வணிகத்தை ஊக்குவிக்க ஸ்டார்ட் அப் மற்றும் சிறிய நிறுவனங்களுக்கு வரி சலுகை

வணிகத்தை ஊக்குவிக்க ஸ்டார்ட் அப் மற்றும் சிறிய நிறுவனங்களுக்கு வரி சலுகை

Angel Tax exemption for Startups and Small companies to promote business

 

பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத சிறு நிறுவனங்கள் தங்களின் முதலீட்டை ஏஞ்சல் முதலீட்டின்(Angel Investing) மூலம் பெறுவதற்கு ஏஞ்சல் வரி என்ற மூலதன வரி உண்டு. இந்த வரி கடந்த 2012ம் வருடத்தில் அப்போதைய நிதி அமைச்சர் திரு. பிரணாப் முகர்ஜி அவர்களால் கொண்டு வரப்பட்டது. சிறு மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஏஞ்சல் முதலீட்டாளர்கள்(Angel Investors) முதலீடு செய்வர். நிதி மோசடிகளை தடுக்கவும், முதலீடு செய்பவர்களை கண்காணிக்கவும் இந்த ஏஞ்சல் வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
மத்திய அரசு நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், ‘ நாட்டில் வணிகத்தை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் சிறு மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அரசு சலுகை கொடுக்க முன்வந்துள்ளது. இதன் படி சிறிய நிறுவனங்களுக்கு வரி சலுகை(Exempt from Angel Tax) அளிக்கப்படுகிறது. நிறுவனங்களால் பெறப்படும் முதலீடு ரூ. 25 கோடிக்கு குறைவாக இருக்கும்பட்சத்தில், வரி சலுகை தரப்படும். இதற்கு முன்னர் இதன் வரம்பு 10 கோடி ரூபாய் வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

நடப்பு ஆட்சியில் மத்திய அரசு தொழில் நிறுவனங்களின் சார்பில் எந்த சலுகையையும் தரவில்லை என சொல்லப்படும் நிலையில், தற்போது இந்த அறிவிப்பு சிறு மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு(Startup Companies) மகிழ்ச்சியை கொடுத்துள்ளது எனலாம். கடந்த சில காலங்களாக தொழில்களில் மந்த நிலையும், வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்களில் தொய்வும் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது உலகளாவிய பொருளாதார காரணிகள் மற்றும் உள்நாட்டில் புதிய கொள்கைகளின் வருகை ஆகியவையாக உள்ளது.

 

நேற்று அரசு அறிவித்திருக்கும் வரி சலுகையின் படி, 25 கோடி ரூபாய் வரை முதலீட்டை பெற்ற சிறு நிறுவனங்கள் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு ஆணையத்தில்(Department for Promotion of Industry and Internal Trade) பதிவு செய்திருப்பின், அவர்களுக்கு முழு வரிச்சலுகையும் கிடைக்கும். இதன் மூலம் நாட்டில் 30,000 க்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பயனடைகின்றன. இனி வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் பெரு நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மூலம் சிறு நிறுவனங்களுக்கு முதலீடு பெறுவதில் சிக்கல் இருக்காது என கூறப்படுகிறது.

 

புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்கள் முதல் மூன்று ஆண்டுகளுக்கு வரி செலுத்த தேவையில்லை. புதிய விதிமுறைகளின் படி, பதிவு பெற்ற 16,000 நிறுவனங்கள் பலனை பெறும். இந்நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 3 லட்சம். குடியிருப்பு கட்டிடங்கள், நகைகள், பங்குகள், பத்திரங்கள் மற்றும் ஆடம்பர கார்களின் மூலம் நிதி திரட்டப்பட்ட நிறுவனங்களின் உரிமை தடை செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.