இந்தியாவில் நீரிழிவு என்ற சர்க்கரை நோய் – துறை சார்ந்த அலசல்
Diabetes in India – Sectoral Analysis
உலக நீரிழிவு நாள், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டு நடத்தப்பட்ட Lancet – Medical Journal ஆய்வின் படி, உலகளவில் நீரிழிவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மட்டும் 82.8 கோடி. இவற்றில் நான்கில் ஒரு பங்கு அளவு இந்தியாவில் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்க தரவாக வெளிவந்துள்ளது. அதாவது இந்தியாவில் மட்டும் நீரிழிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை சுமார் 21.2 கோடி. சீனாவில் இது 14.8 கோடியாக உள்ளது. உலகின், ‘நீரிழிவு நோயின் தலைநகரமாக’ இந்தியா நினைவூட்டப்படுகிறது. கடந்த 35 ஆண்டுகளில் உலக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் சராசரியாக நூறில் பதினான்கு பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது. பாதிக்கப்பட்டோர்களில் 60 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தான் அதற்கான மருத்துவத்தையோ, வாழ்வியல் முறையையோ பேணுகின்றனர் என்கிறது இந்த ஆய்வுக்கட்டுரை. இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களின் விகிதம் 21.5 சதவீதமாகவும், பெண்கள் 23.7 சதவீதமாகவும் இருக்கின்றனர். நகர்ப்புறங்களில் 29.5 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 15 சதவீதமாகவும் காணப்படுகிறது. அதே வேளையில் மேற்குலக நாடுகளில் உள்ளது போல, டைப்-1 நீரிழிவு நோய் இந்தியாவில் பெரும்பாலும் இல்லை என்பதும், பாதிக்கப்பட்டோரில் சுமார் 95 சதவீதம் பேருக்கு வாழ்வியல் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் சார்ந்த டைப்-2 நீரிழிவு இருப்பதும் ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 30 சதவீத மக்கள் தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்பதனை அறியாமலே, தங்களது வாழ்க்கையை தொடர்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த அதிகரித்த எண்ணிக்கைகு காரணமாக சொல்லப்படுவது மரபணு, நகரமயமாக்கலுக்கு பிறகான உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்வியல் முறைகள்(அதிகப்படியான உணவு எடுத்தல், குறைவான உழைப்பு மற்றும் தூக்கமின்மை, உளவியல் சார்ந்த சிக்கல்கள்) தான். பக்கவாதம், தமனி நோய், நுரையீரல் அடைப்பு, நாள்பட்ட சிறுநீரக நோய், இரும்புச்சத்து குறைபாடு, பிறந்த குழந்தைகளுக்கு காணப்படும் குறைபாடு ஆகியவற்றுக்கு மூலமாக இந்த வாழ்வியல் மற்றும் உணவு முறை சார்ந்த நீரிழிவு காரணமாகி விடுகிறது.
கடந்த 2010ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் திட்டங்களையும் அரசு ஏற்படுத்தியுள்ளது. 1987ம் ஆண்டு தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தேசிய நீரிழிவு கட்டுப்பாட்டு திட்டம் முன்னரே துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவை முறையான உடற் பரிசோதனை மற்றும் உணவுமுறை ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. மேற்குலக நாடுகளில் இவற்றுக்கான மருத்துவ செலவு அதிகமிருந்தாலும், இந்தியா, சீனா, இந்தோனேஷியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இதற்கான செலவினம் சற்று குறைவே. அதாவது இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 10,000 ரூபாய்(தனிநபர்) என்ற விகித அடிப்படையில் இது இருந்து வருகிறது.
இந்தியாவின் நீரிழிவு சந்தை மதிப்பு சுமார் ரூ.31,600 கோடி(2024 தரவு). இது 2034ம் ஆண்டு வாக்கில் 1,39,400 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஆண்டுக்கு சராசரியாக 16 சதவீத வளர்ச்சி. நீரிழிவு நோய்க்கான மருந்துகளின் இந்திய சந்தை மதிப்பு மட்டும் சுமார் 23,800 கோடி ரூபாய். இது அமெரிக்காவில் சுமார் 3.58 லட்சம் கோடி ரூபாயாக காணப்படுகிறது. மாறுபட்ட வாழ்க்கை முறைகள் மற்றும் உணவுப்பழக்க முறைகளின் அதிகரிப்பு காரணமாக நீரிழிவு நோய் எதிர்ப்புக்கான மருந்துகளின் தேவையும் அதிகரித்து வந்துள்ளது.
நோய் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், நவீன மருத்துவத்தின் வளர்ச்சியும், பிற மருத்துவ முறைகளின்(அலோபதி தவிர்த்து) ஆய்வும் அதிகரித்து வருகிறது. சுகாதாரத் துறையில் காணப்படும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், டிஜிட்டல் வழி சிகிச்சை, டெலிமெடிசின் போன்ற மேம்பாடுகள் கிராமப்புறங்கள் வரை கொண்டு செல்கிறது. கடந்த சில வருடங்களாக சுகாதாரத் துறையில் தேவையான வசதியை மேம்படுத்த அரசும் முதலீடு(உட்கட்டமைப்பு, புதிய சாதனங்கள், காப்பீடு மற்றும் மலிவான மருந்துகள்) செய்து வருகிறது.
