தங்கம் விலையேற்றம் – தற்போது முதலீடு செய்ய ஏற்ற காலமா ?

தங்கம் விலையேற்றம் – தற்போது முதலீடு செய்ய ஏற்ற காலமா ?

Is it the right time to invest in Gold ?

 

தமிழகத்தில் தங்கத்தின் சமீபத்திய விலை 24 K (Carat) விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 3,415 ஆகவும், 22 K விலை கிராம் ஒன்றுக்கு 3,259 ரூபாயாகவும் வர்த்தகமானது. நடப்பு ஜூன் மாதத்தில் 22K விலை ஒரு கிராமுக்கு ரூ. 3,079 என்ற விலையிலிருந்து 180 ரூபாய் வரை தற்போது அதிகரித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் ஒன்றாம் தேதி இது கிராம் ஒன்றுக்கு(Gold price per gram) ரூ. 2,905 ஆக இருந்தது கவனிக்கத்தக்கது.
கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்துள்ளது. இதன் காரணமாக மக்களிடையே தங்கத்தை ஆபரணமாக இப்போது வாங்கி வைக்கலாமா என்ற ஆவலும் அதிகரித்துள்ளது. இருப்பினும், முதலீடு என்ற சிந்தனையில் காணும் போது, தற்போதைய விலை எவ்வாறு உள்ளது என நாம் பார்ப்போம்.

 

பொதுவாக தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் சில காரணிகள்(Factors) உள்ளன. நம் நாட்டில் தங்கத்தின் தேவை இறக்குமதியை சார்ந்து உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உலகளவில் எப்போதெல்லாம் பொருளாதார மந்த நிலை காணப்படுகிறதோ, அப்போது தங்கத்தின் மீது மதிப்பு அதிகரிக்கும். இதற்கு காரணமாக சொல்லப்படுவது தங்கம் ஒரு இழப்புக்காப்பு கருவி(Hedging) என்று சொல்லப்படுவதால் தான்.

 

தங்கத்தின் விலையில் அமெரிக்க டாலர் மதிப்பின் மாற்றமும் உள்ளது என்பது உண்மையே. நாம் தங்கத்தை டாலர் மதிப்பில் தான் இறக்குமதி செய்து வருகிறோம். தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் சுவிட்சர்லாந்து(Switzerland) முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் சீனாவும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. உலகின் மொத்த தங்க இறக்குமதியில்(Gold Imports) 22 சதவீதம் என்ற அளவில் சுவிட்சர்லாந்து நாட்டின் பங்களிப்பு உள்ளது. நம் நாட்டின் இறக்குமதி மதிப்பு 11 சதவீதமும், சீனாவின் இறக்குமதி 15 சதவீதமும் உள்ளது.

 

தங்கத்தினை அதிகமாக கையிருப்பு(Gold Reserves) வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. உலகின் மொத்த தங்க கையிருப்பில் அமெரிக்கா சுமார் 75 சதவீத பங்கினை கொண்டுள்ளது. இந்தியா பத்தாவது இடத்தில் 5 சதவீத கையிருப்புடன் உள்ளது. நம் நாட்டில் தங்கத்தின் மதிப்பு பெரும்பாலும் திருமண நாட்களிலும், விழாக்காலங்களில் மட்டுமே பார்க்கப்படுகிறது. அவசர தேவைக்கு தங்கத்தை அடமானம் வைத்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை நம்மிடம் இருந்தாலும், அடமானத்திற்கு பிறகான மீட்டெடுப்பில் நம் நாட்டில் பெரும்பாலோர் தோல்வியடைகின்றனர்.

 

பங்குச்சந்தை எப்போதெல்லாம் மந்த நிலையில் அல்லது இறக்கத்தில் காணப்படுகிறதோ, அப்போது முதலீட்டாளர்களின் நம்பிக்கை தங்கத்தின் மீது அதிகரிக்கிறது. அதாவது பங்குச்சந்தை ஏற்றம் பெறும்போதெல்லாம், தங்கத்தின் விலை இறங்கும். மாறாக பங்குச்சந்தை இறக்கத்தில் தங்கத்தின் விலை அதிகரிக்கும்.

 

அதே போல, ஒரு நாட்டின் பணவீக்கம்(Inflation) அதிகரிக்கும் போது, அந்நாட்டின் பணத்தின் மதிப்பு வலுவிழக்கும். இது போன்ற சமயங்களில் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் பார்வை அமைகிறது. இதன் காரணமாக பணவீக்க அதிகரிப்பு சூழ்நிலையில் தங்கத்தின் விலை அதிகரிக்கலாம். பணவீக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், வங்கியில் டெபாசிட்டுக்கான வட்டி விகிதமும் அதிகமாக காணப்படும். இது போன்ற நிலை ஏற்படும் போது தங்கத்திற்கும், வங்கி வட்டி விகிதத்திற்கும் இடையே போட்டி ஏற்படுவதுண்டு.

 

பொதுத்துறை வங்கிகளில் பாதுகாப்பான வைப்பு நிதி வட்டி விகிதம் எனும் போது, தங்கத்தில் அதிகம் முதலீடு சேருமா என்பதும் சந்தேகமே. ஆகையால், பணவீக்கம் அதிகரித்து, வங்கிகளில் போதுமான வட்டி வருவாய் கிடைக்கப்பெறவில்லை எனில், தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கலாம்.

 

தங்கத்தினை நம் நாடு டாலர் மதிப்பில் இறக்குமதி செய்து வருகிறது என்பதை நாம் சொல்லியிருந்தோம். உலக சந்தையில் தங்கத்தின் விலையில் எந்த தாக்கம் இல்லையென்றாலும், இந்தியாவில் ரூபாய்-டாலர் மதிப்பின் மாற்றம் தங்கத்தின் இறக்குமதி விலையில் தெரிய வரும். ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பு வலுவடையும் போது, தங்கத்தின் விலை அதிகரிக்கும். ஆனால், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவடைவது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தும்.

 

தங்கத்தின் அதிகப்படியான தேவையும், மற்ற முதலீடுகளின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைவும் தங்கத்தின் விலையை அதிகரிக்க செய்யலாம். தற்போதைய நிலையில் தங்கத்தில் முதலீடு செய்யலாமா என கேட்டால், வேண்டாம் என்று தான் நாம் சொல்ல வேண்டியிருக்கும்.

 

பொதுவாக உலக பொருளாதாரம் மந்தமாக காணப்படும் போது, தங்கம் மட்டுமல்லாமல் வெள்ளியின் விலையும் அதிகமாக காணப்படும். ஆனால் இம்முறை வெள்ளியின் விலை தங்கத்தினை போல அதிகரிக்கவில்லை. தங்கத்தின் தற்போதைய விலை அதிகரிப்பு தற்காலிகமே என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

இப்போதைய முதலீட்டு வாய்ப்பாக வெள்ளியை எடுத்து கொள்ளலாம் எனவும், வர்த்தக போர், டாலர் மாற்றம் ஆகிய காரணத்தால் தங்கத்தின் விலை தற்காலிகமாக அதிகரித்துள்ளது என சொல்லப்பட்டுள்ளது. அதே போன்று, எந்தவொரு முதலீட்டு சாதனத்தில் முதலீடு செய்வதற்கான ஏற்ற காலம், அவை இறக்கத்தில் இருக்கும் போது மட்டுமே. ஏற்றத்தில் வாங்கி விட்டு, பின்பு நான் வாங்கிய பிறகு இறங்கி விட்டதே என புலம்ப வேண்டாம். பங்குகளிலும் நாம் இதனை காணலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.