இலவச சிபில் கிரெடிட் அறிக்கையை பெறுவது எப்படி ?

இலவச சிபில் கிரெடிட் அறிக்கையை பெறுவது எப்படி ?

How to get a Free CIBIL Credit score report ?

 

பதினைந்து வருடங்களுக்கு முன்பு, நாம் வங்கியில் கடன் கேட்டு போனால், வங்கி நம்மிடம் 6 மாத வருவாய் அறிக்கை, வருமான சான்றிதழ், நாம் வேலை பார்க்கும் நிறுவனத்தின் தகவல்கள் மற்றும் அடமான சொத்துக்களின் விவரங்கள் என பல தகவல்களை கேட்டு பெறும். அப்போது நமக்கு வருமான சான்றிதழ் வாங்குவதே ஒரு நாள் வேலையாகி விடும்.
ஆனால் தற்போது நிலைமை மாறி விட்டது. நம் நாட்டில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் பான் எண்ணின்(PAN) சிறப்பம்சங்கள் வங்கிக்கடன் முறையை எளிமையாக்கி விட்டது எனலாம். பான் எண்ணின் தொடர் வளர்ச்சி இப்போது முற்றிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே ஆதார்(Aadhaar) என்னும் அடையாள முறையும் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்சமயம் இணைக்கப்பட்டுள்ளது. பான் மற்றும் ஆதார் எண் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் நிதி விவரங்களை(Financial Position) சொல்வதாக அமைந்துள்ளன.

 

இப்போதைய காலத்தில், நாம் வங்கியில் கடன் கேட்டு சென்றால், வங்கி நம்மிடம் எதுவும் கேட்க தேவையில்லை. அவர்களது கிளை சார்பாக வேண்டுமானால் சில சான்றிதழ்களின் நகல்களை கேட்கலாம். நமக்கான வங்கிக்கடனை பரிசீலனை செய்யும் போது, நமது பான் எண்ணை(PAN) கொண்டு கடன் தகுதி நிலையை(Credit Score) ஆய்வு செய்வர். இந்த கடன் தகுதி நிலை என்பது கடன் தகவல் நிறுவனங்களால் ஏற்படுத்தப்படும் அறிக்கையாகும். நமக்கான தகவல்களை வங்கிகள், இது போன்ற நிறுவனங்களிடம் இருந்து கேட்டு பெறும்.

 

வங்கிகளில் கடன் பெற நமது வருவாயின் மதிப்பு(Annual Income) மட்டும் போதாது, மாறாக நமது கடன் தகுதியும் அவசியம். கடன் தகவல் நிறுவனங்கள் என்று சொல்லப்படும் கிரெடிட் ஏஜென்சிகள்(Credit Agencies) நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரின் நிதி (பான் மற்றும் வங்கிக்கணக்கு எண் மூலம்) தொடர்பான தகவல்களை சேகரித்து அதனை ஒரு தரவுகளாக பதிவு செய்து வருகிறது. நாம் ஏற்கனவே எந்த வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியிருந்தோம், கடந்த காலத்தில் கடனை முறையாக செலுத்தியுள்ளோமா, நமது வரவு-செலவு அறிக்கை எவ்வாறு இருந்துள்ளது மற்றும் கிரெடிட் கார்டை(Usage of Credit cards) பயன்படுத்தும் தன்மை போன்ற தகவல்கள் கிரெடிட் ஏஜென்சி வசம் இருக்கும். இந்த தகவல்களை தான் வங்கிகள் நாம் கடன் கேட்டு போகும் போது, அதன் அறிக்கையை ஆராயும்.

 

கிரெடிட் ஏஜென்சிகள் வங்கிகள் சார்ந்த தகவல் மட்டுமில்லாமல், மற்ற நிதி சேவை நிறுவனங்களிடம்(NBFC) உள்ள தனி நபரின் நிதி சார்ந்த தரவுகளையும் பதிவு செய்யும். தனி நபரின் நிதி நிலைமைகளை(Individual’s Financial Status) இது பொதுவாக பிரதிபலிக்கும். இதனை தான் நாம் கடன் தகுதி அறிக்கை(Credit Score Report) என்கிறோம்.

 

இன்று நம் நாட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட கிரெடிட் ஏஜென்சிகள் உள்ளன. இவற்றில் மிகவும் பிரபலமானவை(Credit Information Companies) – Transunion CIBIL, Experian PLC, Highmark, Equifax. இவை பெரும்பாலும் நன்கு அறியப்பட்டவை மற்றும் நம்பகமான கடன் தகுதி அறிக்கையை தயார் செய்யும் நிறுவனங்களாகும். சிபில்(Credit Information Bureau India Limited -CIBIL) மிகவும் பழமையான மற்றும் நம்பகமான கடன் தகுதி நிலையை அறிவிக்கும் பெரிய நிறுவனமாகும்.

 

பொதுவாக, கிரெடிட் ஏஜென்சிகளின் வேலை, வங்கிகள் மற்றும் நிதி சேவை நிறுவனங்களால் அளிக்கப்படும் தனிநபர் தகவல்களை பெறுதல், அதனை பராமரித்தல் மற்றும் அந்த நபருக்கு வங்கிகள் கடன் அளித்தால், அவரால் தற்சமயம் கடனை செலுத்தக்கூடிய நிதி நிலைமை போன்றவற்றை கொண்டிருக்கும். கிரெடிட் அறிக்கையின் மூலம் வங்கிகள் வாடிக்கையாளரின் நிதி நிலைமையை அறிந்து, அதற்கேற்றவாறு கடனை பரிசீலிக்கும்.

 

தனிநபர் ஒருவரின் கிரெடிட் அறிக்கையை பெறுவதற்கு கிரெடிட் ஏஜென்சிகள் ரூ. 300 லிருந்து 1000 ரூபாய் வரை கட்டணமாக பெறுகிறது. இதனை வங்கிகள் பெறும் போது, கட்டணத்தை நம்மிடம் இருந்து வசூல் செய்யும். நாம் விண்ணப்பத்திருக்கும் கடன் மதிப்பை கொண்டு, இந்த கிரெடிட் அறிக்கையை பெறுவது அவசியமாகும். கிரெடிட் அறிக்கையை பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட வங்கியோ அல்லது வாடிக்கையாளரோ கிரெடிட் அறிக்கை நிறுவனங்களிடம் விண்ணப்பிக்கலாம்.

 

இப்போதெல்லாம், இணைய பயன்பாடு அதிகரித்து விட்டதால், கிரெடிட் ஏஜென்சிகள் தனிநபருக்கான அறிக்கையை ஆன்லைன் முறையில்(Get Free online Credit report) கொண்டு வந்து விட்டன. இது போக பல வலைத்தளங்கள் கிரெடிட் அறிக்கையை ஏஜென்சிகளிடம் இருந்து பெற்று தருகின்றன. பைசா பஜார்(Paisa Bazaar), பேங்க் பஜார், கிளியர் ஸ்கோர்(Clear Score) என மூன்றாம் தரப்பு வலைதள நிறுவனங்கள் இது போன்ற அறிக்கையை ஒரு முறை மட்டும் இலவசமாக அளிக்கின்றன. தற்போது கிரெடிட் ஏஜென்சிகளும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு இலவச கிரெடிட் அறிக்கையை தருகிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட வருடத்தில் ஒரு முறை மட்டும் செல்லுபடியாகும் அறிக்கையை இலவசமாக அளித்து வருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட அறிக்கை தேவைப்படும் போது அதற்கான கட்டணங்கள் பொருந்தும்.

 

சிபில் கிரெடிட் ஸ்கோர்(CIBIL Score) அறிக்கையை மிகவும் எளிமையான முறையில் பெறலாம். நாம் மேற்சொன்ன நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு பார்வையிடுங்கள். இலவச கடன் அறிக்கை அல்லது சிபில் அறிக்கையை பெறுவதற்கான லிங்கை பாருங்கள். ஒரு புதிய கணக்கை இலவசமாக ஆரம்பியுங்கள். பின்னர் உங்களது பெயர், பான் எண், பிறந்த தேதி, முகவரி மற்றும் சில தகவல்களை நீங்கள் பதிவு செய்ய வேண்டியிருக்கும். தேவையான தகவல்களை சமர்பித்த பின், உங்களது கிரெடிட் அறிக்கை திரையில் தெரியும். சில நிறுவனங்கள் உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கும்.

 

நீங்கள் உங்கள் கடன் தகுதி நிலை அறிக்கையில்(Credit reporting), அதிக அல்லது சாதகமான மதிப்பை(Medium to High) பெறுகிறீர்கள் எனில், வங்கிகளில் எளிதாக கடன் பெறும் வாய்ப்பு அதிகம். அறிக்கையில் மிகவும் குறைவான மதிப்பெண் அல்லது வங்கிகளை திருப்திப்படுத்த கூடிய மதிப்பெண் இல்லை(Medium to low) என்றால், வங்கிகள் உங்களுக்கு கடன் அளிப்பதை தாமதப்படுத்தலாம் அல்லது விண்ணப்பத்தை நிராகரிக்கலாம். எனவே, நீண்ட கால நோக்கில் ஒரு நல்ல கடன் மதிப்பீட்டை நாம் பராமரிக்கும் போது, நமக்கான அறிக்கை எண்களும் சாதகமாக இருக்கும். நமக்கு அவசர காலத்தில் தேவையான கடன்  தொகையும் உடனடியாக கிடைக்க பெறும்.

 

வாழ்க  வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.