இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் அந்நிய முதலீடு

இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் அந்நிய முதலீடு

Massive Outflows from Indian Stock Market by the Foreign Investors

 

இந்திய பங்குச்சந்தை நடப்பு வருடம் முழுவதும் ஏற்ற-இறக்கமாகவே காணப்பட்டுள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 50 (Nifty 50) குறியீடு இந்த ஆண்டில் (14-12-2018 வரை) சுமார் 5.90 சதவீத ஏற்றத்திலும், மும்பை பங்குச்சந்தை 8.70 சதவீத ஏற்றத்திலும் உள்ளது. அதே நேரத்தில் கடந்த மூன்று மாத கால அடிப்படையில் பார்க்கும் போது, நிப்டி 50 குறியீடு 6.30 சதவீத இறக்கத்திலும், மும்பை சந்தை ஆறு சதவீத இறக்கத்திலும் இருக்கிறது.

 

அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு (Foreign Portfolio Investors), நம் நாட்டின் சந்தையில் கடந்த ஒரு வருடமாக குறைவான அளவிலே உள்ளது. கடந்த வருடத்தில் அதிகபட்ச வெளிநாட்டு முதலீடாக சுமார் 2 லட்சத்தை பெற்ற இந்திய பங்குச்சந்தை, இந்த வருடத்தில் அதற்கு நேரெதிர் மாறாக அமைந்தது. இந்த ஆண்டில் இதுவரை மட்டும், அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் (Equity & Debt) இருந்து வெளியே எடுத்த தொகை மட்டும் சுமார் 87,700 கோடி ரூபாய்.

 

பொருளாதார தேக்க நிலை, சமீபத்திய பாரத ரிசர்வ் வங்கியின் கவர்னர் ராஜினாமா, வரவிருக்கும் அமெரிக்க வட்டி விகித அறிவிப்பு, உள்நாட்டு அரசியல் என பங்குச்சந்தையை வெகுவாக பாதித்ததும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை சந்தையில் இருந்து வெளியே எடுக்க காரணமாக அமைந்துள்ளது. இந்திய சந்தையில் உள்ள மிகப்பெரிய மற்றும் வளர்ச்சி நிறுவனங்களில் அந்நிய முதலீட்டாளர்களின் பங்கு (Share Holding) மட்டும் சுமார் 25 சதவீதமாகும்.

 

சந்தையில் உள்ள நிறுவனங்களின் நிறுவனர்கள் வைத்திருக்கும் பங்குகளுக்கு அடுத்தாற் போல், அந்நிய முதலீட்டாளர்களின் பங்கு இருப்பது கவனிக்கத்தக்கது. இவர்கள் வெளியேறும் பட்சத்தில், பங்குச்சந்தை ஆட்டம் காண்பது இயல்பு. வரவிருக்கும் அமெரிக்க வட்டி விகித அறிவிப்பை (US Fed Rate) சார்ந்தும், அவர்களின் முதலீடு வெளியேறுகிறது. முன்னாள் கவர்னர் திரு. உர்ஜித் பட்டேல் அவர்களின் தீடீர் ராஜினாமாவும் (RBI Governor’s Resignation) மற்றொரு காரணமாக உள்ளது.

( Read this post after the advertisement… )

 இந்திய கடன் சந்தையிலும் (Debt Market) அந்நிய முதலீட்டாளர்களின் வெளியேறும் மதிப்பு 50,000 கோடி ரூபாயை தாண்டியது. கடந்த ஆறு வருடங்களாக வாங்கும் போக்கையே கொண்டிருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதன்முறையாக இந்த வருடம் முழுவதும் முதலீட்டை வெளியே எடுத்து கொண்டிருக்கின்றனர். நாட்டில் அடுத்து வரவிருக்கும் பட்ஜெட் அறிக்கையும், தேர்தலும் (Elections 2019) மற்றும் அதனை சார்ந்த காரணிகளும் இனி பங்குச்சந்தையை நகர்த்தலாம்.

 

அந்நிய முதலீட்டாளர்கள் (FII Outflows) வெளியேறி சென்றாலும், உள்நாட்டு முதலீட்டாளர்களின் (Domestic Investors) சதவீதம் சற்று சாதகமாக உள்ளது. பரஸ்பர நிதி முதலீடுகளில் வரும் SIP முதலீடும் சந்தைக்கு பலத்தை சேர்கின்றன. நடப்பு மாதத்தில் பங்குச்சந்தையில் அந்நிய முதலீட்டாளர்கள் 2,930 கோடி ரூபாயை விற்றும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் 610 கோடி ரூபாய்க்கு வாங்கியும் உள்ளனர். அதே வேளையில் கடந்த மாதம் அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு சுமார் 12,000 கோடி ரூபாய். இது கடந்த 11 மாதங்களில் இல்லாத தொகையாகும். இதற்கு காரணமாக சொல்லப்பட்ட விஷயம் கச்சா எண்ணெய் விலை குறைவு.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.