இந்தியாவில் நீரிழிவு நோய்க்கான மருத்துவத்தில் பெரும்பாலும் இன்சுலின் மருந்து அல்லாத மாத்திரை வடிவிலான சந்தை தான் அதிகரித்து காணப்படுகிறது. இவற்றில் முதன்மை மருந்துகளாக மெட்ஃபார்மின்(Metformin), சல்போனிலூரியா(Sulfonylureas), டிபிபி(Dipeptidyl peptidase-4), ஆல்பா-குளுக்கோசிடேஸ் தடுப்பான்கள்(Alpha-glucosidase) மற்றும் தியாசோலிடினியோன்கள்(TZDs) ஆகியவை உள்ளன. உலகளவில் மெட்ஃபார்மின்(Metformin) மருந்துச் சந்தை மதிப்பு மட்டும் 36 கோடி அமெரிக்க டாலர்கள். இவற்றில் இந்தியாவின் பங்களிப்பு(உற்பத்தி மற்றும் நுகர்வு) மட்டும் 46 சதவீதமாக உள்ளது.
இந்த மருந்து தயாரிக்கும் API நிறுவனங்களை இந்தியாவில் காணும் போது, Wanbury, Aarti Drugs, USV, Harman Finochem, Exemed Pharma ஆகியவை உள்ளன. அதே வேளையில் ஒட்டுமொத்த நீரிழிவு சந்தைக்கான இந்திய பெரு நிறுவனங்கள் என காணுகையில் Sun Pharma, Dr. Reddy’s Lab, Biocon, Novo Nordisk, Sanofi India, Glenmark Pharma, Johnson & Johnson, Abbott India, Lupin, Torrent Pharma, Merck, Cadilla, AstraZeneca ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
மெட்ஃபார்மின்(Metformin) மருந்து தயாரிப்பில் முதல் 5 நிறுவனங்கள் மட்டுமே, ஒட்டுமொத்த சந்தையில் 60 சதவீத பங்களிப்பை(Market Share) கொண்டுள்ளன. USV Private Ltd 22 சதவீத பங்களிப்புடன், இந்த மருந்து பிரிவில் முன்னிலையில் உள்ளது. இதற்கடுத்தாற் போல சன் பார்மா (Sun Pharma) 15%, Zydus Cadila 12%, Cipla 10% மற்றும் Dr.Reddy’s 8 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. இப்பிரிவின் பெரும்பாலான மாத்திரைகள் ஒரு ரூபாய் முதல் இருபது ரூபாய் வரை என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது(மாத்திரை ஒன்றுக்கு). அரசின் மானிய விலையில் காணும் போது ஒரு மாத்திரையின் விலை இரண்டு ரூபாய்க்கும் குறைவாகவே உள்ளது. பிரபல பிராண்டுகளாக Glycomet(USV Product), Metformin-Sun, Emsulide (Sun Pharma), Zita-met(Zydus Brand), Ciplament, Glyciphage(Cipla Product), Metformin-DR, Trijardy (Dr. Reddy’s) உள்ளன. குறிப்பிட்ட தயாரிப்பில் தனி நிறுவன காப்புரிமை இல்லாததால், இது 100 சதவீத பொதுவான தயாரிப்பு சந்தையாக(Generic Medicine) உள்ளது. இதுவே சில நிறுவனங்களுக்கு பாதகமாக உள்ளது. அதே வேளையில் மருந்துகள் குறைவான விலையில் கிடைக்கப்பெறுவதால், இதன் பிராண்டுகளும் குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டுகின்றன.
அரசு சார்பில் மானிய விலையில் மருந்துகளை வழங்க பல்வேறு விநியோகத் திட்டங்கள் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் நீரிழவுக்கான கட்டுப்படுத்தல் மற்றும் பராமரிப்புகளையும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக மருந்துகள் போதுமான அளவு கிடைக்கப்பெறுவதனையும் அரசு கண்காணித்து வருகிறது.
உலக நீரிழிவு மருத்துவ சாதனங்களின்(Medical Devices) சந்தை மதிப்பு சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இவற்றில் இந்தியாவின் பங்களிப்பு மட்டும் 7.5 சதவீதம், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா 20 சதவீதத்தை பங்களிப்பை கொண்டுள்ளது. 2024ம் ஆண்டு தரவின் படி, இந்திய இன்சுலின் சந்தையின் மதிப்பு சுமார் 1.02 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் குளுக்கோஸ் கண்காணிப்பு சார்ந்த சாதனங்களின் சந்தை மதிப்பு 5.6 கோடி அமெரிக்க டாலர்கள்.
நாடு முழுவதும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த டெலிமெடிசின் மற்றும் ஏ.ஐ. மூலம் இயக்கப்படும் நவீன சிகிச்சை கண்காணிப்பு ஆகியவற்றால் இத்துறையின் வளர்ச்சியும் டிஜிட்டல் வழி சுகாதார முன்னேற்றமாக வடிவமைக்கப்பட உள்ளது.
(தகவல்கள் மற்றும் தரவுகள்): Expertmarketreseach, JETIR Report, ICMR, CDSO, Lancet, IDMA)
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை