வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 3

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 3

Personal Finance – Survey / Polling

 

நமது வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நிதி அறிவு துளிகள் என்ற தலைப்பில் நிதி சார்ந்த கேள்விகளும், அதற்கான பதில்களும் பெறப்படும். இது ஒரு வாக்கு பதிவு முறையில் அமையப்பெற்றது. உங்களுக்கான நிதி அறிவை நீங்கள் தற்சோதனை செய்து கொள்ள ஒரு தமிழ் களம்.
இரண்டாம் பாகத்திற்கான கேள்விகளும், அதற்கான விடைகளும் இங்கே…

 

  • வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ்(காப்பீடு) என்ற திட்டம் மட்டுமே உள்ளது ?

 

விடை:       இல்லை

 

விளக்கம்:  வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ் என்ற திட்டத்தை தவிர பல வழிகளில் நாம் வரி சேமிப்பினை பெறலாம். வருமான வரிச்சட்டம் பிரிவுகள் 80C, 80D, 80E, 80G, 80U மற்றும் மேலும் பல வகைகளில் வருமான வரியை சேமிக்கலாம். வரி சேமிப்பை அறிய,

 

வருமான வரி சேமிப்பு வழிகள்

 

வருமான வரி சேமிப்பிற்கு காப்பீடு திட்டத்தை மட்டுமே பயன்படுத்துவது சரியான அணுகுமுறை அல்ல.

  • நமது நாட்டில் தங்கத்தின் விலை மதிப்பு எதனை சார்ந்து மாறுகிறது ?

 

விடை: டாலர் மதிப்பு (Dollar)

 

விளக்கம்: பொதுவாக ஒரு நாட்டில் உள்ள நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களுக்கு அல்லது சேவைகளுக்கு, உற்பத்தி மற்றும் தேவைக்கு உள்ள இடைவெளியே(Demand-Supply) அதன் விலை மதிப்பை நிர்ணயிக்கும். உற்பத்தி பெருகி தேவை குறைந்திருப்பின், பொருள் அல்லது சேவைக்கான விலை குறைவாகவே இருக்கும். மாறாக தேவைகள் அதிகமாகவும், அதற்கான உற்பத்தி குறைவாக இருக்கும்பட்சத்தில் விலைத்தன்மை அதிகமாக இருக்கும்.

 

நம் நாட்டில் தங்கத்தின் தேவை இறக்குமதி மூலமாக(Gold Imports) தான் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆகையால் உற்பத்தி என்பது நம் நாட்டை சார்ந்ததல்ல. விழாக்காலங்களில் நகைக்கடைகளில் தங்கம் விலை அதிகமாக இருக்கும் என்பது உள்ளூர் சந்தையில் ஆபரண தங்கத்தின் விலை மதிப்பு அதிகரிப்பதையே காட்டுகிறது. மாறாக தங்கம் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதும், அதன் மதிப்பு அமெரிக்க டாலர்களில் தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை பொறுத்தே தங்கத்தின் விலையும் பெறப்படும். ஆக தங்கத்தின் விலை தினமும் மாற்றம் பெறுவது பெரும்பாலும் டாலர் மதிப்பின் மாற்றமே.

 

  • பங்குச்சந்தையும், பரஸ்பர நிதிகளும்(Mutual Funds) ஒன்றா ?

 

விடை: இல்லை

 

விளக்கம்: பங்குச்சந்தையும், பரஸ்பர நிதிகளும் வெவ்வேறானவை. பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகள் பரஸ்பர நிதி திட்டங்களில்(Mutual Fund Schemes) உள்ளன. ஆனால் பரஸ்பர நிதிகளில் உள்ள அனைத்து முதலீட்டு வகைகளும் பங்குச்சந்தையில் நாம் காண முடிவதில்லை. இரண்டுமே செபி(SEBI) என்ற ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் நிர்வகிக்கப்பட்டாலும், அதற்கான வழிமுறைகள் வேறுபாடுகள் கொண்டவை.

 

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை திரட்ட பொதுவெளியில் வருகின்றன. நிறுவனத்தின் வருவாயும், நிர்வாக திறனும் ஒரு முதலீட்டாளராக கவனிக்க வேண்டியது அவசியம். நாம் வாங்கிய பங்குகளின் நிறுவனம் சரியில்லை என்றால், நமது முதலீட்டிற்கு ரிஸ்க் அதிகம் தான். ஆதலால் தான் பங்குச்சந்தை ஒரு தொழில் சார்ந்த விஷயம் என்கிறோம்.
பரஸ்பர நிதிகள் என்பது டிரஸ்ட்(Sponsor or Trust) என்று சொல்லக்கூடிய அறக்கட்டளை அமைப்பு முறையில் இயங்கி வருவது. பரஸ்பர நிதிகளுக்கு பொதுவாக பங்குச்சந்தை நிறுவனங்கள் போன்று எந்த முதலீடும் தேவையில்லை. பரஸ்பர நிதிகள் வங்கிகள் போன்ற செயல்பாட்டு முறையை கொண்டிருக்கிறது. பரஸ்பர நிதிகளில் நீங்கள் சேமிப்பு கணக்கு, வைப்பு நிதி, ஆர்.டி. டெபாசிட்(Recurring Deposit), கடன் பத்திரங்கள், தங்கத்தில் முதலீடு, ரியல் எஸ்டேட் முதலீடு, அரசாங்க பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை சார்ந்த  முதலீடுகள் என பல வகை திட்டங்களை காணலாம்.

