முதலீட்டை தாமதப்படுத்துவதால் நிகழும் பாதகங்கள்

முதலீட்டை தாமதப்படுத்துவதால் நிகழும் பாதகங்கள்

The Cost of Delayed Investing – Disadvantages of invest later

 

கடந்த சனிக்கிழமை (26-01-2019) அன்று விருதுநகரில் நாணயம் விகடன் மற்றும் ஆதித்யா பிர்லா மியூச்சுவல் பண்ட் (Aditya Birla Mutual Fund – ABSL) நிறுவனத்தின் சார்பாக பரஸ்பர நிதிக்கான விழிப்புணர்வு(Mutual Fund Awareness) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முதலீட்டு ஆலோசகரும், செபி(SEBI) ஆலோசனை குழுவின் உறுப்பினருமான திரு. வ.நாகப்பன் மற்றும் ஆதித்யா பிர்லா மியூச்சுவல் பண்டின் பிராந்திய தலைவருமான திரு.சுவாமிநாதன் கருணாநிதி அவர்களும் கலந்து கொண்டனர்.
நிதி சார்ந்த அடிப்படை அறிவை(Financial Education) பெறுவது பற்றி திரு. சுவாமிநாதன் கருணாநிதி அவர்கள் பேசும் போது, ‘ நமது குடும்பத்தின் நலனை காக்கும் அனைத்து விஷயங்களிலும் நாம் கூடி பொதுவாக செயல்படும் நிலையில், முதலீட்டு விஷயங்களிலும் குடும்பத்துடன் ஆலோசிக்க வேண்டியது அவசியம் என்றார். நாம் சம்பாதித்த பணம் நமக்கான வேலையை செய்ய நாம் கட்டளையிட வேண்டும். அதற்கு வெறும் சேமிப்பு மட்டும் போதாது, முதலீட்டையும் கற்று கொண்டு அதனை செயல்படுத்த வேண்டும்.

 

சரியான நிதி திட்டமிடல்(Financial Planning) மற்றும் இளமையில் முதலீடு(Invest Early) என்ற இரு காரணிகள் மட்டுமே நம்மையும், நம் குடும்பத்தையும் நிதி சிக்கலில் இருந்து பாதுகாக்கும். நாம் பெறும் வருமானத்தை கொண்டு மட்டும் நாம் எதையும் சாதித்து விட முடியாது. நமக்கான நிதி இலக்கை(Goals) அடைய நாம் சிறிதளவு பணத்தையும், அதற்கான காலத்தையும் கொடுக்க வேண்டும். பணக்காரர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்து அதற்கான நேரத்தையும் கொடுக்க அனுமதிக்கின்றனர். ஆனால் நடுத்தர மக்களும், ஏழைகளும் பணத்தை குறுகிய காலத்தில் செலவழிக்க பழகுவது ஆரோக்கியமான விஷயமல்ல.

 

இளமையில் முதலீடு செய்வதால் நாம் பெறும் பயனையும், முதலீட்டில் தாமதத்தை ஏற்படுத்துவதால் நிகழும் பண இழப்புகளையும் நாம் அறிந்து கொள்வது நன்று. ராம்(Ram) என்ற இளைஞர் தனது 25 வயது முதல் மாதம் ரூ. 1000/- ஐ ஒரு முதலீட்டு சாதனத்தில் முதலீடு செய்கிறார் என வைத்து கொள்வோம். தனது ஓய்வு காலமான 60 வயது வரை, அதாவது சுமார் 35 வருடங்களுக்கு அவர் மாதாமாதம் முதலீடு செய்து வருகிறார். ராமுக்கு கிடைக்கும் வருமான வட்டி விகிதம் 12 சதவீதம் எனில், முதிர்வில் அவருக்கு கிடைக்கக்கூடிய தொகை ரூ. 64 லட்சம்.

 

ராமின் நண்பரான குமார்(Kumar) தனது 25 வயதில் முதலீடு செய்ய விருப்பமில்லாமல், முதலீட்டை 30வது வயதில் தொடங்குகிறார். இவரும் மாதாமாதம் 1000 ரூபாயை 12 % வட்டியில் முதலீடு செய்து வருகிறார். குமாரின் ஓய்வு காலமான 60 வயதில் அவர் பெறும் முதிர்வு தொகை 35 லட்ச ரூபாயாக உள்ளது. இவரின் மொத்த முதலீட்டு காலம் 30 வருடங்கள். அதாவது ராமை விட 5 வருடங்கள் மட்டுமே குறைவு. இருவருக்குமிடையே முதிர்வு தொகையில் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி ?

