வர்த்தகத்தின் முதல் நாளில் 22 சதவீத ஏற்றம் – பாலிகேப் இந்தியா நிறுவனம்

வர்த்தகத்தின் முதல் நாளில் 22 சதவீத ஏற்றம் – பாலிகேப் இந்தியா நிறுவனம்

22 % rise in the first day after the listing – Polycab India

 

கடந்த சில வருடங்களாக இந்திய பங்குச்சந்தையில் மூலதனத்தை திரட்டுவதற்கு பல நிறுவனங்கள் ஐ.பி.ஓ.(Initial Public Offer -IPO) க்கு விண்ணப்பிக்கின்றன. பின்பு அவை முதன்மை சந்தை மூலம் தங்களுக்கான மூலதனத்தை முதலீட்டாளர்களிடம் பெறுகின்றன. முதன்மை சந்தையில் பங்குகளை வாங்கிய சந்தாதாரர்கள் அல்லது முதலீட்டாளர்கள் வெளியேறும் வண்ணம், இரண்டாம் சந்தையில்(Secondary Market)  அவர்களுக்கான வாய்ப்பு உள்ளது.
மும்பையை தலைமையிடமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் பாலிகேப்(Polycab India), மின்கம்பிகள் மற்றும் கேபிள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. எப்.எம்.இ.ஜி.(FMEG -Electrical Goods) துறையில் மின் விளக்குகள் மற்றும் விசிறிகள், சுவிட்சுகள், சோலார் பொருட்களையும் தயாரிப்பு மற்றும் விற்பனையும் செய்து வருகின்றன.

 

மின் கம்பிகள்(Wires & Cables) தயாரிப்பில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக இருந்து வரும் பாலிகேப், சந்தையில் ரூ.1,345 கோடியை மூலதனமாக பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தது. இந்த மூலதனம் நிறுவனத்தின் கடன் மற்றும் செயல்பாட்டு மூலதன செலவினங்களுக்கு என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதன்மை சந்தையில் 533 – 538 ரூபாய் என்ற அளவில் 2.5 கோடி பங்குகளை வெளியிட்ட இந்நிறுவனத்திற்கு விண்ணப்பித்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 52 மடங்காகும்.

 

பாலிகேப் நிறுவனத்திற்கு 24 நகரங்களில் உற்பத்தி ஆலைகளும், இதன் தயாரிப்பு பொருட்கள் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், இதன் மொத்த வருவாயில் ஏற்றுமதியின் பங்களிப்பு 3.5 சதவீதம் என்பது கவனிக்கத்தக்கது.

 

முதன்மை சந்தையில் வெற்றிகரமாக தனது மூலதனத்தை பெற்ற இந்நிறுவனம் நேற்று(16-04-2019) மும்பை(BSE) மற்றும் தேசிய பங்குச்சந்தையில்(NSE) பட்டியலிடப்பட்டது. முதன்மை சந்தையில் ரூ. 538 என்ற விலையில் முடிந்திருந்த இந்நிறுவன பங்கு, நேற்று இரண்டாம் சந்தையின் துவக்கத்திலேயே 633 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகியது. ஒரே நாளில்  அதிகபட்சமாக 677 ரூபாய் வரை சென்ற இந்த பங்கு, சந்தையின் முடிவில் பங்கு ஒன்றுக்கு ரூ. 655 என்ற விலையில் இரு சந்தைகளிலும் முடிவடைந்தது. இது 22 சதவீத ஏற்றமாகும்.

 

தேசிய சந்தையில் பாலிகேப் நிறுவனத்தில் நேற்று வர்த்தகமாகிய மொத்த பங்குகளின் எண்ணிக்கை சுமார் 2.30 கோடி பங்குகளாகும். பாலிகேப் நிறுவனத்திற்கு தொழில் வாய்ப்புகள் மற்றும் நிதிநிலை அறிக்கைகள் திருப்திகரமாக உள்ளதாகவும், அதனை சார்ந்து சில பங்குச்சந்தை நிபுணர்கள் இந்நிறுவன பங்கிற்கு குறுகிய கால இலக்கு விலைகளை கூறியுள்ளனர். சந்தையில் இந்த நிறுவனத்திற்கு போட்டியாளர்களாக கேவல்ஸ் இந்தியா(Havells India), பினோலெக்ஸ் கேபிள்ஸ்(Finolex), கெய்(KEI Industries) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

 

ஐ.பி.ஓ. விண்ணப்பம் முடிந்து இரண்டாம் சந்தைக்கு வந்தவுடன் ஒரு நிறுவனத்தில் உடனடியாக முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்த நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவு வெளியீடு மற்றும் அதனை சார்ந்து சந்தை செயல்படும் தன்மையை உன்னிப்பாக ஆராய்ந்தவுடன் இது போன்ற பங்குகளில் முதலீட்டை மேற்கொள்வது நீண்ட கால முதலீட்டாளரின் சாராம்சமாகும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.