கிரெடிட் கார்டு – நல்லதோர் வீணை செய்தே – சாதகங்களும், பாதகங்களும்

கிரெடிட் கார்டு – நல்லதோர் வீணை செய்தே – சாதகங்களும், பாதகங்களும்

Advantages and Disadvantages of Using Credit Cards

இன்றைய காலத்தில், நம்மிடம் ஒருவர் அவசர தேவைக்காக பணம் கேட்டிருந்தால் நான் ஏன் இவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு  ஏற்படுவதுண்டு. மற்றவர்களுக்கு உதவிட வேண்டுமா என்ற ஐயம் உள்ள நமக்கு கிரெடிட் கார்டு என்ற பற்றட்டை (கடன் அட்டை) வாங்குவதில் எப்போதும் ஆர்வம் உள்ளது.
நிதி சார்ந்த சில விஷயங்களில் நாம் கவனமாக இருந்து வருகிறோம் என நினைத்தாலும், நமக்கு தேவையில்லாத நிதி சாதனங்களை தேர்ந்தெடுத்து வருவதுண்டு. போதுமான இன்சூரன்ஸ் தொகையை(Term Insurance) நமக்கு எடுத்து கொள்ளாமல், 5 லிருந்து 10 எண்டோவ்மென்ட் மற்றும் மணிபேக் பாலிசிகளை(Endowment & Moneyback Policies) எடுத்து விட்டு, நான் நிறைவான காப்பீட்டை பெற்றுள்ளேன் என எண்ணுவது. அதிகப்படியான ஆடம்பர பொருட்களை வாங்கி குவித்து விட்டு, கடன்களை குறைப்பதில் அலட்சியம் காட்டுவது. இது போன்ற நிலை தான் கிரெடிட் கார்டு என்று சொல்லப்படும் கடன் அட்டை(Credit Card) வாங்குவதிலும்.

 

இன்று மாத சம்பளம் வாங்கும் பெரும்பாலோருக்கு கிரெடிட் கார்டு வாங்குவது என்பது அத்தியாவசிய சாதனமாக மாறி விட்டது. தங்களுக்கு இது தேவை தானா என சற்றும் யோசிக்காமல், கிரெடிட் கார்டு வைத்திருந்தால் நமக்கும் இந்த சமுதாயத்தில் மதிப்பு அதிகரிக்கும் என்று பலர் நினைத்து நிதி பொறுப்பை சுமந்து வருகின்றனர். ஏற்கனவே சர்வதேச புள்ளிவிவரங்கள் நுகர்வோர்(Consumer Behavior) பயன்பாடுகளில் நம் நாட்டை எச்சரித்து வருகின்றன. இன்று நம் நாட்டில் நுகர்வோர் சார்ந்த பல பொருட்களும், சேவைகளும் வந்து விட்டன. இன்னும் பலவகைகள் அயல்நாட்டிலிருந்து இறக்குமதியாக உள்ளன. நாம் அவற்றை புத்திசாலித்தனமாக தொழில்முறையாக மாற்றினால் நல்லது. மாறாக, நுகர்தலை மட்டுமே கொண்டிருந்தால் நமக்கு கடனும், வியாபாரம் செய்பவருக்கு லாபமும் கிடைக்கும்.

 

கிரெடிட் கார்டுகள் என்று சொல்லப்படும் கடன் அட்டைகள் இன்றளவில் மிக எளிமையாக பயன்படுத்த முடியும் நிதி சாதனமாக இருக்கிறது. இருப்பினும், கிரெடிட் கார்டுகளை சரியாக பயன்படுத்தாவிட்டால் அது உங்களை பெரும் நிதி சிக்கலில்(Debt Trap) மாட்டிக்கொள்ள செய்யும். நம் நாட்டில் தொழில் புரிபவர்களிடம் பெரும்பாலும் கிரெடிட் கார்டுகள் இருப்பதில்லை. மாத வருமானம் பெறுபவர்களே இதனை அதிகமாக பயன்படுத்தி வருவது எதிர்மறையான விஷயம்(Negative).

 

கிரெடிட் கார்டு என்பது ஒரு நிதி நிறுவனத்தால் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் அட்டையாகும். இதனை வாடிக்கையாளர்கள் பெற வேண்டும் என்ற கட்டாயமில்லை. பொதுவாக விற்பனையின் அடிப்படையில், இது வாடிக்கையாளர்களுக்கு கடன் வாங்குவதற்கான ஒரு விருப்ப தேர்வை கொடுக்கிறது. குறுகிய கால நிதி(Short term Finance) தேவைக்கு அல்லது கடனாக இந்த கிரெடிட் கார்டை ஒருவர் பயன்படுத்தலாம். ஒரு வாரத்திலிருந்து ஒரு மாதம் வரையிலான காலவரையறை இந்த கடன் அட்டையின் மூலம் பெற்ற கடனை திரும்ப செலுத்துவதற்கு கொடுக்கப்படுகிறது. நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் உங்கள் கிரெடிட் கார்டு கடனை செலுத்தியிருந்தாலும், உங்கள் அட்டைக்கான பராமரிப்பு கட்டணம் உண்டு. கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த தவறினால், உங்களுக்கான வட்டி தொகை நாட்கணக்கில் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும். இந்த வட்டி தொகை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து பெறப்படும் அதிகபட்ச வட்டி விகிதம் ஆகும்.

 

பொதுவாக கடன்  அட்டையை நாம் எங்கும் பயன்படுத்தலாம். வெளிநாடுகளில் இதனை நாம் சிறப்பாக உபயோகிக்கலாம். உங்களுக்கான அவசர நிதி தேவை(Emergency Needs), எதிர்பாராத செலவுகள்(Unexpected), வேலையிழப்பு(Loss of a Job) போன்ற நேரங்களில் இந்த கடன் அட்டைகள் உதவும். அதே வேளையில், பெற்ற தொகையை நாம் திரும்ப செலுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதால் அதற்கான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளும்(Credit Card Offers) ஏராளம். புள்ளிகளின் அடிப்படையிலும் கடன் அட்டை உள்ளவருக்கு சலுகைகள் கிடைக்கும். இன்னும் சில கடன் அட்டையில் நீங்கள் ஷாப்பிங் செய்யும் போது, உங்களுக்கான கேஷ் பேக் சலுகையும் வருவதுண்டு.

 

கிரெடிட் கார்டை சரியான முறையில் பயன்படுத்தும் போது, உங்களுக்கான கிரெடிட் மதிப்பீடும்(Credit Score) சரியாக இருக்கும். இதன் மூலம், நீங்கள் எதிர்காலத்தில் வங்கிகளில் கடன் வாங்கப்போகும் போது, இந்த கிரெடிட் மதிப்பீடுகள் உங்களுக்கு உதவலாம். தொழில்கள் மற்றும் சேவையில் தங்களுக்கான பண தேவை உள்ளவர்கள் சரியான அணுகுமுறையில் கடன் அட்டையை பயன்படுத்தலாம். தங்கள் தொழிலுக்கான ஆர்டர் கிடைத்தவுடன், தயாரிப்புக்கான முதலீடு இல்லையே என சிந்திக்க வேண்டாம். இந்த கிரெடிட் கார்டுகள் குறுகிய கால கடன் அளிப்பவராக உங்களுக்கு உதவும். ஆனால், நிகழ்காலத்தில் பெரும்பாலான தொழில் புரிபவர்கள் கிரெடிட் கார்டை சார்ந்து இருப்பதில்லை.

 

கிரெடிட் கார்டு பயன்பாட்டை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் வைத்திருக்கும் கடன் அட்டை இனி நமக்கு தேவையில்லை எனும் போது, அதனை நிறுவனங்களில் முறையாக ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில், பின்னாளில் கட்டணங்கள் உங்கள் வங்கிக்கணக்கில் பிடித்தம் செய்யப்படும். கிரெடிட் கார்டு என்னும் கடன் அட்டையை கொண்டிருக்கும் ஒருவர் செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இதனால் சில நுகர்வோர்கள் தாங்கள் வாங்கும் வருமானத்திற்கு அதிகமாக செலவழிக்கும் பழக்கத்திற்கு மாறுகின்றனர்.

 

அதிகப்படியான கிரெடிட் கார்டுகளை வாங்கும் போது, அதிகமான தள்ளுபடிகள் கிடைக்கும் என்ற எண்ணம், உண்மையில் உங்களை கடன் சுமையில் தள்ளும்.  சேமிப்பவரை விட, அதிகமாக செலவழிப்பவரையே பெரும்பாலான சமயங்களில் வங்கிகள் விரும்புகிறது..

 

செலவழிப்பவரை நிதி நிறுவனங்கள் வரவேற்கலாம், தங்களின் லாபத்திற்காக…

 

  வாழ்க வளமுடன்,

 

   நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.