எச்.டி.எப்.சி. வங்கியை தோற்றுவித்த ஐ.சி.ஐ.சி.ஐ. – ஒரு வங்கியின் வரலாறு
HDFC was promoted by ICICI(Industrial Credit and Investment Corporation of India)
என்ன, எச்.டி.எப்.சி. வங்கியை ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனம் தோற்றுவித்ததா என கேள்வி எனலாம். வாருங்கள் எச்.டி.எப்.சி.யின் வரலாற்றை பார்ப்போம்.
குஜராத் மாநிலத்தின் சூரத்தை சேர்ந்தவர் திரு.ஹஸ்முக் பரேக்(Hasmukhbhai Parekh). நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர், லண்டன் பொருளாதாரக் கல்வி மையத்தில் தனது படிப்பை முடித்து விட்டு, பின்னர் மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகவும், பங்குச்சந்தை தரகு நிறுவனத்தில் நிதிச்சந்தை சார்ந்தும் தனது அனுபவங்களை மெருகேற்றிக் கொண்டார். 1956ம் ஆண்டு வாக்கில் ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்தில் துணை பொது மேலாளராக பணிபுரிய இணைந்தார்.
அப்போது ஐ.சி.ஐ.சி.ஐ.(Industrial credit and Investment corporation of India) ஒரு அரசு பொதுத்துறை நிறுவனமாகும்(தனியார் நிறுவனம் அல்ல). இந்தியாவில் உள்ள சில அரசு பொதுத்துறை வங்கிகளும், உலக வங்கியும் ஒன்றிணைந்து உருவாக்கியதே ஐ.சி.ஐ.சி.ஐ. இந்நிறுவனத்தின் முதல் தலைவராக திரு. ஆற்காடு ராமசாமி முதலியார் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1994ம் ஆண்டில் துவக்கப்பட்ட ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இதன் துணை நிறுவனமாகும்.
பின்னர் காலப்போக்கில், ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனமும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும் இணைக்கப்பட்டு, தற்போது இந்தியப் பன்னாட்டு தனியார் வங்கிக் குழும நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனத்தின் வேலை பார்ப்போரின் எண்ணிக்கை மட்டும் 1,35,900 பேர். முன்னர் ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்தில் துணை பொது மேலாளராக பணிபுரிந்த ஹஸ்முக் பரேக் அவர்கள், பின்னர் அதன் தலைவராகவும், நிறுவன இயக்குனர் குழுவின் முக்கிய பதவியையும் வகித்து 1976ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இருப்பினும் ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனம் இவரது நிதி சார்ந்த ஆலோசனையை பெற்றுக் கொண்டு தான் இருந்துள்ளது.
நிதித்துறையில் தனக்கு கிடைத்த அளப்பரிய அனுபவத்தை கொண்டு, தனது 66வது வயதில் ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்தை போன்று ஒரு நிதி சார்ந்த வங்கியை துவக்க அவர் விரும்பினார். அந்த நிறுவனத்தின் பெயர் தான், ‘எச்.டி.எப்.சி.(HDFC)’. அப்போதைய அரசின் நிதிச் செயலாளராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் அவர்களிடம் ஹஸ்முக் பரேக் ஒருமுறை கூறியது, “எச்.டி.எப்.சி., இந்திய மக்களிடம் அறியப்படாத ஒரு நிறுவனம். ஆனால் இந்த முயற்சி வெற்றி பெறுமா என எனக்கு தெரியவில்லை”. இருப்பினும் நிறுவனத்தின் திட்டத்தில் எந்த மாற்றமுமின்றி கடந்த 1977ம் ஆண்டு இந்திய வணிக சமூகத்தின் முதலீட்டாளர்கள் மற்றும் சில அன்னிய நிறுவன முதலீடுகளுடன் எச்.டி.எப்.சி.(Housing Development Finance Corporation) நிறுவனம் துவங்கப்பட்டது.
அப்போது திரு.ஹஸ்முக் பரேக் அவர்களை மரியாதை செய்யும் விதமாக ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனமும் எச்.டி.எப்.சி. நிறுவனத்தை பற்றி விளம்பரப்படுத்தி மக்களுக்கு கொண்டு சென்றது கவனிக்கத்தக்கது. இந்திய நடுத்தர மக்களுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் ஒரு நிதி நிறுவனம் வேண்டுமெனவும், அது தனது கல்லூரிக்கால விருப்பம் எனவும் திரு.ஹஸ்முக் பரேக் ஒரு முறை கூறியுள்ளார். தனது ஓய்வுகாலத்தில் துவக்கிய ஒரு வங்கி, இன்று இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக உருவெடுத்துள்ளது. அதாவது மிகப்பெரிய ஒரு வங்கியில் வேலை பார்த்த இவர், அந்த வங்கியின் நிதி சார்ந்த மதிப்பை காட்டிலும் ஒரு வங்கியை ஏற்படுத்தியது இந்திய நிதித்துறையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் மற்றும் சிறப்பம்சம் கொண்ட அடமான நிதி(வங்கி) நிறுவனமாகவும் எச்.டி.எப்.சி. இருந்துள்ளது. இன்று இதன் சொத்து மதிப்பு சுமார் 420 பில்லியன் அமெரிக்க டாலர்கள். நிறுவனத்தின் இந்திய சந்தை மூலதன மதிப்பு(Market Cap) 12.51 லட்சம் கோடி ரூபாய். 2024ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் மட்டும் சுமார் 2.83 லட்சம் கோடி ரூபாய். எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் எச்.டி.எப்.சி. வங்கி(HDFC Bank). 2022ம் ஆண்டு வாக்கில் இரு நிறுவனமும் இணைக்கப்பட்டு தற்போது எச்.டி.எப்.சி. வங்கி என இயங்கி வருகிறது.
இந்நிறுவனத்தின் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 2.13 லட்சம் பேர். எச்.டி.எப்.சி. வங்கி இந்தியாவில் மட்டுமில்லாமல், அமெரிக்காவின் நியூயார்க் பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த வங்கிக் குழுமம் இன்று வங்கி சேவை, முதலீட்டு வங்கி சேவை, அடமானம், தனியார் முதலீடு, மியூச்சுவல் பண்டு, காப்பீடு, பங்கு தரகு, டிஜிட்டல் நிதி சேவை, ரிஸ்க் மேலாண்மை மற்றும் முதலீட்டு மேலாண்மை என பல துணை நிறுவனங்களை உள்ளடக்கியதாக விரிவடைந்துள்ளது.
2024ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) மட்டும் ரூ.4.55 லட்சம் கோடி. செப்டம்பர் 2024 முடிவில் நிறுவனத்தின் வாராக்கடன் தன்மை(Gross NPA) 1.36 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் தன்மை(Net NPA) 0.41 சதவீதமாகவும் உள்ளது.
எச்.டி.எப்.சி. நிறுவனம் நேரடியாக ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்தால் துவங்கப்படாவிட்டாலும், அந்த நிறுவனத்தின் முக்கிய பதவி வகித்த திரு. திரு.ஹஸ்முக் பரேக் அவர்களின் முயற்சியையே சாரும் !
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை