நீங்கள் எந்த துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்ய உள்ளீர்கள் ?

நீங்கள் எந்த துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்ய உள்ளீர்கள் ?

Which sector based stocks are you going to invest in ?

சந்தை குறியீடுகள் உயர்வு நிலை, உலக பொருளாதார மந்த நிலை, வர்த்தக போர் ஆகியவை வரும் காலாண்டில் நிறுவனங்களின் வருவாயை பாதிக்கும் காரணிகளாக இருக்கலாம். சந்தையை குறுகிய காலத்தில் அணுகாமல், நல்ல நிறுவன பங்குகளில் முதலீடு செய்து நீண்ட காலத்தில் காத்திருக்கும் போது, அருமையான வருவாயை முதலீட்டாளர் பெற முடியும்.
சமீபத்திய பங்குச்சந்தை குறியீடு, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கடன் தன்மை, பணப்புழக்க நெருக்கடி(Liquidity Crisis), அதனை சார்ந்த ஊடக செய்திகளால்(Media Noises) அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது எனலாம். முதலீட்டாளராக ஒருவர் இது போன்ற விஷயங்களை ஆரோக்கியமாக எடுத்து கொள்ள முடியாது. இருப்பினும் ஒரு நீண்ட கால முதலீட்டாளராக இதனை கடந்து தான் செல்ல வேண்டும்.

 

வரவிருக்கும் நாட்களில் பட்ஜெட் தாக்கல் எதிர்பார்ப்பை சார்ந்து பங்குச்சந்தை குறியீடுகள் நகர கூடும். இதுவும் கடந்து போக கூடிய நிலை தான். பொருளாதார உற்பத்தி வளர்ச்சி மற்றும் காலாண்டு முடிவுகளால் சந்தை பாதிப்படையும் சூழ்நிலை இருந்தாலும், நீண்ட காலத்தில் மதிப்புமிக்க பங்குகளில் முதலீடு செய்வது முதலீட்டாளர்களுக்கு நலன் பயக்கும். குறிப்பாக வலுவான துறைகள்(Strong Sectors) என்று சொல்லப்படும் சில துறைகள், பொருளாதார தேக்க நிலையிலும் நிலைத்து நின்று வருவாயை கொடுக்கும்.

 

வருவாயை அதிகமாக கொடுப்பது என்பது பங்குகளின் விலையில் அதிகரிப்பு என்பது மட்டுமல்ல. சந்தை இறக்கத்திலும், ஒருவருக்கு அதிக நஷ்டத்தை தராமல் நிலைத்து நிற்பதும் தான். அது போன்ற துறைகள் சில,

 

 • வாகனத்துறை
 • வங்கி மற்றும் நிதி சேவைகள்
 • நுகர்வோர் பொருட்கள் (FMCG)
 • மருந்து துறை (Pharma)
 • தொழில்நுட்பம் (Information Technology)

 

மேலே கூறப்பட்ட துறைகள் நம்மில் பெரும்பாலோருக்கு எளிதில் புரியக்கூடிய வகையில் இருக்கும். நாம் தினமும் காணும் பொருட்கள், சேவைகள் மற்றும் தினசரி நுகரும் பொருட்களாக இருக்கும்பட்சத்தில், நம்மால் அந்த தொழிலின் தன்மையை எளிதில் அணுக முடியும். இன்றைய நாட்களில் வங்கித்துறையும் அவசியமான ஒன்று. தொழில் துறை வளர்ச்சிக்கு(Industrial Growth) வங்கிகளின் சேவை இன்றியமையாதது.

 

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வங்கிகளுக்கு பலம் சேர்க்கும். அதே வேளையில் வங்கிகளின் நிர்வாகத்தை கருத்தில் கொள்வது அவசியம். கடந்த சில வருடங்களாக பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் பிரச்னையில் சிக்கி தவிக்கின்றன. இதனை நிர்வாக குறைபாடு என்றே சொல்லலாம். இது சார்ந்த அரசாங்கத்தின் கொள்கைகளையும், வரையறைகளையும் நாம் பார்க்க வேண்டும்.

 

மருந்து(Pharma) மற்றும் தொழில்நுட்பம் இரண்டும் தவிர்க்க முடியாதவை. இந்த துறைகளுக்கான தேவையும் அதிகமாக தான் உள்ளது. வரும் நாட்களிலும் இதன் தேவை அதிகரிப்பால் உற்பத்தி பெருகக்கூடும் மற்றும் நல்ல வருவாயை எதிர்பார்க்கலாம். இந்த இரு துறையும் பெரும்பாலும் ஏற்றுமதியின் மூலம் தான் தனது வருவாயை கொண்டுள்ளது. நம் நாட்டில் உட்கட்டமைப்புக்கான(Infra) வாய்ப்புகள் ஏராளமாக இருந்தும், அதற்கான மாற்றங்கள் சரியாக அமையவில்லை எனலாம். இருப்பினும், போக்குவரத்தை சார்ந்த வாகனத்துறைக்கு வாய்ப்புகளும், விற்பனையும் சாதகமே.

