எஸ்.பி.ஐ. வங்கியில் ஏற்பட்ட மோசடியால் வாடிக்கையாளர்கள் இழந்த பணம் ரூ. 7,951 கோடி

எஸ்.பி.ஐ. வங்கியில் ஏற்பட்ட மோசடியால்  வாடிக்கையாளர்கள் இழந்த பணம் ரூ. 7,951 கோடி

SBI Customers who had lost nearly Rs. 7,951 Crore in Fraudulent Cases

 

நாட்டின் மிகப்பெரிய மற்றும் பன்னாட்டு பொதுத்துறை வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி(State bank of India) திகழ்கிறது. கல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கிய இம்பீரியல் வங்கி(Imperial Bank of India) தான் பின்னாளில் பாரத ஸ்டேட் வங்கியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இரு நூறாண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த வங்கி மொத்தம் 24,000 கிளைகளையும், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி பணியாளர்களையும் கொண்டு வங்கி சேவைகளை நிர்வகித்து வருகிறது.
கடந்த 2018ம் வருடத்தின் அடிப்படையில் பாரத ஸ்டேட் வங்கியின்(SBI) சொத்து மதிப்பு சுமார் 33,12,461 கோடி ரூபாய். கடந்த 2016-17ம் நிதியாண்டில் ஸ்டேட் வங்கியின் நிகர லாபம் மட்டும் பணியாளர் ஒருவருக்கு ரூ. 511 /- என்ற அடிப்படையில் வருவாயை ஈட்டியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பிராண்டாகவும்(Branding), நம்பகமான பொதுத்துறை வங்கி என சொல்லப்பட்டாலும் ஸ்டேட் வங்கியில் சிக்கல்கள் ஏராளம்.

 

இந்திய பங்குச்சந்தையில் சந்தை மூலதனமாக ரூ. 2,43,000 கோடியை கொண்டிருக்கும் எஸ்.பி.ஐ. வங்கி கடந்த 2017-18ம் நிதியாண்டில் முதன்முறையாக 4,556 கோடி ரூபாய் நிகர நஷ்டத்தை அடைந்தது. கடந்த ஐந்து வருடங்களில் வங்கியின் வளர்ச்சியும் சொல்லி கொள்ளுமாறு இல்லை. தனியார்  வங்கிகளின் துரிதமான செயல்பாடும், வங்கிகள் அல்லாத நிதி சேவை நிறுவனங்களின்(NBFC) பங்களிப்பும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு ஒரு சவாலாகவே இருந்துள்ளன.

 

எஸ்.பி.ஐ. வங்கியின் வாராக்கடன்(Non Performing Assets) பிரச்சனையும், அதனை தொடர்ந்து துணை நிறுவன வங்கிகளை ஸ்டேட் வங்கியுடன் இணைத்த நிலையிலும் அதன் சேவையில் பெரிதாக முன்னேற்றம் இல்லை எனலாம். சமீபத்தில் திரு. சந்திரசேகர் என்பவரால் தகவல் சட்ட உரிமையின்(RTI) கீழ் ஸ்டேட் வங்கியிடம் இருந்து சில தகவல்கள் பெறப்பட்டன.

 

கிடைக்கப்பட்ட தகவலில், ஸ்டேட் வங்கி மற்றும் அதன் குழும வங்கியில் நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது (ஏப்ரல் – டிசம்பர் 2018) மாதங்களில் மோசடி வழக்குகளாக 1,885 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏற்பட்ட மோசடியின் மொத்த மதிப்பு சுமார் 7,951 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. நடப்பு நிதி வருடத்தில் முதல் காலாண்டில் 669 புகார்களும், இரண்டாம் காலாண்டில் 660 புகார்களும் மற்றும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் 556 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

 

ஒன்பது மாதங்களில் மோசடி பேர்வழிகளால்(Fraudulent Activities) வாடிக்கையாளர்கள் இழந்த தொகை ரூ. 7,951 கோடி, இவற்றில் கடந்த அக்டோபர்-டிசம்பர் காலத்தில் மட்டும்  நடந்த மோசடிகளின் மதிப்பு ரூ. 2,395 கோடியாகும்.

 

தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட மற்றொரு கேள்வியில், வாடிக்கையாளர்கள் இழந்த தொகைக்கான புகார்களில் வங்கியின் தீர்வு என்ன என்பது கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு வங்கியிடம் இருந்த எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. தகவல் பெறும் உரிமை சட்டம் பிரிவு 7(9) ன் கீழ், மேற்சொன்ன கேள்விக்கு பதிலளிக்க எஸ்.பி.ஐ. நிர்வாகம் மறுத்து விட்டது.

 

வங்கிகளின் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு பல அறிவுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகள் சொல்லப்பட்ட போதிலும், நுகர்வோர் சந்தையை அதிகமாக கொண்டிருக்கும் நமது நாட்டில் வங்கி மோசடிகள்(Bank Frauds) நடந்த வண்ணம் தான் உள்ளன. பெரும்பாலான வங்கி மோசடிகள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் இணைய பரிமாற்றத்தில் தான் நடைபெறுவதாக வங்கி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.