மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்(பங்குச்சந்தை) தெரியுமா ?
History of Madras Stock Exchange(MSE)
தமிழ்நாட்டை தலைநகரமாக கொண்ட சென்னை நீடித்த வரலாற்றையும், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பையும் கொண்டிருக்கிறது. 2022ம் ஆண்டு முடிவில் சென்னையின் பொருளாதார மதிப்பு சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய ரூபாயில் 7.87 லட்சம் கோடி). இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு இருப்பதற்கு, சென்னையின் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதியும் ஒரு காரணம் எனலாம். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில் சென்னையின் பங்களிப்பு மட்டும் சுமார் 33 சதவீதமாகும். உலகின் பிரபலமான நகரங்களில் முதல் 50 நகரங்களை எடுத்துக் கொண்டால், அவற்றில் சென்னையின் இடத்தை தவிர்க்க முடியாதது.
ஆசியாவின் டெட்ராய்ட்(Detroit of Asia) என அழைக்கப்படும் சென்னை, வாகனத்துறைக்கான உதிரி பாகங்கள் உற்பத்தியில் முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளது. நாட்டின் வாகன உதிரி பாகங்கள் பிரிவில் சென்னை மட்டும் 35 சதவீத பங்கினை கொண்டுள்ளது. இந்திய நான்கு சக்கர வாகன உற்பத்திப் பிரிவில் இதன் பங்களிப்பு மட்டும் 30 சதவீதமாக உள்ளது. கனரக வாகனங்கள், டயர்கள், வாகன சோதனை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, துறைமுகங்கள், உலகின் முக்கிய நிறுவனங்களின் அலுவலகங்கள் என வாகனத்துறைக்கு தேவையான பெரும்பாலான நிலைகளை சென்னை உள்ளடக்கியுள்ளது.
அப்படியிருக்க, சென்னையில் ஒரு பங்குச்சந்தை…
கடந்த 1937ம் ஆண்டு துவக்கப்பட்டது தான் மெட்ராஸ் பங்குச்சந்தை(தலைமை அலுவலகம்: சென்னை). நாட்டின் நான்காவது பங்குச்சந்தையாகவும், தென் இந்தியாவில் துவக்கப்பட்ட முதல் பங்குச்சந்தையாகவும், மெட்ராஸ் பங்குச்சந்தை இருந்தது. இந்த சந்தை மேலே சொல்லப்பட்ட காலத்தில் துவக்கப்பட்டிருந்தாலும், 1957ம் ஆண்டு தான் இச்சந்தைக்கு தேவையான ஒழுங்குமுறைகளும், இன்னபிற வழிமுறைகளும் சட்டமாக்கப்பட்டு இயக்கத்தில் வந்தன.
ஆரம்ப நிலையில் ஐந்து நிறுவனங்களின் துணை மூலம் தோற்றுவிக்கப்பட்ட மெட்ராஸ் சந்தை, பின்னர் பெரிய சந்தையாக சுமார் 120 உறுப்பினர்களுடன் இயங்கியது. 1996ம் ஆண்டு முதல் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட சந்தையாக, 120 பங்குத்தரகு அலுவலகங்களுடன், மெட்ராஸ் பங்குச்சந்தை செயல்பட்டது.
2001ம் ஆண்டு வாக்கில் சுமார் ரூ.3,000 கோடி வர்த்தக அளவை கொண்டிருந்த மெட்ராஸ் பங்குச்சந்தை, 2012ம் ஆண்டில் சுமார் 19,900 கோடி ரூபாய் வர்த்தகம் என்ற அளவில் வளர்ச்சியடைந்தது. 2001ம் ஆண்டில் சொல்லப்பட்ட 3,000 கோடி ரூபாய் வர்த்தகம் என்பது அப்போதைய மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையை ஒப்பிடுகையில், இது மூன்று சதவீதம் என்ற அளவில் மட்டுமே இருந்துள்ளது.
மெட்ராஸ் பங்குச்சந்தையில் சுமார் 1,785 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டிருந்தது. மெட்ராஸ் பங்குச்சந்தைக்கு ஒரு துணை நிறுவனமும் உண்டு – எம்எஸ்இ பைனான்சியல் சர்வீஸஸ்(MSE Financial Services). 2012ம் ஆண்டு வாக்கில் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி(SEBI) அறிவித்த ஒரு செய்தியால், மெட்ராஸ் பங்குச்சந்தையை மூடுவதற்கு காரணமாக அமைந்தது. இந்தியாவில் உள்ள ஒரு பங்குச்சந்தை குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய்க்கு பங்குகளில் பணப்புழக்கத்தை(Minimum Liquidity) ஏற்படுத்த வேண்டுமென்பது தான். அதாவது ஒரு முதலீட்டாளரோ, வர்த்தகம் செய்பவரோ தான் வாங்கியிருக்கும் பங்குகளை விற்க முனைந்தால், மற்றொரு புறம் வாங்குவதற்கு ஆள் வேண்டுமே, அது தான் இந்த பணப்புழக்கம்(Liquidity).
மேற்சொன்ன அறிவிப்பை தொடர முடியாத நிலையில் பெங்களூர் பங்குச்சந்தையுடன், மெட்ராஸ் பங்குச்சந்தை இணைக்கப்பட்டது. பின்னாளில் இச்சந்தையும் மூடப்பட்டது. இதனைத் தொடந்து 2015ம் ஆண்டின் மே மாதத்தில் தனது வர்த்தக செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக மெட்ராஸ் பங்குச்சந்தை அறிவித்தது. பின்னர் செபியும் அதனை ஏற்றுக் கொண்டது. 77 வருட பாரம்பரிய பங்குச்சந்தையாக திகழ்ந்த மெட்ராஸ் பங்குச்சந்தை 2015ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.
ஹர்ஷத் மேத்தா, கேத்தன் பரேக் என 1990 மற்றும் 2000களில் இந்திய பங்குச்சந்தை ஆட்டம் கண்ட நிலையில், 1992ம் ஆண்டு துவக்கப்பட்ட தேசிய பங்குச்சந்தை மற்றும் ஆசியாவின் பழமையான மும்பை பங்குச்சந்தை போன்ற ராட்சத அலைகளுக்கு முன்னர் தென் இந்தியாவின் முதற் பங்குச்சந்தை நிற்க இயலவில்லை. நாடெங்கிலும் எண்ணற்ற பங்குச்சந்தைகள்(20க்கும் மேற்பட்ட) இருந்த நிலையில், அவற்றை கையாள்வது கடினம் மற்றும் முதலீட்டாளர் நலனை பாதுகாக்க இது போன்ற நிகழ்வுகளை செபி(SEBI) ஏற்படுத்தியிருந்தது.
இந்தியப் பங்குச்சந்தையில் தற்போதைய முதலீட்டாளர் பங்களிப்பு மற்றும் விழிப்புணர்வு அன்றைய காலத்தில் இல்லாததும் ஒரு காரணமே !
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை