Tag Archives: Initial Public offering

கடந்த பத்து வருட கால இந்திய முதன்மைச் சந்தை(ஐ.பி.ஓ) எப்படி இருந்துள்ளது – 2024 தரவு ?

கடந்த பத்து வருட கால இந்திய முதன்மைச் சந்தை(ஐ.பி.ஓ) எப்படி இருந்துள்ளது – 2024 தரவு ?

IPO(Initial Public Offer) Performance in the Indian Stock Market Since 2014

 

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலத்தில், டீமேட் கணக்குகளின் எண்ணிக்கையும், பங்குச்சந்தையில் ஈடுபடும் சிறு முதலீட்டாளர்களின் வரவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐந்து வருடங்களாக பங்குச்சந்தையில் முதன்மைச் சந்தையான ஐ.பி.ஓ. வெளியீட்டில் ஆர்வம் காட்டும் சில்லறை முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வந்துள்ளது. இதற்கு சந்தை பெரிய அளவிலான இறக்கத்தை காணாமல் இருப்பதும் ஒரு காரணமாக உள்ளது.

நாட்டின் பங்குச்சந்தையில் பிரதான சந்தைகளாக மும்பை பங்குச்சந்தையும்(BSE), தேசிய பங்குச்சந்தையும்(NSE) உள்ளது. 1875ம் ஆண்டு வாக்கில் துவங்கப்பட்ட மும்பை பங்குச்சந்தையில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பொதுவெளியில் பட்டியலிடப்பட்டுள்ளது. இச்சந்தையின் மதிப்பு  சுமார் 5.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும்(இந்திய ரூபாயில் 467 லட்சம் கோடி). 1992ம் ஆண்டில் துவங்கப்பட்ட தேசிய பங்குச்சந்தையில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 463 லட்சம் கோடி(5.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்).

தேசிய பங்குச்சந்தையின் முக்கிய குறியீடாக நிப்டி50ம், மும்பை பங்குச்சந்தையின் முக்கிய குறியீடாக சென்செக்ஸ் உள்ளது. மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையின் கீழ் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பட்டியலிட எஸ்.எம்.இ.(SME IPO) சந்தைகளும் கவனிக்கத்தக்கது. 

பொதுவாக ஐ.பி.ஓ.(Initial Public Offering) எனப்படும் முதன்மைச் சந்தையில் பட்டியலிட உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து பங்குகளை வாங்க மட்டுமே செய்வோம். இரண்டாம் நிலைச் சந்தையில்(Secondary Market) தான் பங்குகளை வாங்குவது மற்றும் விற்பது என முழு வணிகமும் நடைபெறும். 

ஐ.பி.ஓ. முறையில் முதலீடு செய்து லாபமீட்டலாமா ?

நடப்பாண்டில் இதுவரை 252 நிறுவனங்கள்(எஸ்.எம்.இ. உட்பட) இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஐ.பி.ஓ. முதலீட்டின் மூலம் திரட்டப்பட்ட மொத்தத் தொகை ரூ.70,667 கோடி. இதுவே பத்து வருடத்திற்கு முன்பு, அதாவது 2014ம் ஆண்டில் காணும் போது, 44 நிறுவனங்கள் சேர்த்து ரூ.1,494 கோடி முதலீடுகள் மட்டுமே திரட்டப்பட்டுள்ளது.

IPO Performance in India Since 2012 - 2024-sep

2012ம் ஆண்டுக்கு பிறகு, இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நாளில் அதிகபட்சமாக ஏற்றம் பெற்ற காலம், இந்த 2024ம் வருடம் தான். பட்டியலிடப்பட்ட நாளில் சராசரியாக சுமார் 47 சதவீத விலையேற்றத்தை பங்கு விலை பெற்றுள்ளது. 2019ம் ஆண்டில் பட்டியலிடப்பட்ட ஒட்டுமொத்த நிறுவனங்களை தற்போது வரை வைத்திருந்தால், இது சராசரியாக 376 சதவீத வளர்ச்சியை தந்திருக்கும். எனினும், குறிப்பிட்ட பங்கின் விலையில் கிடைத்த வளர்ச்சியை இது சுட்டிக்காட்டவில்லை. 

கடந்த பத்து வருட காலத்தில் ஒரே ஆண்டில் அதிகபட்ச ஐ.பி.ஓ. நிறுவனங்கள் பட்டியலிடப்படுவதும் இதுவே முதன்முறை(2024ம் ஆண்டு). நடப்பாண்டு இன்னும் முடிவடையாத நிலையில், இதுவரை வெளியிடப்பட்ட 252 நிறுவனப் பங்குகளில் 229 நிறுவனப் பங்குகள், சந்தையில் வெளியிடப்பட்ட நாளன்று ஏற்றத்தில் துவங்கியுள்ளது. சொல்லப்பட்ட 252 நிறுவனங்கள் 70,667 கோடி ரூபாயை முதலீடாக திரட்டிய நிலையில், தற்போது அதன் ஒட்டுமொத்த சந்தை மூலதன மதிப்பு(Market Cap) ரூ.4 லட்சம் கோடி.

Mainboard IPOs in India Since 2007

 கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஐ.பி.ஓ.(முதன்மை சந்தை) முறையில் முதலீடு செய்யலாமா ?

ஐ.பி.ஓ.(முதன்மை சந்தை) முறையில் முதலீடு செய்யலாமா ?

Can I invest in Initial Public Offering ?

பொதுவெளியில் ஒரு நிறுவனம் தனக்கு தேவையான முதலீட்டை பெறுவதற்கு இரண்டு விஷயங்களை செய்ய வேண்டும். ஒன்று தனியார் நிறுவனத்திலிருந்து பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாற்றி கொள்வது, மற்றொன்று பங்குச்சந்தையில் பட்டியலிட தேவையான விவரங்களை வெளியிடுவது.

முதலீட்டை பெற விரும்பும் நிறுவனம் பங்குச்சந்தை அமைப்பிடம் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு, ஒரு குறிப்பிட்ட நாளில் தனது நிறுவன பங்குகளை பட்டியலிடும். துவக்கத்தில் முதன்மை சந்தையில்(Primary Market) மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த பங்குகள் விண்ணப்பம் செய்யும் பங்குதாரர்களுக்கு, கணினி வரிசையில் மட்டுமே கிடைக்கப்பெறும். பின்னர் அவை இரண்டாம் நிலை சந்தையில்(Secondary Market) வாங்க மற்றும் விற்பதற்கு வெளியிடப்படும்.

முதன்மை சந்தையை தான் நாம் ஐ.பி.ஓ(IPO) என்கிறோம். இங்கே ஒரு நிறுவன பங்குகளுக்கான தேவையை உறுதி செய்யும். முதலீட்டாளர்களிடையே இந்த பங்கு வரவேற்பை பெறுகிறதா, எத்தனை மடங்கில் இந்த நிறுவன பங்குகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர் என்ற விவரங்களை காணலாம். இதற்கான காலம் ஓரிரு நாட்கள் இருக்கலாம். பின்னர் எப்படியும் இந்த பங்குகள் வர்த்தகமாக இரண்டாம் நிலை சந்தைக்கு வந்து தான் ஆக வேண்டும்.

முதன்மை சந்தையில் நிறுவனத்திடம் இருந்து பங்குகளை வாங்க மட்டுமே செய்வோம். இரண்டாம் நிலை சந்தையில் தான் வாங்கும் மற்றும் விற்கும் என முழு வர்த்தகம் நடைபெறும். பொதுவாக ஐ.பி.ஓ. முறையில் முதலீடு செய்வது நல்லதா என சிலர் கேட்கிறார்கள். குறுகிய காலத்தில் அதிக லாபம் பார்க்கலாமே  என கேட்பதுண்டு. உண்மையில் ஐ.பி.ஓ என்பது ஒரு நிறுவனம் தன்னை சந்தையில் அறிமுகப்படுத்தி கொள்ளும் காலம் தானே தவிர, வேறொன்றும் இல்லை.

