பணத்தை செலுத்த தவறிய நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் இடம் பெறும் – திவால் சட்டத்தில் புதிய மாற்றம்

பணத்தை செலுத்த தவறிய நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் இடம் பெறும் – திவால் சட்டத்தில் புதிய மாற்றம்  

Failure to Pay is on the Blacklist – Changes in IBC Law

 

கம்பெனிகளுக்கான புதிய திவால் சட்டம் கடந்த 2015ம் வருடத்தில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இச்சட்டம்(Insolvency and Bankruptcy Code) 2016ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதியில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. புதிய திவால் சட்டம்(IBC) ஏற்கனவே அமலில் இருக்கும் நிறுவனங்களை சார்ந்த சட்டத்தை ஒருங்கிணைக்கவும், நொடித்து போன மற்றும் திவால் நிலையில் உள்ள நிறுவனங்களில் தீர்வை காணவும் ஒற்றை கட்டமைப்பை உருவாக்க துணைபுரியும்.
திவால் சட்டத்தின் மூலம் ஒரு நிறுவனத்தின் கடன் பிரச்னை 270 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும். தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின்(NCLT) மூலம் கடன் பெற்ற நிறுவனத்திடம் இருந்து கடன் தொகைகள் திரும்ப வசூலிக்கப்பட்டு வருவதாக சொல்லப்பட்டிருந்தது. திவால் சட்டம் மூலம் கடந்த ஆண்டு சுமார் 80,000 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் கூறப்பட்டுள்ளது.

 

திவால் நிலையில் தத்தளித்த நிறுவனங்களை மீட்க ஏற்கனவே பெரு நிறுவனங்கள் அதற்கான ஏலத்தில் பங்குபெற்று குறிப்பிட்ட தொகையை அளிப்பதாக கூறியுள்ளன. இந்நிலையில் திவால் சட்ட நடைமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது திவால் நிலையில் உள்ள நிறுவனங்களை மீட்கும் பெரு நிறுவனங்கள் அதற்கான தொகையை உரிய நேரத்தில் செலுத்த வேண்டுமெனவும், அவ்வாறு செலுத்த தவறிய நிறுவனங்கள் அரசின் கருப்பு பட்டியலில் இடம் பெறும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

பொதுவாக திவால் நிலையில் உள்ள நிறுவனங்களின் பிரச்சனை 180 நாட்களுக்குள் தீர்வு செய்யப்பட வேண்டும். இருப்பினும், இந்த சட்டத்தில் கூடுதலாக 90 நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. வங்கிகளின் பெரும்பாலான வாராக்கடன் நிலைக்கு(Bad Loans), இந்த திவாலான நிறுவனங்களே பொறுப்பாகும் போது, அந்த பிரச்சனைகளை களைந்து கடன் தொகையை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

கடந்த 2018ம் வருடத்தின் இறுதி நிலவர படி, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின்(National Company Law Tribunal) கீழ் 898 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவற்றில் 275 வழக்குகள் மட்டும் 270 நாட்களை கடந்தும் தீர்வு காணப்படவில்லை. மற்ற 166 வழக்குகள் 180 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றன.

 

திவால் சட்டத்தின் மூலம் கடனில் தத்தளிக்கும் நிறுவனங்களை மீட்டெடுப்பதும், வங்கிகளின் வாராக்கடனை குறைக்கவும் அரசு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. இம்முறை மீட்கும் பெரு நிறுவனங்கள் தொகையை செலுத்த தவறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய நிறுவனங்களின் கோரிக்கைகள் எதிர்காலத்தில் நிராகரிக்கப்படும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.