 

கூட்டு வட்டியின்(Power of Compounding) மகிமை தான்.

 

ராம் தனது 55 வயதில் (30 வருடங்கள்) மாதாமாதம் முதலீடு செய்யும் ரூ. 1000/- ஐ நிறுத்தினாலும், 35 வருட முடிவில் அவருக்கு கிடைக்கும் தொகை 64 லட்ச ரூபாயாகும். இது தான் இளமையின் முதலீட்டு ரகசியமும்(Secret of Young Investing), கூட்டுவட்டி பலனும்(Compound Interest). இருவருக்கும் இடையே முதிர்வு தொகை மட்டுமே வித்தியாசம் அல்ல, மாறாக குமாருக்கு ரூ. 29 லட்சம் பண இழப்பு என்று தான் சொல்ல வேண்டும். உதாரணமாக ராம் தனது முதலீட்டின் முதிர்வு தொகையை கொண்டு, தனக்கான நிதி இலக்கினை பூர்த்தி செய்யலாம். அதே நேரத்தில் குமாருக்கு அது போதுமான தொகையாக இருந்திராது.

 

இளமையில் நீங்கள் முதலீடு செய்யவில்லை என்றால், உங்களுக்கான பின்வரும் பாதகங்கள் (Disadvantages of Investing Later):

 

  • நிதி இலக்கை அடைவதில் சிக்கல் (அ) தாமதம்.
  • தாமதமாக முதலீட்டை துவங்கும் போது, அதிகப்படியான தொகையை மாதாமாதம் முதலீட்டிற்கு ஒதுக்கும் நிலை.
  • முதுமையில் தொடர் முதலீட்டிற்கான வாய்ப்பு குறைவு.
  • கூட்டு வட்டியின் நீண்டகால பலனை தவற விடுதல்
  • நிதி சுதந்திரத்தை(Financial Independence) பெறாமை
  • முதலீட்டின் மீதான வட்டி வருமானம் குறையும் வாய்ப்பு.

 

பின்னர் அவர் பேசும் போது, ‘ ஒவ்வொரு முதலீட்டு சாதனத்திலும் நாம் பார்க்க வேண்டிய முக்கிய காரணிகளாக முதலீட்டு பாதுகாப்பு(Safety), நீர்மை நிறை (பணத்தை எளிதாக பெறுதல் -Liquidity), சிறந்த வருமானம்(Good returns), வரி(Tax Efficiency) ஆகியவை ‘ என்கிறார்.

( Read this post after the advertisement… )

 அதன் பின் பேசிய திரு. நாகப்பன் அவர்கள், ‘ ஒரு முதலீட்டை தேர்ந்தெடுக்கும் முன், அதற்கான கல்வியை நாம் தான் பெற வேண்டும். திருமணம், கல்வியில் நமக்கு இருக்கும் அக்கறை முதலீட்டு திட்டத்தை(Investment Products) தேர்ந்தெடுப்பதிலும் இருக்க வேண்டும். நாம் சம்பாதிக்கும் மாத வருமானம் போக, இரண்டாம் வருமான வாய்ப்பை(Secondary Income) நாம் எப்போதும் தேடுவதற்கு கற்று கொள்ள வேண்டும்.

 

ஒரு திட்டத்தில் முதலீடு செய்யும் போது அதன் ரிஸ்க்கை(Risk) அறிவதோடு, நமக்கான ரிஸ்க்கை குறைக்க டேர்ம் இன்சூரன்ஸ்(Term Insurance), மெடிகிளைம் பாலிசி(Mediclaim) போன்றவற்றை முன்னரே எடுத்து கொள்வது அவசியம். பணம் சம்பாதிப்பது மட்டுமே நம்மை பணக்காரர்களாக உருவாக்காது, மாறாக நமது நிதி தேவைகளை சரியாக திட்டமிட்டு அதன் சார்ந்து நாம் பழக்கப்படும் போதே, நிதி சுதந்திரம் அடையலாம். ‘ என்றார்.

 

தேவைக்கு மேல் ஒரு ரூபாய் சம்பாதிப்பவனே உண்மையில் பணக்காரன் – வ. நாகப்பன்

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.