மிகப்பெரிய நிறுவனங்கள், மிகப்பெரிய வீழ்ச்சி – இந்திய பங்குச்சந்தை வரலாறு

மிகப்பெரிய நிறுவனங்கள், மிகப்பெரிய வீழ்ச்சி – இந்திய பங்குச்சந்தை வரலாறு

Top Stocks and Big Crash in a Single day – Indian Stock Market

கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாள் வெள்ளிக்கிழமை அன்று (21-09-2018) இந்திய பங்குச்சந்தையை ஒரு ஆட்டம் காண வைத்தது திவான் ஹவுசிங் (DHFL -Dewan Housing Finance Corporation Ltd) பங்கின் வீழ்ச்சி. ஐ.எல்.எப்.எஸ் (IL & FS) குழுமத்தின் கடன் பிரச்சனை மற்றும் DHFL நிறுவனத்தின் கடன் பத்திரங்கள் திடீர் விற்பனை பங்குச்சந்தையை வெகுவாக பாதித்தன.

 

அதன் தொடர்ச்சியாக திவான் ஹவுசிங் பங்குகள் ஒரே நாளில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்து வர்த்தகத்தின் முடிவில் (-42.5 %) நிலை பெற்றது. இதன் தாக்கம் எஸ் வங்கியிலும் (Yes Bank) தெரிந்தது. திவான் ஹவுசிங் நிறுவன பங்கின் ஒரு நாள் வீழ்ச்சி மும்பை பங்குச்சந்தையை 1000 புள்ளிகளுக்கும் மேலாக இறக்கம் காண வைத்தது.

 

நாட்டில் வங்கிகளின் வாராக்கடன் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFC) செயல்பாடும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது. ஒரு பங்கினுடைய வீழ்ச்சி (DHFL) என்பது இந்திய பங்குச்சந்தையில் ஒன்றும் புதிதல்ல, எனினும் வரும் நாளில் சந்தை மீட்கப்பட்டாலும், வீழ்ச்சியடைந்த நிறுவனத்தின் பங்கு பெரும்பாலும் எழுச்சி காண்பதில்லை.

 

இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் வீழ்ச்சியடைந்த பங்குகளின் பட்டியலில் திவான் ஹவுசிங் இடம் பெற்றிருந்தாலும், மிகப்பெரிய வீழ்ச்சியடைந்த நிறுவனம் என காணும் போது, சத்யம் நிறுவனம் (Satyam Computers) தான் முதலிடத்தில் உள்ளது. இது ஒரு மிகப்பெரிய நிறுவனமாகவும் இருந்தது கூட. அதன் நிறுவனர் திரு. ராமலிங்க ராஜு செய்த குற்றத்தால், சத்யம் நிறுவன பங்கு ஒரே நாளில் 77 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. அதாவது சந்தை விலை ரூ. 143 /- கொண்ட சத்யம் பங்கு, ஒரே நாளில் 77 % வீழ்ச்சி அடைந்து வர்த்தகத்தின் முடிவில் 32 ரூபாயில் முடிவடைந்தது (ஜனவரி 2009).

( Read this post after the advertisement… )

 சத்யம் நிறுவனத்தை தொடர்ந்து 2013 ம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில், பைனான்சியல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் (Financial Technologies) பங்கு ஒரே நாளில் 64 சதவீதம் வீழ்ந்தது. 388 ரூபாய் விலை இருந்த பங்கு, வர்த்தக முடிவில் 153 ரூபாயாக நிலை கொண்டது. ஸ்பாட் மார்க்கெட்டில் நிகழ்ந்த முறைகேட்டால் பைனான்சியல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்கு தொடர்ச்சியாக இரண்டு நாட்களில் 80 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சி கண்டது. இதன் மூலம் தனது சந்தை மூலதனத்தில் சுமார் 3500 கோடி ரூபாயை இழந்தது.

 

இதனை அடுத்து மூன்றாவது மிகப்பெரிய வீழ்ச்சி கண்ட நிறுவனம் கோர் எஜுகேஷன் (Core Education). நிறுவனர்கள் தங்களது பங்குகளை அடமானம் வைத்ததை விற்று விட்டதாக வந்த செய்தி (பிப்ரவரி 2013), இந்த பங்கின் விலையை ஒரே நாளில் 62 சதவீதம் வீழ்ச்சி அடைய வைத்தது. 286 ரூபாய் இருந்த பங்கு, வர்த்தகத்தின் முடிவில் 110 ரூபாயாக முடிவடைந்தது.

 

தொடர்ச்சியாக மூன்று நாள் இறக்கத்திற்கு பின் அந்த பங்கின் விலை 81 % வீழ்ச்சி அடைந்து 56 ரூபாயில் நிலை கண்டது. இதனை போல யூனிடெக் (Unitech), ஜி.டி.எல் (GTL), பூர்வா (Purva), அக்ருதி (Akruti), இன்.பி.பீம். அவென்யூ (Infibeam – Updated on 28th September,2018) போன்ற நிறுவனங்களின் பங்குகளும் வெவ்வேறு காலத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டது. தற்போது திவான் ஹவுசிங் நிறுவன பங்கின் வீழ்ச்சி, அதன் சந்தை மூலதனத்தில் சுமார் 8000 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னர் சந்தையில் பெரிய வீழ்ச்சி கண்ட நிறுவனங்களில் சில இன்னும் அந்த பங்கின் விலையில் மீளவில்லை. மற்ற சில நிறுவனங்களோ பங்குச்சந்தையிலே அடையாளம் காணப்படவில்லை.

 

பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் வெறும் பங்குகள் என பார்க்காமல், அந்த நிறுவனத்தின் அடிப்படை பகுப்பாய்வுகள் (Fundamental Analysis) மற்றும் தொழில் முறையையும் கவனித்து பின்பு வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

 

பங்குச்சந்தை கடலில் யாரும் நீந்தலாம், ஆனால் எதிர்நீச்சல் போட முயற்சிக்க வேண்டாம்.

 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.