 

இங்கே சேமிப்பு கணக்கு என்பது லிக்விட் பண்ட்(Savings -Liquid Fund) எனவும், வைப்பு நிதி என்பது Lumpsum முதலீடு எனவும், ஆர்.டி. முறை SIP(Systematic Investment Plan) முதலீடு எனவும் பெயர் மாற்றம் பெறுகிறது, அவ்வளவே. வங்கி சேமிப்புகள் பாதுகாப்பானவை  என நாம் நினைத்தால், பரஸ்பர நிதி திட்டங்களும் பாதுகாப்பானவை தான், திட்டங்களை சரியாக தேர்ந்தெடுப்பது அவசியம்.

  • நிதி சார்ந்த கல்வியினை பெற நீங்கள் எவ்வளவு தொகையை செலவிட தயாராக உள்ளீர்கள் ?

விளக்கம்: நம் நாட்டில் சேமிப்பு என்ற பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வந்தாலும், முதலீடு என்ற சாதனத்தில் சிலர் மட்டுமே பங்குபெறுவது வருந்தத்தக்க விஷயம். உண்மையில் நாம் சொல்லும் வளர்ந்த நாடுகளில் வேலை வாய்ப்புகளோ, பணக்காரர்களோ அதிகமில்லை. மாறாக அங்கே தொழில் சார்ந்த விஷயங்களும், முதலீடு பற்றிய விழிப்புணர்வும் தான் தாக்கத்தை பெறுகிறது.

 

பொதுவாக நாம் முதலீடு செய்வதில் அக்கறை காட்டுவதில்லை என்றாலும், மிகவும் ரிஸ்க் எடுக்கும் தன்மை நம்மிடம் உள்ளது எனலாம். இன்றும் போன்சி திட்டங்கள்(Ponzi Schemes) என்னும் சதுரங்க வேட்டைகள், தங்க முதலீடு(Gold Scam), பிட் காயின்(Bitcoin) முதலீடு, இன்னும் நமக்கு தெரியாத என்னென்னவோ விஷயங்களை செய்து வருகிறோம். பின்பு சில காலங்களுக்கு அவை மறைந்து விடும். நம்மிடம் உள்ள குறுகிய கால அணுகுமுறை தான் நம்மை தவறான வழிகளில் பணத்தை முதலீடு செய்ய முனைகிறது. பெரும்பாலும் நாம் ஏமாற்றப்படுவது நம்முடைய பணத்தை இரட்டிப்பாக்கும் முயற்சியில் தான். புரிந்து கொள்ளுங்கள், வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புகளில் உங்கள் பணம் இரட்டிப்பாக பத்து வருடங்களாகும். பங்குச்சந்தை மற்றும் தொழில்களில் நீங்கள் முதலீடு செய்தாலும் உங்கள் பணம் ஐந்து முதல் ஆறு வருடங்களுக்கு பின்னரே இரண்டு மடங்காகும். பங்குச்சந்தையில் நீண்டகால சராசரி வருமானம் 12-15 சதவீதம் மட்டுமே என்பதை மறந்து விடாதீர்கள்.

 

அப்படியிருக்க, போன்சி திட்டங்கள் என்றும் சொல்லப்படும் ஏமாற்று முறைகளில் ஒரு வருடம் முதல் மூன்று வருடங்களில் உங்கள் பணம் இரட்டிப்பாவது எவ்வாறு சாத்தியம் என்பதை சிந்தியுங்கள். உண்மையில் அப்படி ஒரு முதலீடு இருந்திருந்தால், ஏன் நம் நாட்டின் அம்பானியும், அதானியும், டாடா மற்றும் டி.வி.எஸ். நிறுவனமும் காலங்காலமாக தொழில் புரிய வேண்டும். அவர்களிடம் இல்லாத பணமா, முதலீடு செய்வதற்கு. அவர்கள் நினைத்திருந்தால் இது போன்ற ஏமாற்று திட்டங்களில் முதலீடு செய்து பல்லாயிரம் கோடிகளை பல மடங்காக மாற்றியிருக்கலாமே. மீண்டும் சிந்தியுங்கள்.

 

நாம் கற்ற கல்வி நமக்கு பல வருடங்களுக்கு பிறகே அதன் பயனை தருகிறது. நாம் நமக்கான கல்விக்கு செலவழித்த பணத்தை திரும்ப பெற, நம்மால் உடனே முடிவதில்லை. நமது மேற்படிப்பு கல்வி மூன்று முதல் ஐந்து ஆண்டு காலம் வரை உள்ளன. பின்பு நாம் அந்த துறையில் புதிய மனிதராக வேலை செய்கிறோம். ஐந்து வருட அனுபவத்திற்கு பிறகே நம்மால் அந்த துறையை பற்றிய ஒரு புரிதல் வருகிறது. அப்படியிருக்க முதலீடு என்ற விஷயத்திற்குள் நாம் நுழையும் போது, நாம் அதற்கான கல்வியை கற்கிறோமா, முதலீட்டை கற்று கொள்வதற்கு எவ்வளவு நேரத்தை செலவிடுகிறோம், அதற்கான செலவின விகிதம் ஆகியவை மிகவும் அவசியமான ஒன்று.

 

பொறியியல் படிப்பு முதல் மருத்துவ படிப்பு வரையிலான கல்விச்செலவை நாம் திரும்ப பெற, பல வருட காலங்களாகும்.

 

  • பங்குச்சந்தை(Share Market) ஒரு ___________ ?

 

விடை: தொழில்

 

விளக்கம்: பங்குச்சந்தை என்பது ஒரு சூதாட்டம் என்று சொல்லிக்கொண்டாலும், அது ஒரு தொழில் சார்ந்த விஷயமே. ஏன், பணக்காரர்கள் பணக்காரர்களாகவே இருக்கிறார்கள், ஏழைகள் ஏழைகளாகவே வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு திரு. ராபர்ட் கியோசகி(Robert Kiyosaki) அவர்களின், ‘ பணக்கார தந்தை, ஏழை தந்தை ‘ புத்தகமே சிறந்த உதாரணம்.

 

பணத்தை பற்றிய நமது கல்வி தான் பெரும்பாலும் நமது நிதி வாழ்க்கையையும் நிர்ணயிக்கிறது. ஐந்தாம் வகுப்பை தாண்டாத ஒருவர் மாபெரும் தொழிலதிபராக வருவதும், மெத்தபடித்தவர் வாழ்நாள் முழுவதும் வேலை செய்வதும் இதன் பின்னணியில் தான். பணம் மட்டுமே நம் வாழ்க்கையில்லை என நாம் சொல்லிக்கொண்டாலும், அதன் பின்பு தான் நாம் வாழ்நாள் முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறோம். மாறாக, பணத்தை நிர்வகிக்க தெரிந்தவர்கள் உண்மையில் தங்களுக்கு தேவையான விஷயங்களை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள். இது அவர்களை மகிழ்வாகவும் வைத்து கொள்கிறது.

 

ஒரு மரக்கன்றை தண்ணீர் ஊற்றி, அதனை பாதுகாத்து மரமாக்க பல வருடங்கள் ஆகும். இதனை போன்று தான் ஒரு தொழிலும், பங்குச்சந்தையும். உண்மையில் பங்குச்சந்தையிலும், எந்தவொரு தொழிலிலும் குறுகிய காலத்தில் நாம் வேகமாக வளர்ந்ததாக வரலாறு சொல்லவில்லை. அது நீண்டகால பயணம் மட்டுமே. ஒரு துறையை பற்றி நாம் எந்த அடிப்படை விஷயங்களையும் கற்காமல், அதனை பற்றிய கருத்துக்கு நாம் எப்படி செவிசாய்க்க முடியும்.

 

உங்கள் ஐந்து வயது குழந்தையின் இயல்பான குணம், போட்டிகளை எதிர்கொள்ளும் திறன் மற்றும் கல்வி அறிவை அதன் இருபது வயதில் எவ்வாறு இருக்கும் என உங்களால் இப்போதே உறுதியாக கணித்து சொல்ல முடியுமா ?
ஒவ்வொரு பாகத்திலும் ஐந்து கேள்விகள் கேட்கப்படும், அதற்கான பதில்கள் கருத்து கணிப்பின் வடிவில் அமையப்பெறும். கேள்விகளின் சரியான பதில்கள் நமது இணைய தளத்தில் வாக்கு பதிவு நாள் முடிந்தவுடன் வெளியிடப்படும். கருத்து கணிப்பின் முடிவில் வாசகர்கள் தங்கள் நிதி சார்ந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

 

இந்த வார கேள்விகள்:

 

  1. நீங்கள் ஒரு வங்கியில் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள். உங்களுக்கான வட்டி விகிதம் 8 சதவீதம். உங்களது முதலீடு எத்தனை வருடங்களில் இரட்டிப்பாகும் ?
  2. நம் நாடு சுதந்திரம் பெற்ற வருடத்தில் ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு எவ்வளவு ?
  3. லிக்விட் பண்ட்(Liquid Fund)  ___________ ?
  4. உங்களுக்கான நிதி இலக்குகள்(Financial Goals) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ?
  5. DICGC முறைப்படி உங்களது வங்கி சேமிப்பில் எவ்வளவு தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது ?

 

குறிப்பு:

 

நீங்கள் வாக்கு பதிவு செய்வதற்கான இணைப்பை காண முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிடவும்.

 

Personal Finance – Survey 3

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.