2024-25ம் நிதியாண்டில் நேஷனல் அலுமினியம்(நால்கோ) நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,268 கோடி
NALCO India reported a Net Profit of Rs.5,268 Crore in the FY 2024-25 Consolidated – Results
ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த முதன்மை அலுமினிய உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான தேசிய அலுமினிய கம்பெனி(National Aluminium Company) நிறுவனம் தனது 2024-25ம் நிதியாண்டுக்கான நிதி அறிக்கையை வெளியிட்டிருந்தது. நாட்டின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த பாக்சைட்- அலுமினா – அலுமினிய – மின்சார வளாகங்களை கொண்ட நிறுவனமாகவும் நால்கோ உள்ளது.
கடந்த 1981ம் ஆண்டு வாக்கில் துவக்கப்பட்ட இந்நிறுவனம் அலுமினா மற்றும் அலுமினியம் போன்ற உலோகங்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதன் உட்பிரிவுகளாக அலுமினிய கம்பிகள், உருட்டப்பட்டவை, கீற்றுகள்(Strips), பில்லெட்டுகள், கால்சின் செய்யப்பட்ட அலுமினா மற்றும் இதர அலுமினா பொருட்கள் உள்ளது. உலகளவில் குறைந்த விலையில் அலுமினியத்தை உற்பத்தி செய்யும் நிறுவனமாகவும் நால்கோ இருக்கிறது.
பொதுவாக பாக்சைட், அலுமினியம் உற்பத்திக்கான மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. அதே வேளையில் அலுமினியத்தின் தேவை கட்டுமானம், மின்னணுவியல், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பயன்படுகிறது. வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் பாக்சைட் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகிறது. ஆஸ்திரேலியா, சீனா, இந்தோனேசியா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற பகுதிகளில் பாக்சைட் அமைந்துள்ளன. இவற்றில் ஆஸ்திரேலியா உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக உள்ளது கவனிக்கத்தக்கது.
நால்கோ நிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் உள்நாட்டில் தான் பெறப்படுகிறது. ஏற்றுமதியில் இதன் வருவாய் முப்பது சதவீதமாக இருந்துள்ளது. 2024-25ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.16,788 கோடியாகவும், செலவினம் 9,280 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் இயக்க லாபம் 7,508 கோடி ரூபாயாகவும், இயக்க லாப விகிதம்(OPM) 45 சதவீதமாகவும் இருக்கிறது. பொதுவாக இத்துறையில் இயக்க லாப விகிதம் அதிக ஏற்ற-இறக்கங்களுக்கு உட்பட்டு உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மூலப்பொருட்களுக்கான செலவினம் உலகளாவிய சந்தையை சார்ந்திருப்பது தான்.
2024-25ம் நிதியாண்டில் நிறுவனத்தின் இதர வருவாய் 357 கோடி ரூபாயாகவும் நிகர லாபம் ரூ.5,268 கோடி எனவும் சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்தின் ஈவுத்தொகை விகிதம்(Dividend Yield) தற்போதைய பங்குவிலையில் சராசரியாக நான்கு சதவீதத்திற்கும் மேலாக உள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 2024-25ம் நிதியாண்டு முடிவில் ரூ.16,887 கோடி. நிறுவனத்தின் கூட்டு விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் 15 சதவீதமாகவும், இதுவே பத்து வருடங்களில் 9 சதவீதமாகவும் இருந்துள்ளது. லாப வளர்ச்சியை காணுகையில், ஐந்து வருட காலத்தில் 108 சதவீதமாகவும், இதுவே 10 வருடங்களில் 16 சதவீதமாகவும் இருந்துள்ளது.
2025ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் ரொக்க கையிருப்பு(Cash Equivalents) ரூ. 5,427 கோடி. கடந்த காலத்தில் நிறுவனத்தின் பணவரத்து(Cash Flow) கணிசமாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் நிறுவனர்களை பொறுத்தவரை, இது அரசு பொதுத்துறை நிறுவனம் என்பதால், ஒன்றிய அரசிடம் 51 சதவீத பங்குகள் கைவசம் உள்ளது. அன்னிய மற்றும் உள்நாட்டு நிதி மற்றும் முதலீட்டு நிறுவனங்களிடம் சராசரியாக 16 சதவீதப் பங்குகள் உள்ளது.
நால்கோ நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 33,765 கோடி ரூபாய். நிறுவனத்தின் பி.இ. விகிதம் தற்போது 6.5 என்ற மடங்குகளில் உள்ளது(மே 2025). பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(ROE) ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 20 சதவீதமாகவும், பத்து ஆண்டுக்காலத்தில் 14 சதவீதமாகவும் இருக்கிறது. நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 121 மடங்குகளிலும், கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 0.01 என்ற அளவிலும் உள்ளது.
நிறுவனத்தின் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.97 என சொல்லப்பட்டிருந்தாலும், தற்போதைய பங்கு விலை(ரூ.184), அதன் தள்ளுபடி மதிப்பை(ரூ.226) காட்டிலும் குறைவாக தான் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.
நிறுவனத்திற்கு கடன் ஏதும் பெரிதாக இல்லையென்றாலும், துறை சார்ந்த ரிஸ்க் தன்மை உலகளாவிய சந்தையை சார்ந்துள்ளது. இதன் காரணமாக மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி செலவினம் அதிக ஏற்ற-இறக்கங்களுக்கு உட்படலாம். எனவே இதன் லாப விகிதமும் ஒவ்வொரு நிதியாண்டிலும் மாறுபடக்கூடிய நிலை உள்ளது.
கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படைப் பகுப்பாய்வுக்கானக் கற்றல் மட்டுமே.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை