வாடகையா, ஒத்தியா (குத்தகை) ?

 

வாடகையா, ஒத்தியா (குத்தகை)   ?

SIP(Systematic Investment Planning)  vs Lumpsum Investment

 

இன்று நாம் அனைவரும் நம் வருமானத்தில் சேமிக்கிறோமோ இல்லையோ, ஆனால் நமக்கான கவுரவுமாக சில செலவுகளை கொண்டிருக்கிறோம். நாம் சம்பாதிப்பதை ஒரு கவுரவமாக நினைக்கிறமோ இல்லையோ, ஆனால் சில விஷயங்களை மதிப்புடன் வைத்துள்ளோம். நமது கவுரமாக (ஆடம்பரத்துடன்) கார் வாங்குவது, வீடு கட்டுவது (அ) வாங்குவது, அழகுக்கு, தொழில்நுட்ப சாதனங்களை வாங்கி சேர்ப்பது… இவற்றில் ஏழை – பணக்கார பாகுபாடின்றி எல்லாரும் மதிப்புடன் விரும்புவது ஒரு சொந்த வீடு வைத்திருப்பது தான். ஏனெனில் நமது நாட்டில் சொந்த வீடுகள் அதிகமாக இருப்பினும் ஒவ்வொரு தனி நபரும் தனக்காக சொந்த வீடு இருப்பதையே கவுரவ செலவாக கொண்டுள்ளோம் (அதனாலே சிலருக்கு தங்குவதற்கு கூட வீடும் இல்லை). நாம் வாடகை வீட்டில் இருப்பதாய் பெரும்பாலும் விரும்புவதில்லை. அதற்கு நமது காரணங்களாக,

‘வாடகை வீடு சௌகரியமாக இல்லை, வீட்டுக்காரரின் கெடுபிடிகள்’ போன்றவை. சரி வாடகை வீடு தான் என்றாலும், அதிலும் மற்றொரு விவாதம் – வாடகைக்கு இருப்பதா, ஒத்திக்கு இருப்பதா ?
வாடகை என்றால் மாதா மாதம் நமது வருமானத்திலிருந்து ஒரு தொகையை இதற்காக செலவு செய்ய வேண்டும். ஒத்தி வீடு எனில், வீட்டு சொந்தக்காரருக்கு ஒரு முழுத்தொகையை கொடுத்து விட்டு, வீட்டை காலி செய்யும் பொது அந்த தொகையை பெற்று கொள்வது;  அதாவது வீட்டுக்காரரிடம் ஒரு தொகையை டெபாசிட் செய்து விட்டு சில வருடங்களுக்கு பிறகு அதே தொகையை எந்த வட்டியும் பெறாமல் பெற்று கொள்வது; வேண்டுமானால் வீட்டுக்காரர் தான் பெற்ற தொகையை அந்த குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்திருக்கலாம் (அ) தனது பிற செலவுகளுக்கு பயன்படுத்தியிருக்கலாம். இந்த இரண்டிலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வசதி. சில மாதங்களுக்கு மட்டும் ஒரு பகுதியில் குடியிருக்க நினைப்போர் வாடகை கொடுத்து விட்டு போவோம், அது தான் நமக்கு வசதி என்பார்கள். சிலர், நாம் தான் இந்த பகுதியில் அடுத்த சில வருடங்களுக்கு இருந்தாக வேண்டுமே, அதனால் எதற்கு இந்த வாடகை செலவு, ஒத்திக்கு இருந்து விட்டு முடிவில் நமது முதல் தொகையை பெற்று செல்வோம் என்பார்கள். வாடகையா, ஓத்தியா ? இது ஒரு விவாதமாகவே எப்போதும் இருக்கிறது.

 

இது போல தான் முதலீட்டிலும், நான் மாதா மாதம் (Recurring Deposit -RD) சேமிப்பதா, (அ) ஒரு முறை மட்டும்(Fixed Deposit -FD) முதலீடு செய்து விட்டு செல்வதா… எது சிறந்தது என கேட்பதுண்டு.

 

மாதாந்திர முதலீடு (Systematic Investment Planninng -SIP)  vs  ஒரு முறை மட்டும் மொத்த முதலீடு (Lumpsum):

 

 

சுருக்கமாக நம் வீட்டில் இந்த நிகழ்வு எப்போதும் நடப்பதுண்டு; என் பெற்றோரை நான் எப்போதும் கவனித்து கொண்டிருக்கிறேன்; ஆனால் என் அண்ணன் எப்போதாவது என் பெற்றோருக்கு உதவி செய்து விட்டு நல்ல பெயர் வாங்கி செல்கிறான், இது என்ன நியாயம் என பலர் சொல்வதுண்டு. விநாயக – முருகப்பெருமான் பழக்கதை தான் 🙂 இந்த முதலீடு விஷயம் அவ்வாறு மட்டுமல்ல…

 

உதாரணத்திற்கு:

 

ராம்குமார் என்பவர் ஒரு தொழில் முனைவோர், தனது வங்கி வைப்பு கணக்கில் இன்று ஒரு முறை மட்டும் மொத்த முதலீடாக ரூ. 1,00,000 /- ஐ (வருடங்கள் – 5, ஆண்டு வட்டி விகிதம் – 7 %) வைத்துள்ளார். நமது ராம்குமாரின் அருமை தம்பி கோபி அவர்கள் தன் அண்ணனை போல தொழில் செய்யா விட்டாலும் மாத சம்பளக்காரராக உள்ளதால் அவர் தனது மாத சம்பளத்திலிருந்து சேமித்து மாதம் ரூ. 1667 /- (அதாவது வருடத்திற்கு ரூ. 20,000 /-) அஞ்சலக RD ல் போட்டு வருகிறார்(இவருக்கும் வருடங்கள் – 5, ஆண்டு வட்டி – 7 %) ஆக மொத்தம் இவரும் 5 வருடத்திற்கு மொத்தமாக ரூ. 1 லட்சம்.

 

5 வருட முடிவில் இருவர் பெறும் முதிர்வுத்தொகை:

                      

  • ராம் குமார் –    ரூ. 1,40,300 /-
  • கோபி           –    ரூ. 1,19,300 /-

 

என்னடா இருவரும் ஒரே தொகையை, ஒரே காலத்திற்கு தான் முதலீடு செய்தார்கள்; ஆனால் தம்பி கோபியை விட ராம்குமார் அப்படி என்ன செய்து விட்டார் ? இது ஒன்றும் சிதம்பர ரகசியமல்ல; அது தான் கூட்டு வட்டியின் ரகசியம். இதனை புரிந்து கொள்ள நம் பள்ளியில் 6 ம் வகுப்பு கணக்கே போதும். எளிதாக புரிய வேண்டுமானால் ராம்குமாரின் ஒரு முறை முதலீடான ரூ. 1 லட்சம், 5 வருடத்திற்கு கூட்டு வட்டியில் தான் அந்த ரூ. 1,40,300 முதிர்வு தொகையை கொடுத்தது. அதாவது தான் முதலீடு செய்த முதல் நாளிலிருந்து ஐந்தாம் வருட முடிவு நாள் வரையில் முழுத்தொகைக்கும் கூட்டு வட்டி வேலை செய்தது. ஆனால் கோபி விஷயத்தில் அப்படியல்ல. கோபியின் முதல் மாத முதலீடாக ரூ. 1667 /- மட்டுமே கூட்டு வட்டி 5 வருடமாக வேலை செய்தது. முதலீட்டு மாதங்கள் அதிகமாக கூட்டு அதற்கான கூட்டு வட்டி காலமும் குறைந்தது. அது தான் கூட்டு வட்டியின் ரகசியம், நீண்ட காலத்தில் பிரமாதமாக செயல்படும்.

 

நமது பள்ளி வகுப்பின் கூட்டு வட்டி (Compound Interest) Formula:

 

                         FV = PV  X  (1+r) ^n   

 

  • FV = Future Value (எதிர்கால மதிப்பு /தொகை)
  • PV = Present Value (தற்போதைய மதிப்பு /தொகை)
  •  r  = Annual interest rate (ஆண்டு வட்டி விகிதம்)
  •  n = Number of periods (காலங்கள் / வருடங்கள் )

அப்படியெனில் ராம்குமார் செய்வது தான் சிறந்தது என முடிவுக்கு வருவதா ? அது தான் இல்லை. ஒரு நல்ல முதலீடு என்பது காலத்தை சார்ந்தே உள்ளது. அது வெறும் பணத்தை கொண்டு மட்டுமல்ல. சிறு துளி பெருவெள்ளம் போல… நீங்கள் எத்தனை துளிகள் சேர்வதற்காக காத்து கொண்டிருக்கிறீர்களோ, அது தான் பெருவெள்ளமாகும். காலத்தினூடே பொறுமையும் அவசியம் (Power of Compounding).

 

உதாரணமாக ராம்குமாரால் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்யும்படியும், கோபியால் அடுத்த 10 வருடங்களுக்கு மாத முதலீடு செய்ய முடியுமானால்…  

 

  • 10 வருடங்களுக்கு பிறகு, ராம்குமார் பெறுவது – ரூ. 1,96,700 /-
  • 10 வருடங்களுக்கு பிறகு, கோபி பெறுவது – ரூ. 2,86,750 /-

 

இப்போது புரிகிறதா !

சமீபத்தில் நானும் என் நண்பர் ஒருவரும் பிரபல வார இதழின் (நிதி சார்ந்த) முதலீட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அப்போது ஒரு பரஸ்பர நிதியின் மேலாளர் அவர்கள் ஒரு வரைபடத்தை காண்பித்தார், ‘ நீங்கள் 2002 ல் ஒரு பிரபல கம்பெனியின் வாகனத்தை (Car) வாங்கியிருந்தால் அதன் மதிப்பு அன்று ரூ. 5 லட்சம் என்றும் அதன் இப்போதைய மதிப்பு குறைந்திருப்பதுடன், வாகனத்தின் தேய்மான செலவு, காப்பீடு செலவும் தான் அதிகமாயிருக்கும். ஆனால் அதே 2002 ல் நீங்கள் ஒரு பரஸ்பர நிதித்திட்டத்தில் ரூ. 5 லட்சத்தை முதலீடு செய்திருந்தால் இன்று 2017 ல் அதே காரையும், உங்கள் குழந்தைகளின் மேற்படிப்பு செலவு மற்றும் ஒரு ஆடம்பர திருமணத்தையும் செய்திருக்கலாம். ஏனெனில் நீங்கள் 2002 ல் செய்த ரூ. 5 லட்ச முதலீடு இப்போது (June, 2017) ரூ. 2.60 கோடியாக (பரஸ்பர நிதியில்) இருந்திருக்கும் ‘ என்றார். மற்றொரு படத்தில் நீங்கள் இளமையில் (25 வயது) முதலீடு செய்தால் உங்கள் ஓய்வு காலத்தில் (60 வயது) இவ்வளவு தொகை பெறுவீர்கள், அதனால் இளமையில் முதலீடு செய்யுங்கள் என காண்பிக்கப்பட்டது. இதை பார்த்த என் நண்பர் என்னிடம், ‘ நல்லா படத்தை காண்பித்து ஏமாற்றுகிறார்கள், ஏன் 35 வயதில் சேர்த்தாலும் 70 வயதில் இவ்வளவு கிடைக்கும் என சொல்லலாமே. எல்லாம் 35 வருட கணக்கு தானே ‘ என்றார். ஆனால் நாம் முதலீடு சார்ந்த விஷயத்தில் சற்று நடைமுறைகளுடன் சிந்திக்க பழக வேண்டும்.

25 வயதில் உங்களால் முதலீடு செய்து 60 வயதில் ஓய்வு பெறலாம். அதை தான் அரசாங்கமும் விரும்புகிறது. உங்களை அவர்கள் 70, 80 வயதில் வேலை செய்வதை விரும்பவில்லை. 35 வயதில் உங்களால் முதலீடு செய்ய முடியும், ஆனால் உங்களால் 70 வயது வரை தொடர முடியுமா ? அதற்கான வருமான வாய்ப்பு எளிதா ?

 

தற்போதெல்லாம் எல்லோரும்,  ‘இளமையில் ஓய்வு பெற போகிறேன் ‘ என்ற  சிந்தனை கொண்டவர்கள். நீங்கள் 70, 80 வயதுகளில் எப்படி நன்றாக சம்பாதித்து இருக்க முடியும். அந்த வயதில் நமது உடல் ஆரோக்கியமும் மிக முக்கியம் (பணத்தை விட). ஆதலால் நாம் நடைமுறைக்கு ஒத்து வரும் நம்மால் இயன்ற முதலீடை மேற்கொள்ளலாம். தேவை இருப்பின் முதலீட்டினை அதிகரித்தும் பயன் பெறலாம்.

 

வாடகையும், ஒத்தியும் நமக்கு அவ்வப்போது தேவை தான். குறுகிய கால மற்றும் நீண்ட கால தேவைகளுக்கு தகுந்தாற் போல் நாம் வாடகையையும் (SIP), ஒத்தியையும் (Lumpsum Investing) தேர்ந்தெடுக்கலாம். சொந்த வீடு தேவையுள்ளவர்கள் இப்போது தான் கடன் வாங்கி வீடு கட்ட வேண்டுமென்ற அவசியமில்லை; EMI கட்டுவதற்கு பதில் மாதாந்திர SIP ஐ தொடங்கியும் பிற்காலத்தில் ஒரு நல்ல வீட்டை வாங்கலாம் (அ) கட்டலாம்.

 

கடனில்லாமல் வாழ்வதும் ஒரு பெரும்பேறு தான் !

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

www.varthagamadurai.com

(Slide Image Source: dreamstime.com)

You may also like...