தேர்தல் முடிவுகள் வந்தாச்சு, சந்தையை நகர்த்த போகும் அடுத்த காரணிகள் என்ன ?

தேர்தல் முடிவுகள் வந்தாச்சு, சந்தையை நகர்த்த போகும் அடுத்த காரணிகள் என்ன ?

Elections 2019 Results Declared, What’s next for the Indian Stock Market ?

 

கடந்த வியாழக்கிழமை அன்று(23-05-2019) நாட்டின் 17வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றதை அடுத்து, இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க உள்ளது. இந்திய பங்குச்சந்தை சமீப காலமாக மிகவும் எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் என இவற்றை சொல்லலாம்.
2019 தேர்தல் முடிவுகளை ஒட்டி, சந்தை பெரிய ஏற்றத்தை காணாவிட்டாலும், தற்போது இந்திய பங்குச்சந்தை மதிப்பளவில்(Overvalued) உச்சத்தில் உள்ளது எனலாம். இதன் காரணமாக பெரும்பாலான முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்கள் லாபத்தை வெளியே எடுத்துள்ளனர். 1999ம் ஆண்டுக்கு பிறகு தேர்தல் முடிவுகள் வந்த நாட்களில் பங்குச்சந்தை இறக்கத்தில் முடிந்தது இதுவே முதன்முறை.

 

தேர்தல் முடிவு நாட்கள் என எடுத்து கொள்ளும் போது, 1999ம் ஆண்டு சென்செக்ஸ் 6 சதவீதமும், 2004ம் ஆண்டில் 0.77 சதவீதமும், 2009ம் வருடம் திரு. மன்மோகன் சிங் இரண்டாவது முறையாக பிரதமராக பதவிக்கு வந்த நிலையில் 17 சதவீதமும் மற்றும் கடந்த 2014ம் வருடத்தில் திரு. நரேந்திர மோடி தலைமையின் போது, சென்செக்ஸ் 0.90 சதவீதமும் ஏற்றம் கண்டது. கடந்த கால ஏற்றங்களுக்கு முன்பு, இந்திய பங்குச்சந்தை அதிக இறக்கத்தில் காணப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 

ஆனால் தற்போதைய இறக்கம், சந்தை உச்சத்தில் உள்ளவற்றை தான் வெளிக்காட்டுகிறது. இது போக மற்ற உலகளாவிய காரணிகளும்(Global Factors) தற்போது சந்தையை நகர்த்த உள்ளன. புதிய அரசு இரண்டாவது முறையாக வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றிருந்தாலும், பொருளாதார ரீதியாக பல சவால்கள் வரும் காலத்தில் காத்திருக்கின்றன.

 

நிப்டி(Nifty50) மற்றும் சென்செக்ஸ்(Sensex) குறியீடுகள் தற்போது 28-30 என்ற அளவில் வர்த்தகமாகி கொண்டிருக்கின்றன. பெரு நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் லாபம் அடைந்தாலும், மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்கள் இன்னும் இறக்கத்திலிருந்து மீளவில்லை எனலாம். தேர்தல் முடிவுகளுக்கு பின்பு, வேலைவாய்ப்பு புள்ளிகள்(Unemployment rate), வங்கிகளின் வாராக்கடன், பாரத ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை(RBI Policy) மற்றும் வட்டி விகித மாற்றங்கள் அடுத்த சில மாதங்களுக்கு சந்தையை நகர்த்தும்.

 

மேலும் அமெரிக்க-சீன வர்த்தக போர்(Trade War), சீன-இந்திய நாடுகளுக்கிடையே ஏற்பட போகும் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள், கச்சா எண்ணெய்,  ஈரான் எல்லையில் நிலவும் பதற்றம் மற்றும் அமெரிக்காவின் சமீபத்திய பொருளாதார கொள்கைகள், வாகன துறையின் விற்பனை மற்றும் வருவாய் ஆகியவை இந்திய பங்குச்சந்தையை நகர்த்தும் முக்கிய காரணிகளாகும். பிரிட்டனின் பிரெக்ஸிட்(Brexit) நிலவரமும் இன்னும் தெளிவான முடிவை எட்டவில்லை. இதுவும் நம் நாட்டின் பங்குச்சந்தையை சற்று பாதிக்கும் காரணிகளாக சொல்லலாம்.

 

நாட்டில் உள்ள நிதி பற்றாக்குறை(Fiscal Deficit) மற்றும் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க அரசு எடுக்க போகும் நடவடிக்கைகள் முதலீட்டாளர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. விவசாயம் சார்ந்த வளர்ச்சியில் அரசின் பங்கு எவ்வாறு இருக்கும் என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.

 

தற்போதைய சந்தை மதிப்பளவில்(PE), முதலீட்டாளர்கள் நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து அதன் அடிப்படை பகுப்பாய்வுகளை(Fundamental analysis) ஆராய்ந்து சிறுகச்சிறுக முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். வரும் வாரங்களில் சந்தை சிறிய இறக்கத்தை சந்திப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்பதால், அதனை கருத்தில் கொண்டு முதலீடு செய்வதே சிறந்தது.   

 

பங்கு சந்தை பகுப்பாய்வு – காரணிகள் ( Fundamental Analysis – Factors)

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.