முதலீட்டு வருவாயை இழக்கும் கடன் பரஸ்பர நிதித்திட்டங்கள் – முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ?

முதலீட்டு வருவாயை இழக்கும் கடன் பரஸ்பர நிதித்திட்டங்கள் – முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ?

DHFL Defaults on payment – Precautions for the Mutual Fund Investors

 

ஐ.எல்.எப்.எஸ்.(IL & FS) நிறுவனத்தை அடுத்து சமீபத்தில் திவான் ஹவுசிங் பைனான்ஸ்(DHFL) நிறுவனத்தின் தர மதிப்பீடு குறைக்கப்பட்டது. இதனால் பரஸ்பர நிதிகளில் கடன் திட்டங்களில் செய்யப்பட்ட முதலீட்டுக்கான வருவாய் சிறிய இறக்கத்தை கண்டிருந்தது. பெரும்பாலான பரஸ்பர நிதி நிறுவனங்கள் திவான் ஹவுசிங் பங்கை தங்களது கடன் திட்டங்களில் கொண்டுள்ளதால், ஏறக்குறைய அனைத்து கடன் திட்டங்களும் கடந்த சில நாட்களாக முதலீட்டு வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்களிடையே மியூச்சுவல் பண்டு திட்டங்கள்(Mutual Funds) பற்றிய ஐயங்களை ஏற்படுத்தியுள்ளன.
முன்னர் ஐ.எல்.எப்.எஸ். நிறுவனம் தான் பெற்ற முதலீட்டிற்கு சரியான வட்டி வருவாயை கொடுக்க முடியாமலும், முதிர்வு பணத்தை செலுத்த முடியாமல் போக தர மதிப்பீட்டு(Rating Agencies) நிறுவனங்கள், இந்நிறுவனத்தின் மதிப்பீட்டை குறைத்தன.  இதன் வெளிப்பாடு பெரும்பாலான பரஸ்பர நிதித்திட்டங்களில் தென்பட்டது. இதற்கு அடுத்த படியாக எஸ்ஸல் குழுமத்தின்(Essel) ஜீ நிறுவனமும் இதே மாதிரியான பிரச்சனையை சந்தித்தது. ஜீ(Zee Entertainment) நிறுவனத்தின் பங்கு ஒரே நாளில் 25 சதவீதத்திற்கும் மேலாக சந்தையில் இறக்கத்தை கண்டது.

 

பங்கு சார்ந்த பரஸ்பர நிதித்திட்டங்களில் தான் ரிஸ்க் தன்மை அதிகம் உள்ளதென்றால், கடன் திட்டங்களிலும்(Debt Mutual Funds) வருவாய் இழப்பு சமீபத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது புதிய முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக எந்தவொரு முதலீட்டு சாதனமும் குறிப்பிட்ட ரிஸ்க் தன்மையை கொண்டவையே. நாம் முதலீடு செய்யும் வங்கி வைப்பு நிதிகளிலும் இந்த ரிஸ்க் தன்மை பொதுவாக உள்ளது. வங்கியில் நாம் பல லட்ச ரூபாயை சேமித்து வைத்திருந்தாலும், நமக்கான பாதுகாப்பு அம்சம் ஒரு லட்ச ரூபாய் வரை மட்டுமே.

 

இதற்காக நாம் வங்கியில் நமது சேமிப்பையோ அல்லது முதலீட்டையோ மேற்கொள்ளாமல் இருக்க போவதில்லை. நமக்கு தேவையான சரியான நிதி இலக்குகளை(Financial Goals) நிர்ணயித்து கொண்டு, அதற்கு தேவையான திட்டங்களை தேர்ந்தெடுப்பதே நமக்கான முதலீட்டு கடமையாகும். ரிஸ்க் தன்மையை பரவலாக்குவதும்(Diversification) நமது பண்பாக இருந்திருத்தல் வேண்டும். தங்கத்தில் முதலீடு பெரிய ஏற்ற-இறக்கத்தை சந்திக்காவிட்டாலும், தங்க ஆபரணங்கள் எப்போதும் ரிஸ்க் அதிகம் கொண்டவை. இருப்பினும், நாம் நமது குடும்பத்தின் விருப்பத்தேவைக்காக வாங்க தான் செய்கிறோம்.

 

சமீபத்தில் திவான் ஹவுசிங்(Dewan Housing) நிறுவனம் பல பரஸ்பர நிதித்திட்டங்களின் மூலம் பெற்ற கடனுக்கான வருவாயை முதலீட்டாளர்களுக்கு திரும்ப செலுத்த முடியாமல் திணறி வருகின்றன. இதனால் மியூச்சுவல் பண்டின் கடன் திட்டங்கள் வருவாய் இழப்பை கொண்டுள்ளன. இந்த பிரச்னை தற்காலிகமானது தான், எனினும் ஒரு முதலீட்டாளராக நமது முதலீட்டை பரவலாக்கம் செய்வது மற்றும் நீண்ட கால தேவையை சரியாக திட்டமிடுவதன் மூலம் நாம் நமக்கான மூலதன ஆதாயத்தை சரியாக பெறலாம்.

 

திவான் ஹவுசிங் நிறுவனத்தில் எல்.ஐ.சி.(LIC India) நிறுவனம், அரசு மற்றும் தனியார் நிறுவன ஓய்வூதிய திட்டங்களின்(Pension Funds) பங்கு அதிகமுள்ளதை நாம் கவனிக்க வேண்டும். தொழிலாளர்களின் பி.எப்.(PF) தொகை மற்றும் பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பும் திவான் ஹவுசிங் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. திவான் ஹவுசிங் நிறுவனத்தின் சார்பிலும், தான் செலுத்த வேண்டிய தொகையை அடுத்த ஒரு வாரத்தில் முழுவதுமாக செலுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

தற்போதைய நிலையில், முதலீட்டாளர்கள் எந்தவொரு முதலீடு திட்டத்தினை தேர்ந்தெடுக்கும் போதும், முதலீட்டு ஆவணங்களை சரியாக புரிந்து கொண்டு, ரிஸ்க் தன்மையை(Risk Management) ஆராய்ந்து விட்டு முதலீடு செய்வது சிறந்தது. பொன்சி(Ponzi) திட்டங்களில் தங்களது முதலீட்டை மேற்கொள்ளாமல், பல்வேறு முதலீட்டு சாதனங்களை பற்றிய அடிப்படை சிந்தனையை கற்று கொள்வது நலன் பயக்கும். முதலீடு சார்ந்த விஷயங்கள் நமக்கு புரியாத நிலையில், தகுந்த நிதி ஆலோசகர்களின் உதவியை பெறலாம்.

 

வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் சமீப காலமாக நிதி சார்ந்த பிரச்னைகளையும், வருவாய் இழப்பையும் சந்தித்து கொண்டிருக்கும் இவ்வேளையில் மத்திய அரசு மற்றும் பாரத ரிசர்வ் வங்கி, செபியின்(RBI, SEBI) சார்பிலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் முதலீட்டாளர்களிடம் வரவேற்பை பெறும்.

 

அதிக வருமானத்தை பெற வேண்டும் என்பதை கடந்து, முதலீட்டை பற்றிய சரியான நிதிக்கல்வி மற்றும் ரிஸ்க் நிர்வாகத்தை கையாளுவதே தற்போது அவசியம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.