எல்லையில் பதற்றம், தடுமாற்றத்தில் பங்குச்சந்தை

எல்லையில் பதற்றம், தடுமாற்றத்தில் பங்குச்சந்தை

Tension in the border, the staggering Indian Stock market

 

கடந்த பிப்ரவரி 7ம் தேதி இந்திய பங்குச்சந்தையின் நிப்டி குறியீடு 11,069 புள்ளிகளிலும், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 36,971 புள்ளிகளிலும் முடிவடைந்திருந்தது. உலக பொருளாதார மந்த நிலை, அமெரிக்க-சீன வர்த்தக போர், நாட்டில் உள்ள நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் என பல காரணிகள் சந்தையை கடந்த சில நாட்களாக பதம் பார்த்தன.
தொடர்ச்சியாக பத்து நாட்களுக்கும் மேலாக சந்தை இறங்குமுகத்தில் பயணிக்க தொடங்கியது. பிப்ரவரி 19ம் தேதியன்று நிப்டி குறியீடு(Nifty50) 10,604 புள்ளிகளிலும், சென்செக்ஸ் குறியீடு(BSE Sensex) 35,352 புள்ளிகளிலும் அன்றைய வர்த்தகத்தை முடித்து கொண்டது. பத்து நாட்களில் தேசிய பங்குச்சந்தை(NSE) குறியீடு கிட்டத்தட்ட 500 புள்ளிகளையும், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1600 புள்ளிகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில்(2019 Pulwama Attack) நடந்த அதிபயங்கர தற்கொலை படை தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பரிதாபமாக இறந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் தனது விமானப்படை மூலம் பாகிஸ்தானின் பாலக்கோட்(Balakot) பகுதியில் தாக்குதலை நடத்தியது. இவற்றில் அங்கு தங்கியிருந்த 300 தீவிரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்தது.

 

பத்து நாட்களுக்கு மேலாக இறக்கத்தில் இருந்த சந்தை அடுத்த மூன்று நாட்களில் சிறிது ஏற துவங்கியது. இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் பங்குச்சந்தையிலும் தடுமாற்றத்தை ஏற்படுத்தின. கடந்த இரண்டு நாட்களில் நிப்டி மற்றும் சென்செக்ஸ் முறையே 80 புள்ளிகள் மற்றும் 240 புள்ளிகளும் இறங்கியுள்ளன. பாகிஸ்தானின் கராச்சி சந்தை குறியீடு(KSE) புதன் கிழமை அன்று (27-02-2019) எல்லையில் பதற்றம் என்ற செய்தி வந்த நிலையில், 1500 புள்ளிகள் அல்லது 4 சதவீதம் என்ற வீழ்ச்சியை கண்டது.

 

பொதுவாக இரு நாடுகளிடையே ஏற்படும் போர் சூழல்(Terror attack and War), உலக பொருளாதார காரணிகள் ஆகியவை சந்தையை வெகுவாக  பாதிக்க கூடியவை. தற்போது இது போன்ற சூழ்நிலை தான் இந்திய பங்குச்சந்தையில் நிலவி கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் நாட்டில் தேர்தல் வரவிருக்கும் நிலையில், நடப்பில் ஏற்பட்டு கொண்டிருக்கும் எல்லையில் பதற்றமும்(India-Pakistan) முக்கியத்துவம் பெறுகின்றன.

 

புதன் கிழமை அன்று(27-02-2019) இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் நடைபெற்று கொண்டிருக்கும் போது, சென்செக்ஸ் 600 புள்ளிகளும், நிப்டி 180 புள்ளிகளும் ஏற்றத்தில் இருந்து இறக்கம் கண்டன. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இந்திய விமான படையின் பைலட் திரு. அபி நந்தன் அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார் என்ற செய்தி வெளியானது. இதனை உறுதி செய்த மத்திய அரசு, அவரை மீட்பதற்கான முயற்சியில் துரிதமடைந்துள்ளது. பங்குச்சந்தையில் பங்குகள் மலிவாக தற்போது கிடைப்பது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருப்பினும், குறுகிய கால மற்றும் தின வர்த்தகர்கள் தங்களது ரிஸ்க் தன்மையை குறைத்து கொள்ள வேண்டிய தருணம் இது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.