நான்காம் காலாண்டில் நஷ்டத்தை அடைந்த எல்.ஐ.சி.யின் ஐ.டி.பி.ஐ. வங்கி

நான்காம் காலாண்டில் நஷ்டத்தை அடைந்த எல்.ஐ.சி.யின் ஐ.டி.பி.ஐ. வங்கி

Net loss in the Fourth Quarter (Q4FY19) for LIC’s IDBI Bank

 

எல்.ஐ.சி. காப்பீட்டு நிறுவனம்(LIC India) ஐ.டி.பி.ஐ. வங்கியை கையகப்படுத்திய பின், ஐ.டி.பி.ஐ. வங்கி தனது 2018-19ம் நிதி வருடத்தின் நான்காம் காலாண்டு முடிவுகளை  வெளியிட்டது. இம்முறையும் வங்கி நான்காம் காலாண்டில் 4,918 கோடி ரூபாயை நஷ்டமாக காட்டியுள்ளது. இதற்கு முந்தைய மார்ச் 2018ம் காலாண்டில் நஷ்டம் ரூ.5,663 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 2018 காலாண்டில் ரூ.55,580 கோடியாக இருந்த வங்கியின் மொத்த வாராக்கடன்(NPA) மார்ச் 2019ம் காலாண்டின் முடிவில் 50,000 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. நிறுவனத்தின் வட்டி வருவாய்(Interest Income) ரூ.5,463 கோடியாக உள்ளது. இது இதற்கு முந்தைய மார்ச் 2018ம் காலாண்டில் 5,214 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

 

2018ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் ரூ.2,700 கோடியாக இருந்த இதர வருமானம், தற்போது முடிந்த காலாண்டில் 1,153 கோடி ரூபாயாக குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது. 2017-18ம் நிதியாண்டில் ஐ.டி.பி.ஐ.(IDBI Bank) வங்கியின் நஷ்டம் ரூ.8,238 கோடியாக இருந்த நிலையில், 2018-19ம் நிதியாண்டு முடிவில் ரூ.15,116 கோடி நஷ்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வாராக்கடன்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை(Provisions) அதிகரித்ததால் நிறுவனத்தின் நஷ்டம் அதிகமானதாக வங்கியின் சார்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது வங்கியின் சந்தை மதிப்பு 29,400 கோடி ரூபாய் என்ற அளவிலும், கடன் மதிப்பு(Debt) 3,11,110 கோடி ரூபாயாக உள்ளது. வங்கி கடந்த நான்கு நிதியாண்டுகளில் அதாவது பத்து காலாண்டுகளுக்கு மேலாக  நஷ்டத்தை மட்டுமே சந்தித்துள்ளது.

 

ஐ.டி.பி.ஐ.வங்கி தனது பரஸ்பர நிதி சேவையை(Mutual Funds) விற்கும் நிலையில் உள்ளதாக தெரிகிறது. இந்த சேவையை முழுவதுமாக விற்கும் போது, சுமார் 450 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் தொகை குறையலாம். எல்.ஐ.சி. நிறுவனம் ஏற்கனவே பரஸ்பர நிதி சேவையை வழங்கி வரும் நிலையில், ஐ.டி.பி.ஐ. வங்கியின் கீழ் பரஸ்பர நிதி சேவை தேவைப்படாது என சொல்லப்பட்டுள்ளது.

 

இதே போல, ஐ.டி.பி.ஐ. வங்கி தனது காப்பீடு சேவையையும்(Life Insurance Business) விற்க விருப்பம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வரவிருக்கும் நாட்களில் இந்த வங்கி காப்பீடு மற்றும் பரஸ்பர நிதி சேவையிலிருந்து வெளியேறும். சமீபத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், கடன் சுமை காரணமாக தனது பரஸ்பர நிதி சேவையை முழுவதுமாக ஜப்பானின் நிப்பான் காப்பீட்டு நிறுவனத்திடம்(Nippon Life Insurance) விற்க முடிவு செய்திருந்தது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.