ஆட்டோமொபைல் துறை விற்பனை வளர்ச்சி குறைகிறதா ?

ஆட்டோமொபைல் துறை விற்பனை வளர்ச்சி குறைகிறதா ?

Does Automobile Sector Sales growth declining ?

 

2019ம் வருடத்தின் இரண்டாவது நாளான (02-01-2019) புதன் கிழமை அன்று  பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஐஷர் மோட்டார்ஸ் (Eicher Motors) நிறுவன பங்கு விலை 9 சதவீத அளவிற்கு வீழ்ச்சி கண்டது. கடந்த டிசம்பர் மாத காலத்தில் இந்த நிறுவனத்தின் ராயல் என்பீல்ட் (Royal Enfield) வாகன விற்பனை அளவு குறைந்ததால், அதன் தாக்கம் பங்குகளின் விலையிலும் தெரிந்தது. புதன் கிழமை வர்த்தகத்தில் ஆட்டோமொபைல் துறை மட்டும் 3 சதவீத இறக்கத்தில் முடிந்தது.

 

கடந்த சில காலங்களாக ஆட்டோமொபைல் நிறுவனங்களின் (Automobile Sector) வாகன விற்பனை வெகுவாக குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது. டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா (Mahindra & Mahindra), ஐஷர் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டார் ஆகிய நிறுவனங்களின் வாகன விற்பனை சந்தை எதிர்பார்ப்பை விட குறைந்த அளவிலே விற்பனையாகி உள்ளது. மும்பை பங்குசந்தையில் ஆட்டோ குறியீடு (BSE Auto) கடந்த ஒரு வருடத்தில் 24 சதவீதம் இறங்கியுள்ளது.

 

வாகனங்களுக்கான அரசின் புதிய வரைமுறைகள், நிறுவனங்களிடையே உள்ள போட்டி, கடந்த கால கச்சா எண்ணெய் மாற்றம் மற்றும் வரி போன்றவை வாகன விற்பனை வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இரு சக்கர வாகனங்களின் பிரியமான ராயல் என்பீல்ட் விற்பனை வளர்ச்சி கடந்த சில காலாண்டுகளாக பின்னடைவை சந்தித்துள்ளன. இதற்கு காரணமாக சொல்லப்படுவது ஜாவாவின் (Jawa Motor Cycle) வருகை தான்.

( Read this post after the advertisement… )

 ஐஷர் மோட்டார்ஸ் (Eicher Motors) நிறுவனத்தின் ராயல் என்பீல்ட் விற்பனை கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 14 சதவீத வீழ்ச்சியை கண்டுள்ளது. ஐஷர் நிறுவனத்தின் மற்ற வாகனங்கள் 21 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ள போதும், ராயல் என்பீல்ட் பிராண்டின் மதிப்பு குறைய உள்ளதா என்ற ஐயமும் சந்தையில் நிலவுகிறது. 350 சி.சி. க்கு மேற்பட்ட வகைகளில் ராயல் என்பீல்ட் விற்பனை வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. ஆனால் 350 சி.சி. க்கு கீழ் உள்ள வாகனங்களில் ஜாவா (Jawa – Mahindra) சவாலாக உள்ளது. இன்சூரன்ஸ் மற்றும் வாகனத்தில் புகுத்தப்பட்ட அம்சங்கள் ஆகியவை ராயல் என்பீல்ட் விலையை சற்று அதிகரித்தது. அதே நேரத்தில் ராயல் என்பீல்ட் வாகனத்திற்கு மாற்றாக தற்போது ஜாவா இரு சக்கர வாகனம் பார்க்கப்படுகிறது.

 

ராயல் என்பீல்ட் வாகன விற்பனை கடந்த டிசம்பர் மாதத்தில் 56,000 வாகனங்களாக இருந்தது. இதே காலத்தில் இதற்கு முந்தைய (2017) வருடத்தில் 65,300 வாகனங்களாக விற்பனையானது கவனிக்கத்தக்கது. இதே போன்று மஹிந்திரா நிறுவனத்தின் டிராக்டர்(Tractors) விற்பனை வளர்ச்சியும் குறைந்துள்ளது. டிசம்பர் மாத காலத்தில் 16,510 டிராக்டர்கள் விற்பனையாக இருப்பினும், இதே காலத்தில் முந்தைய வருடத்தில் 16,855 வாகனங்களாக இருந்தது.

 

ஜாகுவார் (JLR) வருகைக்கு பின் டாடா மோட்டார்ஸின் வருவாய் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. உலகின் மிகப்பெரிய வாகன சந்தையை கொண்டிருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த இரண்டு காலாண்டு முடிவுகளில் நஷ்டத்தை கண்டிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் போன்ற புதுமையான விஷயங்கள் வாகனங்களில் வந்து கொண்டிருக்கும் காலம் இது. வாகன துறைகளின் வளர்ச்சியும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முன்னிறுத்தும் காரணியாகும். தற்போது ஏற்பட்டுள்ள இந்த சுணக்கம் வருங்காலத்தில் களையப்படலாம் என நாம் எதிர்பார்க்கலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.