தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்ட சாக்சாப்ட் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்
Saksoft Limited: Saksoft Group – Fundamental Analysis – Stocks
கடந்த 1931ம் ஆண்டு நாட்டின் தலைநகரான தில்லியில் (அட, 1911ம் ஆண்டு வரை நம்ம கல்கத்தா நகரம் தாங்க இந்தியாவின் தலைநகரம் !) பிறந்தவர் தான் திரு. அவ்தார் கிருஷ்ணா. இந்தியாவில் இயற்பியலில் பட்டப்படிப்பை முடித்த இவர், ஐக்கிய ராச்சியத்திற்கு(United Kingdom) சென்று உலோக வார்ப்பு சார்ந்த துறையில் தனது பயிற்சியை முடித்தார். பின்னர் இந்தியாவிற்கு திரும்பிய இவர், துர்காபூர் எஃகு ஆலை அமைப்பதற்கான குழுவில் இடம் பெற்றார்.
எஃகு ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வேளையில், நாம் தொழில்முனைவை நோக்கி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் துவங்கியது தான் சாக்சாப்ட் குழுமத்தின் முதல் படி. 1962ம் ஆண்டு வாக்கில் சாக் இண்டஸ்ட்ரீஸ் என்ற தனது நிறுவனத்தை ஏற்படுத்தி, ஜெர்மனியின் ஃப்ரைட் க்ரூப்ஸ் உடன் இணைந்து கார்பைடு வெட்டும் கருவிகள் மற்றும் உலோகத்தை உருவாக்கும் தயாரிப்புகளில் ஈடுபட்டார். பின்னர் இந்த துறையில் நாட்டின் முன்னணி நிறுவனமாகவும் சாக் இண்டஸ்ட்ரீஸ் வலம் வந்தது.
இன்று சாக்சாப்ட் குழுமத்தில் சாக்சாப்ட் டெக்னாலஜிஸ், சாக்சாப்ட் அப்ரைசீவ்ஸ், 360 லாஜிக்கா, அக்குமா, ட்ரீம் ஆர்பிட், டெராபாஸ்ட் நெட்ஒர்க் என பத்துக்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள் உள்ளன. இது போக கல்வி மற்றும் மருத்துவத் துறையிலும் குறிப்பிடத்தக்க சேவைகளை இந்நிறுவன குழுமம் வழங்கி வருகிறது.
சாக்சாப்ட் குழுமத்தின் ஒரு அங்கம் தான் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சாக்சாப்ட் லிமிடெட் நிறுவனம். கடந்த 1999ம் ஆண்டு திரு. அவ்தார் கிருஷ்ணா மற்றும் அவரது மகன் திரு. ஆதித்யா கிருஷ்ணா இருவரால் துவங்கப்பட்ட இந்நிறுவனம், நாட்டின் தகவல்தொழில்நுட்ப துறையின் நடுத்தர / குறு நிறுவனங்கள் பிரிவில் உள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை மையமாக கொண்ட நிறுவனங்களுக்கு தேவையான வணிக நுண்ணறிவு மற்றும் தகவல்தொழில்நுட்ப மேலாண்மை தீர்வுகளை வழங்கி வருகிறது.
குறிப்பாக மென்பொருள் பயன்பாடு மேம்பாடு, கிளவுட், மொபிலிட்டி, ஐஓடி(IoT) போன்ற பிரிவுகளில் தனது தகவல்தொழில்நுட்ப சேவைகளை இந்நிறுவனம் அளித்து வருகிறது. நிறுவனத்தின் மொத்த வருவாயில் நிதி சார்ந்த பிரிவின் மூலம் 36 சதவீதமும், தொலைத்தொடர்பு பிரிவு 29 சதவீதமும், போக்குவரத்து மற்றும் தளவாட பிரிவு 13 சதவீத வருவாயை கொடுக்கிறது.

நிறுவனத்திற்கு சென்னையை தவிர்த்து ஐரோப்பா மற்றும் அமெரிக்க பிராந்தியம் என மொத்தம் 15 அலுவலகங்கள் உள்ளன. நிறுவனத்தின் வருவாயில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பங்களிப்பு மட்டும் சுமார் 72 சதவீதம்.
சாக்சாப்ட் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 3,060 கோடி ரூபாய். நிறுவனர்களின் பங்களிப்பு 67 சதவீதமாகவும், அன்னிய நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு 3.53 சதவீதமாகவும் உள்ளது. 2023-24ம் நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 762 கோடி ரூபாயாக இருந்துள்ளது. செலவினம் ரூ.644 கோடியாகவும், இயக்க லாப விகிதம்(OPM) 17 சதவீதமாகவும் உள்ளது. சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம் ரூ.128 கோடியாகவும், நிகர லாபம் 96 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறுவனத்தின் கூட்டு விற்பனை வளர்ச்சி 16 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 21 சதவீதமாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் பங்கு மூலதனம் மீதான வருவாய்(ROE) 21 சதவீதமாக உள்ளது. நிறுவனத்திற்கு கடன் பெரிதாக எதுவுமில்லை(D/E: 0.05 மடங்குகள்). வட்டி பாதுகாப்பு விகிதம் 31 மடங்குகளிலும், நிறுவனர்களின் சார்பில் பங்கு அடமானம் இல்லையென்பதும் கவனிக்கத்தக்கது.
மார்ச் 2024 முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 495 கோடி ரூபாயாக இருந்துள்ளது. நடப்பாண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் 201 கோடி ரூபாயை வருவாயாகவும், நிகர லாபமாக ரூ.26 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நிறுவனம் தனது பங்கின் முகமதிப்பு விலையை(Face Value) 10 ரூபாயிலிருந்து ஒரு ரூபாயாக குறைத்துள்ளது. இது போக, தற்போது நடப்பு வாரத்தில் போனஸ் பங்குகளை (நான்கு பங்குகளுக்கு ஒரு பங்கு) இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சாக்சாப்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமையகம் சென்னை பெருங்குடியில் குளோபல் இன்போசிட்டி பூங்காவில் அமைந்துள்ளது. இந்தியாவில் ஏழு அலுவலகங்களும், அமெரிக்காவில் ஐந்தும், இங்கிலாந்தில் இரண்டு மற்றும் சிங்கப்பூரில் இரு அலுவலகங்களையும் நிறுவனம் கொண்டுள்ளது.
கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை
👏👏good analysis
LikeLiked by 1 person
நன்றி. தொடர்ந்து நமது பங்குச்சந்தை சார்ந்த கட்டுரைகளுக்கு ஆதரவளியுங்கள்.
LikeLike