  • ஐ.பி.ஓ வெளியீட்டில் கிடைக்கப்பெறும் பங்கு விலை தான் உண்மையான விலை என பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். சொல்லப்போனால் முதன்மை சந்தையில் ஒரு நிறுவனம் தன்னை நிலைநிறுத்த மற்றும் தனது முதலீட்டை பெற குறிப்பிட்ட பங்குதாரர்களிடம் பங்குகளை விற்றுவிட்டு செல்கிறது. இதற்கு பங்குச்சந்தை அமைப்புகள் ஒரு தளத்தை(Platform) ஏற்படுத்தி கொடுக்கிறது. இங்கே ஏற்ற-இறக்கம் காணப்படாததால், நிறுவனத்திற்கு தேவையான நிதியை சுலபமாக பெற்று விடும். அதே வேளையில் இது முதலீட்டாளர் பார்வையில் லாபமா ?
  • உலகின் மிகப்பெரிய ஐ.பி.ஓ. முதலீடு, கடந்த 2019ம் ஆண்டில் சவூதி ஆரம்கோ(Saudi Aramco) நிறுவனத்தில் நடந்தது. இதன் மதிப்பு சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இரண்டாவதாக அலிபாபா குழுமத்தின் 25 பில்லியன் டாலர்களும்,மூன்றாவது இடத்தில் சாப்ட்பேங்க் குழுமத்தின் 24 பில்லியன் டாலர்களும் உள்ளன.
  • ஐ.பி.ஓ. வில் வெளியிடப்படும் நிறுவனங்கள் சில சமயங்களில் மக்களிடம் பெயர்போன நிறுவனமாக இருக்கக்கூடும். உண்மையில் சந்தைக்கு வரும் நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கை முழுமையாக கிடைக்க பெறாது. ஐந்து வருடங்களுக்கான நிதி நிலை அறிக்கை மட்டுமே, முதன்மை சந்தைக்கு வரும் ஒரு நிறுவனத்திற்கு தேவைப்படும்.
  • முதன்மை சந்தைக்கு வரும் ஒரு நிறுவனத்தின் உண்மையான மதிப்பை நம்மால் அவ்வளவு எளிதாக கண்டறிய முடியாது. ஐந்து வருட நிதி அறிக்கையை கொண்டு, ஒரு நிறுவனம் நன்றாக செயல்படும் என எதிர்பார்ப்பது நம்மை ஏமாற்ற செய்யும். தனியார் நிறுவனத்திலிருந்து பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாறும் ஒரு நிறுவனத்தின் ஜாதகத்தை நம்மால் முழுமையாக காண முடியாது. அப்படியிருக்க நிதிநிலை அறிக்கைகளில் நாம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது.
  • ஆட்டுமந்தை கூட்டம் போல எல்லோரும் பங்கு வாங்குகிறார்கள் என நாமும் வாங்கி லாபம் பார்த்து விடலாம் என நீங்கள் ஐ.பி.ஓ முறையில் சென்றால், உண்மையில் அதன் பெயர் சூதாட்டமே, அவை முதலீடு அல்ல. நிறுவனத்தை பொறுத்தவரை தனது முதலீட்டை முதன்மை சந்தையில் தான் திரட்ட முடியும். அவ்வளவே. அவர்களுக்காக தான் அந்த தளம் உருவாக்கப்பட்டதே தவிர நீண்டகாலத்தில் முதலீடு செய்பவர்களுக்காக அல்ல.

புகையிலையை சிறிது நேரம் நுகர்ந்து கொள்கிறேன், நன்றாக இருக்கும் என நீங்கள் நினைத்தால், வாழ்நாள் முழுவதும் அது உங்களை தொற்றி கொள்ளும். அது போல தான் ஐ.பி.ஓ. குறுகிய கால லாப ஆசையும்.

  • ஒரு நிறுவனம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எதிர்காலத்தில் பெறுமா, அவை வெளிப்படையாக தகவலை சந்தைக்கு அளிக்குமா, முதலீட்டாளர்களான நமக்கு நீண்டகாலத்தில் என்ன பயனை அளிக்கப்போகிறது என்பதனை நாம் நீண்டகாலத்தில் தான் காண முடியும். வெறும், முதன்மை சந்தையில் பங்குகளை வாங்குவதால் அல்ல.
  • துவக்கத்தில் பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் மட்டுமே முதன்மை சந்தையில் பங்குகளை வாங்கலாம் என்ற நிலை இன்று மாறி, சிறு முதலீட்டாளர்களும் களம் இறங்குகின்றனர். நினைவில் கொள்ளவும், முதலீட்டு நிறுவனங்கள் வாங்கும் குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளை எப்போது விற்க கூடும் என உங்களுக்கு உடனடியாக தெரிவதில்லை. அவர்கள் வாங்கும் மற்றும் விற்பதற்கான காரணமும், காலமும் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் வாங்குவது, விற்பது  என அனைத்தும் மற்றவர்களின் பண முதலீடு தான். ஆனால், சிறு முதலீட்டாளரான நமக்கு ?

ஆசியாவின் மிகப்பெரிய நகை தொழிலை கொண்ட நிறுவனம் என கீதாஞ்சலி ஜெம்ஸ்(Gitanjali Gems) முதன்மை சந்தையில் பட்டியலிடப்பட்டது. தொடர்ச்சியான விற்பனை மற்றும் லாப வளர்ச்சி, இந்தியாவில் உள்ள நகை தொழிலில் 50 சதவீத பங்குகளை இந்த நிறுவனம் கொண்டிருக்கிறது என சொல்லப்பட்டது. பங்குகளுக்கான முதலீடும் அமோகமாக வந்தது.

இந்த பங்கின் விலை 600 ரூபாய்க்கு மேல் சென்ற காலமும் உண்டு. ஒரு ரூபாய்க்கு வந்து, பின்னர் பங்குச்சந்தையிலிருந்து தூக்கி வீசப்பட்டதும் மற்றொரு கதை. சொல்லப்பட்ட நிதி அறிக்கைகள் அத்தனையும் பொய் எனவும், அந்த நிறுவனம் எந்த தொழிலையும் மேற்கொள்ளாமல், பல போலி நிறுவனங்களை உருவாக்கியதும் மிகவும் தாமதமாக தான் வெளிவந்தது. ஐ.பி.ஒ. வில் முதலீடு செய்து விட்டு இந்த நிறுவனத்தில் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. கடந்த 2008ம் ஆண்டின் பங்குச்சந்தை வீழ்ச்சியில் இந்த நிறுவன பங்கின் விலை மிகவும் மலிவாக கிடைத்தது என முதலீடு செய்தவர்களும் இன்று முழு முதலீட்டை இழந்துள்ளனர்.

உலகின் முதல் 10 கோடீஸ்வரர்களில் ஒருவர் என போற்றப்பட்டவர், 1996-2006 காலங்களில் நாட்டின் மிக சிறந்த தொழில்முனைவோர், தொழிலதிபர் என பல விருதுகளை வாங்கியுள்ளார் இவர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள், பங்கு ஒன்றுக்கு 800 ரூபாய்  விலையிலிருந்து 80 பைசா வரை சென்றுள்ளதை பார்த்திருக்கலாம். குழும நிறுவனங்கள் அனைத்தும் கடனில் தத்தளித்து திவால் நிலைக்கு சென்று விட்டது. ஆம், அனில் அம்பானி அவர்களின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் குழும நிறுவனங்கள் தான். இது போல எண்ணற்ற நிறுவனங்களை சொல்லலாம்.

வெறும் பிராண்டுகளை மட்டுமே கொண்டு முதன்மை சந்தையில் ஒரு நிறுவனம் சாதித்து விட முடியாது. பின்னர் போலி நிறுவனங்களை பற்றியும், மோசடி பேர்வழிகளை பற்றியும் நாம் கவலைப்பட கூடாது. சந்தையில் நாம் முதலீடு செய்ய வந்திருக்கிறோம். லாபம் மட்டுமே நமது குறிக்கோளாக இருந்தாலும், நஷ்டத்தை தவிர்ப்பது அவசியமான ஒன்றாகும். நீங்கள் சந்தையில் நீண்டகாலத்தில் சம்பாதிக்க, முதலீடு செய்யப்போகும் நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடு மிகவும் முக்கியமாகும்.

குறைந்தது பத்து ஆண்டு கால நிதிநிலை அறிக்கைகள் தேவை. அதனை விட தேவையான ஒன்று, நிறுவனத்திற்கு கடன் எதுவும் உள்ளதா, நிறுவனர்களின் மதிப்பு மற்றும் செயல்பாடு எவ்வாறு உள்ளது, நிர்வாக திறன் எப்படி மற்றும் இந்த நிறுவனம் அதன் துறையில் உள்ள எதிர்கால சவாலை எப்படி கையாள போகிறது என்பதனை அறிவது அவசியமாகும்.

ஐ.பி.ஓ முறையில் வெளிவந்துள்ள நிறுவனங்களில் சுமார் 50 சதவீத நிறுவனங்கள், இரண்டாம் நிலை சந்தைக்கு வந்த அடுத்த ஐந்து வருடங்களில் தங்கள் மதிப்பை இழக்கின்றன என்று தரவுகள் சொல்கிறது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது பங்கு விலைக்கு தகுந்தாற் போல நிறுவனத்தின் வளர்ச்சி இல்லாமை, கடனில் சிக்கி தவிப்பது மற்றும் நிர்வாக திறன் குறைபாடு என மூன்று காரணிகளை முன்னிலைப்படுத்துகிறது.

கடந்த 20 வருடங்களில் பொதுவெளியில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க நிறுவனங்கள், தங்கள் முதன்மை சந்தை விலையை காட்டிலும் குறைவாக தான் தற்போது உள்ளதாக சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் ஐ.பி.ஓ முறையில் வெளிவரும் நிறுவனங்களும், ஸ்டார்ட் அப்(Startup) நிறுவனங்களும் பெரும்பாலும் தங்கள் இரண்டாவது முதலீட்டை பெறுவதில் தோல்வியடைகின்றன. இதன் காரணமாக அதன் மதிப்பும் பின்னாளில் விலை போவதில்லை.

நீண்டகால வளர்ச்சியை கருத்தில் கொள்ளும் போது, கடனில்லா நிறுவனங்களை தேர்ந்தெடுத்து சிறந்த நிர்வாகம் மற்றும் சீரான வருவாய் வளர்ச்சி இருக்கும்பட்சத்தில் அது சிறு முதலீட்டாளர்களின் நலனையும் பாதுகாக்கும்.

இன்று நிர்வாக குறைபாடு காரணமாக இரண்டாம் கட்ட முதலீட்டையும் பெறுவதில் சிரமப்பட்டு கொண்டிருக்கிறது யெஸ் வங்கி(Yes Bank). பங்கு விலையும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது எச்சரிக்கையை ஏற்படுத்துகிறது. பெரிய நிறுவனங்கள் மற்றும் பெரிய லாபம் என சொல்லப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் இன்று தின வர்த்தகர்களால் பந்தாடப்பட்டு, பங்குச்சந்தையிலிருந்து வெளியேறி வருகின்றன. அவற்றின் ஐ.பி.ஓ. வரலாற்றை பார்த்தால் நமக்கு தெரியும், அது ஏன் சோபிக்க தவறி விட்டனவென்று !

ஐ.பி.ஓ, இரண்டாம் கட்ட முதலீடு, மூலதனத்தை உயர்த்துவது, கடன்களை மறுசீராய்வு செய்ய முதலீட்டை பெறுவது, உரிமை பங்குகள், நிறுவனங்களை பிரித்தல் மற்றும் புதிய நிறுவனங்களை உருவாக்குதல் போன்றவற்றில் முதலீட்டாளர்கள் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும். இதெல்லாம் உங்களுக்கு புரியவில்லையா ? காலங்காலமாக தொழில் செய்து வரும் நல்ல மற்றும் சுமாரான நிறுவனங்களில் முதலீடு செய்து விட்டு நிம்மதியாக அமருங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com