 

பருவ கால மற்றும் பொருளாதார சுழற்சி முறையில்(Cyclical Sectors) சில துறைகள் உள்ளன. இந்த துறைகள் பெரும்பாலும் உலக பொருளாதார காரணிகளை சார்ந்து நடைபெறும். துறைகள் சில,

 

 • விவசாயம் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் மற்றும் சேவைகள்
 • ரசாயனம் (Chemicals)
 • உலோகங்கள் (Metals)

 

விவசாயம் வருடத்தின் அனைத்து நாட்களிலும் உற்பத்தியை பெருக்கி வருமானத்தை தரும் என சொல்லிவிட முடியாது. பருவகால மாற்றங்கள்(Seasonal) விவசாய வளர்ச்சியை பாதிக்கக்கூடும். உலோகங்கள் மற்றும் ரசாயன துறைகள் அனைத்து காலாண்டிலும் தொடர்ச்சியான வருவாய் மற்றும் லாப வளர்ச்சியை கொண்டிருக்கும் என நாம் கணிக்க முடியாது.
வெறும் சந்தையின் குறியீடுகளை பார்த்து பங்குகளின் விலையில் முதலீடு செய்வது, ஒரு சிறந்த முதலீடாக கருதப்படாது. எந்த துறை சார்ந்த பங்குகள் சிறப்பாக செயல்படுகின்றன, பொருளாதார மந்த நிலையில் எந்த பங்குகள் நிலைத்து நிற்கின்றன போன்ற விஷயங்கள் ஒரு முதலீட்டாளராக கற்று கொள்ள வேண்டியவை. நாம் முதலீடு செய்யப்போகும் பங்குகளின் பொருட்கள் மற்றும் சேவைகளை தெரிந்து வைத்திருப்பது நன்று.

 

சில துறைகள் வருடத்தின் எல்லா நாட்களிலும் வருவாயை பெறக்கூடும்; சில துறைகளோ பருவ காலத்திற்கு ஏற்றாற் போல் செயல்படும். இன்னும் சில எதிர்காலத்தில் மாற்றம் பெறக்கூடிய வகையில் அமையும். மாற்றம் பெறக்கூடிய வகையில் உள்ளவை பொதுவாக ரிஸ்க் தன்மை அதிகம் நிறைந்தது. இவற்றை சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே, முதலீடு செய்ய வேண்டும். அது போன்ற துறைகள் சில,

 

 • உட்கட்டமைப்பு மற்றும் அதனை சார்ந்தது
 • ஊடகம்(Media) மற்றும் பொழுதுபோக்கு
 • எண்ணெய் மற்றும் எரிபொருள் (Oil Industry)
 • மின் உற்பத்தி மற்றும் விநியோகம்
 • ஜவுளித்துறை
 • தொலைத்தொடர்பு

 

மின் உற்பத்தி சார்ந்த துறைகள் சமீபத்தில் மாற்றமடைந்து வருகின்றன. இன்று காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், எதிர்காலத்தில் அணு மற்றும் சூரிய சக்தியின் மூலம் மட்டுமே மின்சக்தி பெற முடியும் என்ற நிலை வந்தால், நிறுவனத்தில் ஏற்படப்போகும் மாற்றத்தை நாம் கவனிக்க வேண்டும்.

 

ரிலையன்ஸ் ஜியோவின்(Reliance Jio) வருகைக்கு பின்னர் சில நிறுவனங்கள் காணாமல் போய் விட்டன. சில நிறுவனங்களோ கடனில் சிக்கியுள்ளன. ஏர்டெல் நிறுவனம், ஜியோவின் சமீபத்திய வளர்ச்சியால் தனது வருவாயில் தேக்க நிலையை சந்தித்து வருகிறது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது மாற்றம் பெறமுடியாத நிலை தான்(Transformation). விவசாய துறை வளர்ச்சி பெறாத போது, ஜவுளி துறை மட்டும் பெரிய வளர்ச்சியை கொண்டிருக்க முடியாது.

 

கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள் மற்றும் வர்த்தக போர் ஆகியவை எண்ணெய் நிறுவனங்களின் வருவாயில் எந்த சூழ்நிலையிலும் பாதிப்பை ஏற்படுத்த கூடும். நம் நாட்டில் உட்கட்டமைப்பு துறைக்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பினும், இதற்கான கொள்கைகள் தெளிவு பெற முடியாததால், இந்த துறையின் பெரும்பாலான நிறுவனங்கள் கடனில் தவிக்கின்றன. எனவே முதலீடு செய்ய போகும் முன், வலுவான துறைகளை தேர்ந்தெடுத்து விட்டு அதனை சார்ந்த பங்குகளை அடிப்படை பகுப்பாய்வுக்கு(Fundamental Analysis) உட்படுத்தி முதலீடு செய்ய வேண்டும். இது பொருளாதார தேக்க நிலையில், ஒரு முதலீட்டாளரை பாதுகாக்க மட்டுமில்லாமல், முதலீட்டை ஊக்குவிக்கவும் செய்யும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.