2018 ம் வருடத்தின் மிக மோசமாக சரிவடைந்த பங்கு – ஆஷா புரா

2018 ம் வருடத்தின் மிக மோசமாக சரிவடைந்த பங்கு – ஆஷா புரா

The worst stock returns of 2018 in Indian Stock Market – Ashapura Intimates

 

கடந்த 2017 ம் வருடம் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் அதற்கு நேரெதிராக நடப்பு 2018 ம் வருடத்தின் தொடக்கத்திலிருந்தே இந்திய பங்குச்சந்தை சரிவில் தான் ஆரம்பித்தது. இந்த வருடத்தின் பங்கு வர்த்தகம் இன்னும் சில நாட்களே உள்ளன. நமது நாட்டின் சந்தை மட்டுமில்லாமல் உலகளவில் அனைத்து பங்குச்சந்தைகளும் இந்த வருடம் முழுவதும் இறக்கத்தில் மட்டுமே உள்ளன.

 

இந்திய பங்குசந்தையில் தேசிய சந்தையான நிப்டி 50 (Nifty) குறியீடு இதுவரை 1.30 சதவீதம் என்ற அளவிலும், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் (BSE Sensex) 4.30 சதவீதம் என்ற அளவிலும் ஏற்றம் கண்டுள்ளது. கடந்த 2017 ம் ஆண்டில் நிப்டி 28 சதவீத (Returns) வருமானத்தை கொண்டிருந்தது. சென்செக்ஸ் குறியீடும் 18 சதவீத வளர்ச்சியுடன் 2017 ம் வருடத்தில் முடிவடைந்தது. இதனை ஒப்பிடும் போது நடப்பு வருடத்திற்குரிய பங்குச்சந்தை வருமானம் பெரிய ஏற்றம் காணாமல் இறக்கத்தில் இருந்துள்ளது.

 

இதே போல் அமெரிக்க பங்குச்சந்தை நடப்பாண்டில் 10 சதவீத இறக்கத்திலும் (NASDAQ), சீன சந்தை 23 சதவீத வீழ்ச்சியும், லண்டன் பங்குச்சந்தை (FTSE) 12 சதவீத இறக்கமும், ஜப்பான் நாட்டின் பங்குச்சந்தை 11 சதவீத வீழ்ச்சியிலும் உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும் இந்திய பங்குச்சந்தை பெரிதாக வீழ்ச்சியை காணவில்லை. நமது நாட்டின் துரிதமான பொருளாதார வளர்ச்சியும், பங்குச்சந்தையை ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்கிறது.

 

நடப்பு 2018 வருடத்தில் இந்திய பங்குச்சந்தையில் உள்ள 10 சதவீதத்திற்கும் மேலான பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்கு விலை (Share Price) 50 சதவீதத்திற்கும் மேலாக இறக்கம் (Stock Crash) கண்டுள்ளது. வங்கிகளின் வாராக்கடன், அரசின் கொள்கைகள், கச்சா எண்ணெய் விலை மாற்றம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவை பங்குச்சந்தை விலைகளிலும் பெருத்த மாற்றத்தை கொண்டு வந்தன. இறக்கம் ஏற்பட்டாலும், சந்தையில் உள்ள நல்ல நிறுவன பங்குகளை வாங்குவதற்கான தள்ளுபடி விலையாகவே சந்தை வல்லுநர்கள் பார்க்கின்றனர்.

 

அதே வேளையில் சில நிறுவன பங்கின் விலை ஆச்சர்யமூட்டும் வகையில் இறக்கம் கண்டுள்ளது. அவற்றில் JP Associates, Jet Airways, Infibeam, Vodafone Idea, PC Jeweller, Manpasand Beverages ஆகிய நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனங்கள் சுமார் 65 – 80 சதவீதம் வீழ்ச்சி கண்டன. ஆனால் ஒரே ஒரு பங்கின் விலை மட்டும் இந்த வருடத்தின் மிக மோசமாக இறக்கமடைந்த பங்காக உள்ளன – Ashapura Intimates Fashion Ltd

( Read this post after the advertisement… )

 ஆஷா புரா  பேஷன் நிறுவனம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள், உள்ளாடைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றன. ‘ Valentine ‘ என்ற பிராண்டை கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் 2006 ம் ஆண்டு ஹர்ஷத் தக்கார் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. 2013 ம் வருடம் பங்குசந்தையில் பட்டியிலடப்பட்ட ஆஷா புரா பேஷன் (Ashapura Fashion) நிறுவனம் நடப்பு  வருடத்தில் தனது பங்கின் உச்சமாக ரூ. 523 விலைக்கு வர்த்தகமானது. வருடத்தின் தொடக்கத்தில் சுமார் 1300 கோடி ரூபாய் சந்தை மதிப்பை கொண்டிருந்த இந்த நிறுவனம் தற்போது 74 கோடி ரூபாய் மதிப்பை மட்டுமே கொண்டுள்ளது. இதன் பங்கின் விலையும் தற்போது  29 ரூபாயில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் குறைந்தபட்ச விலையாக பங்கு ஒன்றுக்கு 19 ரூபாய் வரை சென்றது.

 

ஆஷா புரா பேஷன் நிறுவனம் நடப்பு வருடத்தில் 96 சதவீதம் பங்கின் விலையில் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த இறக்கம் வந்ததும் வெறும் இரண்டு மாதங்களில். பங்கு விலை குறைந்ததற்கு காரணமாக சொல்லப்படுவது, நிறுவனத்தின் நிறுவனர் ஹர்ஷத் தக்கார் (Harshad Thakkar) காணவில்லை என்ற செய்தி தான். நிறுவனம் சார்பில் கடந்த அக்டோபர் மாதம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹர்ஷத் தக்கார் தனது நிறுவன பங்குகளை அடமானம் வைத்துள்ளதாகவும் வந்த செய்திகள் இந்த பங்கின் விலையை மேலும் மோசமடைய செய்தது. இன்னும் அவர் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்களை கவலை அடைய செய்துள்ளது.

 

பங்குச்சந்தையில் இது போன்ற சம்பவங்கள் வியப்புக்குரியதாக அமைந்துள்ளன. வெறும் பங்கின் விலையை மட்டும் கருத்தில் கொள்ளாமல், ஒரு நிறுவனத்தின் அடிப்படை பகுப்பாய்வு (Fundamental Analysis) மற்றும் அதன் நிர்வாகத்தையும் (Management) கருத்தில் கொண்டே ஒரு பங்கினை தேர்வு செய்ய வேண்டும்.

 

இலவச  பங்குச்சந்தை பயிற்சி வகுப்புக்கு (Share Market Course) பதிவு செய்ய வேண்டுமா ?

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.