பாதை !
பணவீக்கம்:
நாம் இன்று வாங்கும் பொருளும், நாளை வாங்க போகும் பொருளும் ஒரே விலையில் கிடைப்பதில்லை. காரணம், தேவைக்கும் உற்பத்திக்கும் உள்ள வேறுபாடு தான். அது தான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விலையை நிர்ணயிக்கின்றன.
நாம் பல மாதமாக சிறுகச்சிறுக சேர்த்து வைத்த பணத்தை கொண்டு ஒரு இரு சக்கர வாகனம் வாங்கவேண்டுமென்று சென்றால், அதன் விலை ஏறிவிட்டதே, இன்னும் கொஞ்சம் பணம் தேவைப்படுமோ என்று யோசிப்போம்; வீடு கட்ட பக்காவாக பிளான் எஸ்டிமேட் போட்டு வைத்து வீடு கட்டி கொண்டிருக்கும் போது, தீடீரென்று மணல், சிமெண்ட் விலை உயர்ந்து விடும். இப்படித்தான் நம் பெரும்பாலான கனவுகள் நாம் நினைத்த படியே நடப்பதற்கு சாத்தியமில்லை, இந்த விலைவாசியால்(பணவீக்கம்) !
வருமானத்தின் /பணத்தின் எதிரியை கையாள்வது எப்படி ?
நமது வருமானதிற்கோ (அ) பணத்திற்கோ வரிகள் எதுவும் எதிரி அல்ல; மாறாக இந்த பணவீக்கம் தான் ! ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ஆண்டும் இந்த விலைவாசி பொதுவாக புள்ளியியல் நிபுணர்களால் விவாதிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. அவற்றிள்ளுல உண்மை என்னவோ நமக்கு தெரியவில்லை என்றாலும், நாம் பணவீக்கத்தை சமாளித்தாக வேண்டும். நமது கனவுக்கான வருமானம்/சேமிப்பு பணவீக்கத்தை தாண்டியதாக இருக்க வேண்டும். அதாவது கடந்த 5 வருடத்திற்கான சராசரி ஆண்டு பணவீக்கம் 8% என்றால், நீங்கள் உங்கள் கனவுக்காக குறைந்தபட்சம் 8% கூடுதலாக வருமானம் கிடைக்குமாறு சேமியுங்கள்; முதலீடு செய்யுங்கள்.
கனவும் மெய்ப்படும் !
– நன்றி, வர்த்தக மதுரை.